Motivaton image
Motivaton imageImage credit - pixabay.com

எது வெற்றி தெரியுமா?

Published on

வெற்றி பெறுவது  என்பது வேறு. தோற்கடிப்பது என்பது வேறு. பிறரைத் தோற்கடிப்பது சுலபம். ஆனால் நாம் வெற்றி  பெறுவது என்பது கடினமான கார்யம். எத்தனை பேரை வேண்டுமானாலும் நீங்கள் முட்டாளாக்க முடியும். ஆனால் நீங்கள் அறிவாளி ஆவது சுலபமான கார்யம்  அல்ல.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் 10 வயதுப்பெண் தன் 35 வயது அப்பாவிடம்  ஒரு புதிர் போட்டாள். "அப்பா ஒரு குட்டிக் குரங்கு தனியா மரத்து மேல உட்கார்ந்திருக்கு. மரத்துக்குக் கீழே திடீர் வெள்ளம் வந்திடுச்சு அந்த குரங்குக்கு நீந்தத் தெரியாது எப்படி தப்பிக்கும்" என்று கேட்டாள்.

எனக்குத் தெரியலை நீயே சொல்லு என்றார் அப்பா.

உடனே அவள், இவ்வளவு பெரிய  குரங்குகான உனக்கே  தெரியல. எனக்கு எப்படித் தெரியும் என்று கூறி ஓடிவிட்டாள். அவளிடத்திலும் கேள்விக்கு பதில் இல்லை. அப்பாவை குரங்கு என்று கேலி செய்ய முட்டாளாக்க அரைமணி நேரம் செலவிட்டாள். இன்றைக்கு இந்த சின்னத்தனம்தான் எங்கும் நடக்கிறது. பிறரை வாய் மூடச் செய்வது, செயலிழக்கச்  செய்வது, தோற்றுப் போகச் செய்வது, முன்னேற விடாமல் செய்வது இப்படிப் பிறரைத் தோற்கடிப்பதையே வெற்றியாகக்  கருதுகிறார்கள். நாம் வெற்றி பெற்றால் நமக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். பிறரைத் தோற்கடித்தால்.  நாம் நிரந்தர எதிரியை ஏற்படுத்திக் கொள்கிறோம். நாம் யாரைத் தோற்கடித்தாலும் அவர் நம்மைத் தோற்கடிக்கவே தமது எஞ்சிய காலம் முழுவதையும் செலவிடுகிறார்.

ஒரு குழந்தையுடன் கடை வீதிக்குப் போகிறாள் அம்மா. அங்கு ஏதோ தின்பண்டம் வேண்டும் என குழந்தை அழுதது. வாங்கித் தராமல் பிடிவாதமாக அழைத்து வந்து விட்டாள். குழந்தை முகம் வாடிவிட்டது. அம்மாவுக்கு மனம் கேட்கவில்லை. மீண்டும் கடை வீதிக்குப்போய் குழந்தை கேட்ட தின்பண்டத்தை. வாங்கிக் கொடுக்கிறாள். சில குழந்தைகள் வம்பு செய்து தூக்கி எறியும். அம்மா கெஞ்சுவாள். தான் கேட்டவுடன்  வாங்கித் தராத அம்மாவை பழிவாங்கும் நோக்கில் தின்னாமல் துன்புறுத்தும் பிள்ளைகளும் உண்டு.

நீங்கள்  எந்த வகை? யோசித்ததுண்டா. கேட்டது கிடைப்பது வெற்றி. ஆனால் அந்த வெற்றியை அனுபவிக்க முடியாமல் அகங்காரத்தால் பிறரைத் தோற்கடிப்பவர் உண்டு. வளர்ந்த பிறகும் இந்த குணம் பலரை விடுவதில்லை. கணவனிடம் புடவை கேட்பார்கள். முதலில் மறுத்துப் பிறகு வாங்கிக் கொடுத்தால் கட்டமாட்டேன் என்று சிலர் பிடிவாதமாக மறுத்துவிடுவார்கள். அவனை மனம் போகச் செய்து மகிழ்ச்சி அடைவார்கள். நாம் நோக்கத்தில் தெளிவாக இருந்தால் இந்தத் தவறு நடக்காது. வாழக்கையில. வெற்றிதான் முக்கியம். பிறரைத் தோற்கடிப்பதில் என்ன நன்மை விளையப் போகிறது.

இதையும் படியுங்கள்:
கோபுரத்தில் ஏற்றும் கோமேதகத்தின் பலன்கள் பற்றித் தெரியுமா?
Motivaton image

இன்று அரசியல்வாதிகள் பிறரைத் தோற்கடிக்கவே பாராளுமன்றம் சட்டமன்றம் இவற்றைப் பயன் படுத்துகிறார்கள். அதனால் பகை வளர்கிறது. தேசம் வீணாகிறது. ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தாங்கள் வெற்றி பெறுவதற்காகப்  பயன்படுத்தினால் தேசம் வளர்ச்சி பெறும். பிறரைத் தோற்கடிப்பது வெற்றி அல்ல.

நாம் வெற்றி பெறுவதே வெற்றி என்ற துல்லியமான வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்.

logo
Kalki Online
kalkionline.com