self confidence
Self trust...Image credit - pixabay

தன்னம்பிக்கை எப்போது ஆணவமாக மாறும் தெரியுமா?

Published on

புதிய முயற்சியிலே, அவர் வெற்றி அடைவாரா அல்லது தோல்வி அடைவாரா என்பதை எப்படித் தீர்மானிப்பது? 'நாம் வெற்றியே அடைவோம்' என்ற நம்பிக்கை அவர் உள்ளத்தில் வலுவாக இருக்க வேண்டும். இருந்தால் அவர் முழு வெற்றியை அடைவார், உறுதி.

நாம் வெற்றி அடைவோமோ, மாட்டோமோ என்ற அரைகுறையான நம்பிக்கையாக அது இருந்தால் அடையக்கூடிய வெற்றியும் அரைகுறையான வெற்றியாகத்தான் இருக்கும்.

முயற்சியில் குதித்துச் செயலாற்றிக் கொண்டிருக்கும் போதே, தோல்வி அடைந்துவிட்டால் என்ன செய்வது? தோல்வி அடைந்துவிட்டால் நிலைமை இப்போது இருப்பதைக் காட்டிலும் படுமோசமாகப் போய்விடுமே என்று சந்தேகப்பட்டால் - என்று பயந்தால் தோல்விதான். வெற்றி கிடைக்கவே கிடைக்காது.

ஒரு மனிதன் தனக்கு என்ன நடக்கும் - எது கிடைக்கும் என்று மனப்பூர்வமாக நம்புகிறானோ அதுவே அவனுக்கு நடக்கும். அதுவே அவனுக்குக் கிடைக்கும். நன்மைகளை நாம் அடைந்தே தீருவோம். வெற்றிகளை நாம் குவித்தே தீருவோம் என்ற நம்பிக்கை நம் உள்ளத்தில் உறுதியாக இருக்கவேண்டும். வேரூன்றி விளங்க வேண்டும்.

'நமக்கு எங்கே நன்மைகள் வரப்போகின்றன. நமக்கு மேலும் மேலும் சிரமங்கள்தாம் வந்து கொண்டிருக்கும்,' என்று மனத் தளர்ச்சியோடு நாம் நாட்களைத் தள்ளிக் கொண்டிருந்தால் நாம் எதிர்பார்க்கிற துன்பங்களும், துயரங்களுமே நம்மைச் சூழும்; மேலும் மேலும் நம்மைத் தொல்லைப்படுத்திக் கொண்டே இருக்கும். நம்மிடத்திலே நமக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் நம் வாழ்க்கையில் நாம் நன்மைகளையோ உயர்வுகளையோ ஒருநாளும் பெறமுடியாது.

இதையும் படியுங்கள்:
யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள்!
self confidence

வாழ்க்கையில் தன்னம்பிக்கையை இழந்தவர்களின் மனம் தூய வழிகளில் செல்லாது. தீய வழிகளில்தான் அவர்களுடைய புத்தி போய்க் கொண்டிருக்கும். அவர்கள் தீய செயல்களிலேயே ஈடுபடத் தொடங்குவார்கள். தீய செயல்கள் மனிதனை மேலும் மேலும் கோழையாக்கி, அவனை உருத்தெரியாமல் அழித்துவிடுகின்றன.

தன்னம்பிக்கையை வளர்த்தல் என்பது உடனடியாக செய்யக்கூடியது கிடையாது. நாளடைவில் வளர்ப் பதாகும். தன்னம்பிக்கை எப்போதும் சமநிலையில் இருக்க வேண்டும். அது எப்போதும் ஆணவமாக மாறக் கூடாது. உங்கள் தன்னம்பிக்கை மனதில் மட்டும் இருக்க வேண்டும். அது அடிக்கடி வார்த்தைகளில் வெளிப்பட்டால் ஆணவமாக மாறலாம்.

logo
Kalki Online
kalkionline.com