
நிறைகளைத் தவிர்த்துக் குறைகளைச் சொல்லி, சுட்டிக்காட்டும் பழக்கம் நம்மிடம் அதிகம் இருக்கிறதோ என்று தோன்றுகிறது.
காகத்தை கூடி வாழ்வதற்கு உதாரணம் காட்டுவதை விட நிறத்திற்குத்தான் அடையாளமாக்கினோம்.
உழைப்பதற்குக் காட்டவேண்டிய கழுதையை உதைப்பதற்கும், தூய்மைக்கு எடுத்துக்காட்டாய் இருக்கும் பூனையை. போலச் செய்வதற்கும், நன்றிக்கு இலக்கணமாய் விளங்கும் நாயை வாலை நிமிர்த்த முடியாததற்கும்தானே நாம் உவமைகளாக பெரும்பாலும் கையாளுகிறோம்.
குறை காண்பது, குறைகளை மிகைப்படுத்துவது, குறைகள் குறித்தே புலம்பி அடுத்தவர்களை திட்டுவது உடல் நலனைக்கூடக் கெடுத்துவிடும்.
இனிய செய்திகளைப் பேசும்போதும் சிந்திக்கும்போதும் மனம் உடலுக்கு ஆரோக்கியமான சமிக்ஞைகளை அனுப்புகிறது. உடலை மனம்தான் இயக்குகிறது. உடலின் கடிவாளம் மனதின் கைகளில்தான் இருக்கிறது.
எந்தவொரு செயலைப் பற்றியும் விவாதிக்கும் போதும் அதில் உள்ள சிறந்த அம்சங்களை முதலில் எடுத்துக்கூறி விட்டுப் பிறகு அதில் உள்ள குறைகளை மென்மையாக கூறுவதுதான் நாகரிகம், நல்ல பண்பு.
'குணம் நாடி, குற்றமும் நாடி' என்று கூறும்போது குணத்தைத்தான் திருவள்ளுவர் முதலில் குறிப்பிடுகிறார்.
நாம் ஒருவரைப் பாராட்டினால் தோள் வலிக்கத் தூக்குகிறோம்- இகழ்ந்தால் பாதாளத்திற்குத் தூக்கி எறிகிறோம் வெற்றி வந்தால் வானத்திற்குத் துள்ளிக் குதிக்கிறோம். தோல்வி ஏற்பட்டால் மூலையில் முடங்கிவிடுகிறோம்.
எல்லாவற்றிலும் நாம் மிகையாகச் செயல்படுகிறோமா என்று தோன்றுகிறது. எதிரே இருப்பவர்கள் குறைகளை கூறும்பொழுது திட்டுவதற்காக கூறப்படாமல் திருத்துவதற்காக அவை கூறப்பட வேண்டும். அதை எதிரே இருப்பவரும் ஒத்துக்கொள்ளும் அளவுக்கு மயிலிறகால் மென்மையாக வருடுமாறு அவை சொல்லப்பட வேண்டும். மென்மையுடன் உறுதியும் ஒரு சேர கைகுலுக்கும்போது தான் நம் நோக்கம் நிறைவேறும்.
இதற்கு உதாரணமாக கால்வாய் கதையைப் படியுங்கள்
நான்தான் கால்வாய். என் மேனி முழுவதும் புதர்களும் முட்களும் மண்டிக்கிடக்கின்றன. நான் இந்தப் பார்த்தீனியச் செடிகளும் வேலிக்கருவேல மரங்களும் அடர்ந்து சீர்கெட்டு என் மேனி அழகு கெட்டு வலிவிழந்து விட்டேன். என் கையோரமெல்லாம் குடிசைகள் ஆக்கிரமித்து இருப்பதால் நான் கைகளை விரிக்கவோ, கால்களை நீட்டவோ கூட முடிவ தில்லை. என் மீது ஓடும் நீரை இந்தப்புதர்களே உறிஞ்சிக கொள்வதால் என் பயன் குறைந்து வாடும் உழவர்கள் என்னைத் திட்டுகின்ற சத்தம் என் செவிகளில் விழுகிறது. என்னைத் தூர் வாரி பழைய நிலைக்கு யார் கொண்டு வரப்போகிறார்கள்?"
இவ்வளவு அழகாக கால்வாய் தன்னுடைய குறையை கூறும்பொழுது மனிதர்களாகிய நாம் இந்த முறையை பின்பற்றலாமே.