நம்முடைய வாழ்க்கையில் நமக்கு என்ன நடக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ? அதை ஈர்த்து நம்மிடம் கொடுக்கும் சக்தி நம் மனதிற்கு உண்டு. நாம் நினைக்கும் காரியத்தில் நம்பிக்கை வைத்தால் போதும். அதை இந்த பிரபஞ்சமே நிகழ்த்திக் கொடுக்கும். இருப்பினும், நாம் செய்ய வேண்டியது ஒன்றேயொன்று தான். நினைக்கும் காரியங்களை நல்லதாகவே நினைப்போம். நமக்கும் நல்லதே நடக்கும். இதைப் புரிந்துக் கொள்ள ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்.
ஒரு ஊரில் வாழ்ந்து வந்த ஏழை விவசாயி வயல் காட்டில் அவனது அன்றாட வேலைகளை முடித்துவிட்டு களைப்பாக வீட்டிற்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தான்.
அப்போது அவன் கண்களுக்கு ஒரு வினோதமான மரம் தென்படுகிறது. சிறிது நேரம் அந்த மரத்தடியில் ஓய்வெடுத்துவிட்டு வீட்டிற்கு செல்லலாம் என்று நினைக்கிறான். வேலை செய்த களைப்பில் அவனுக்கு மிகவும் தாகமாக இருந்ததால், ‘இப்போது குடிக்க சிறிது தண்ணீர் கிடைத்தால் எப்படியிருக்கும்?’ என்று நினைக்கிறான்.
உடனே அந்த மரத்தடியிலிருந்து தூய்மையான நீர் வருகிறது. அதை குடித்து தன் தாகத்தை போக்கிய விவசாயி. ‘இப்போது மட்டும் சாப்பிட கொஞ்சம் உணவு கிடைத்தால் எப்படியிருக்கும்?’ என்று யோசிக்கிறான். உடனே அவனுக்கு நிறைய உணவு கிடைக்கிறது. அதை போதுமான அளவு சாப்பிட்டு பசியாற்றுகிறான்.
இப்போதுதான் அந்த விவசாயிக்கு புரிகிறது. ‘அந்த மரம் சாதாரண மரமில்லை என்றும் அது ஒரு மந்திர மரம். நம் மனதில் என்ன நினைத்தாலும் அதை கொடுக்கும்’ என்றும் புரிந்துக்கொள்கிறான். ‘தன்னுடைய வறுமை நிலையை போக்க தனக்கு நிறைய வைரக்கற்கள் கிடைத்தால் நன்றாக இருக்குமே?’ என்று யோசிக்கிறான்.
உடனே அந்த மரம் விவசாயிக்கு நிறைய வைரக்கற்களை தருகிறது. இப்போது விவசாயிக்கு சந்தோஷத்தை அடக்கவே முடியவில்லை. ஏனெனில், அந்த கிராமத்திலேயே பெரிய பணக்காரன் அவன்தான். அப்போது அவன் காதுக்கு சில புலிகளின் உறுமும் சத்தம் கேட்கிறது. ‘இப்போது அந்த புலிகள் இங்கே வந்து நம்மை கொன்றுவிட்டால் என்ன செய்வது?’ என்று யோசிக்கிறான். இதைப் புரிந்துக் கொண்ட மரமும் அவன் நினைத்ததை அப்படியே நடத்துகிறது. கடைசியில், அந்த விவசாயி புலிகளிடம் கடிப்பட்டு இறந்து போகிறான்.
இந்தக் கதையில் வந்ததுபோலத்தான். நம் வாழ்க்கையில் நாம் நல்லதையே நினைத்தால் இந்த பிரபஞ்சம் நல்லதையே கொடுக்கும். கெட்டதை நினைத்தால் கெட்டதையே கொடுக்கும். எனவே, தேவையில்லாமல் கெட்டதை பற்றி யோசிக்காமல் நல்லதைப் பற்றி சிந்தித்து நன்றாக வாழுங்கள். நான் சொல்வது சரிதானே? முயற்சித்துப் பாருங்கள்.