
உங்களது தேவை என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? இதற்கான தெளிவான பதில் உங்களுக்குத் தெரிந்திருந்தால் அதுவே வெற்றிக்கான வழியை கண்டுபிடித்துவிடும்.
பல வருடங்களுக்கு முன் அரசாங்கப் பணி மிகுந்த மரியாதைக்குரியதாக இருந்தது. அப்போது படித்து முடித்துவிட்டு பெண் தேடுபவர்கள் அரசு வேலை என்றால் "கால் காசு என்றாலும் கவர்மெண்டு காசு" என்று பெண்ணை கண்ணை மூடிக்கொண்டு தருவார்கள். காரணம் காலம் முழுவதும் பெண் பொருளாதாரத்திற்கு கஷ்டப்படமாட்டாள் என்பதால்.
சில காலம் கழிந்த பின் வங்கி பணிகளுக்கு மதிப்பு கூடியது. வங்கிப்பணி என்றால் உடனடியாக சம்பந்தப்பட்ட பெற்றோர் திருமணத்திற்கு இசைந்துவிடுவார்கள். அதன் பின் காலங்கள் சென்றது.
அறிவியல் நுட்பம் பெருகி கல்வி துறையும் மெருகேறியது. தொழில்நுட்பத் துறையில் பெரிய அளவில் மாற்றங்கள் உண்டானது. மருத்துவத்துறையும் நவீனங்களுடன் அதே அளவுக்கு மதிப்பு கூடியது. இப்போது பெரும் பணத்தை சம்பாதிக்கும் இன்ஜினியர்களையும் மருத்துவர்களையும் மேட்ரிமோனியலில் அதிக அளவில் தேடுகின்றனர். இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பணிக்கு மதிப்பு கூடிக்கொண்டு உள்ளது. அதன் அடிப்படையிலேயே பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வியை போதிக்கின்றனர்.
ஆனால் இங்கு ஒரு விஷயம் கவனிக்கப்பட வேண்டும் எத்தனை பேருக்கு தாங்கள் செய்யும் அந்த பணி விருப்பமான தேர்வாக இருந்திருக்கிறது? பெற்றோரின் நிர்பந்தத்தாலும் சூழல்களின் உந்துதலாலும் மட்டுமே அவர்கள் அந்தத் துறையை தேர்ந்தெடுத்து அதைக் கடமையே எனத் தொடர்வார்கள். நூற்றுக்கு 90% பேர் பாதுகாப்பான இந்த நிலையைத்தான் விரும்புகின்றோம்.
மருத்துவம் பயின்றுவிட்டு ஏதோ ஒரு மருத்துவமனையில் முகம் தெரியாத மருத்துவராக மாத சம்பளத்திற்கு சென்றுவரும் ஷாம் அவன் சிறு வயதில் என்னவாக ஆகவேண்டும் என்று நினைத்திருந்தான் தெரியுமா?
அவன் கனவுகளில் பெரிய கதாநாயகன் போன்று உலா வருவான். அவனுக்குள் எப்போதும் தான் நடித்து திரையில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற ஒரு கனவு இருந்து கொண்டே இருக்கும். ஆனால் மருத்துவர்கள் ஆன அவன் பெற்றோருக்கோ தங்களைபோல் தங்கள் மகனும் மருத்துவம் பயின்றால் மட்டுமே தங்களுக்கு பெருமை என்று சொல்லி சொல்லியே அவன் மனதில் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தை மடைமாற்றி மருத்துவ படிப்புக்கு அவனை தயார் செய்தார்கள்.
இதோ இப்போதும் நோயாளிகள் வராத சமயத்தில் தனது அறையில் அமர்ந்து தனக்குப் பிடித்த, தான் தவறவிட்ட நடிப்புப் பயிற்சியை எண்ணி மனதிற்குள் தான் விரும்பிய துறையில் ஜொலிக்க முடியவில்லை என்ற ஏக்கத்துடனே இருக்கிறார் ஷாம். இதற்கு காரணம் தனக்கு என்ன வேண்டும் என்பதற்கான விடை ஷாமிற்கு தெரியாமல் அல்லது தெரிந்தும் தவிர்த்ததுதான்.
நமது தேடல் என்ன என்பதை புரிந்து கொண்டு மனதிலும் மகிழ்ச்சியாக வெற்றியை அனுபவிப்போமே.