
மனிதன் சைகை மொழியில் தொடங்கி, சித்திரங்களின் மூலம் தங்கள் எண்ணங்களை தங்கள் குழுவினரிடம் பகிர்ந்து வாழ்ந்து வந்தார்கள். பின்னர் மெல்ல மெல்ல ஓசையை உணர்ந்து ஒலி எழுப்பி தகவல்களைப் பரிமாறி வாழ்ந்தார்கள். இதிலிருந்து அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப பேச்சு மொழிகள் உருவாகின. பின்னர் எழுத்துகள் உனுவாகின். இப்படியாக இன்று ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் வழக்கத்தில் உள்ளன.
உலகின் மிகச் சிறந்த மொழி எது என்று கேட்டால் ஆளாளுக்குத் தங்களுக்குப் பிடித்தமான ஒரு மொழியைக் குறிப்பிடுவார்கள். ஆனால் எல்லோருக்கும் தெரிந்த மிகப் பயனுள்ள சிறந்த மொழி ஒன்று உள்ளது. உலகில் உள்ள அனைவருக்கும் தெரிந்த மொழி எது என நீங்கள் கேட்பது புரிகிறது.
மெளன மொழி. அதுவே அனைவருக்கும் தெரிந்த ஆகச்சிறந்த மொழி. பிரச்னை ஏற்படும்போது ஒருவருக்கொருவர் கடினமாக, கோபம் விளைவிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது சாதாரண பிரச்னை பூதாகரமாக மாறி இரண்டு தரப்பினருக்கும் பெரும் இழப்பையும் மன உளைச்சலையும் உருவாக்கிவிடும். நாம் பேசும் தடித்த வார்த்தைகளே பிறருடைய கோபத்தை அதிகப்படுத்தி பிரச்னையையும் பெரிதாக்கிவிடும். யாராவது ஒருவர் பேசாமல் அமைதி காத்தால் எதிராளியின் கோபம் தணிந்து பிரச்னையும் சுலபமாக முடியலாம்.
பல சமயங்களில் விளையாட்டாக நாம் உதிர்க்கும் எளிய வார்த்தைகள் கூட பிறர் கோபத்தைத் தூண்டி பிரச்னையை உருவாக்கிவிடும்.
யாராவது உங்களிடம் ஏதாவது கேட்டால் வளவள என்று பேசாமல் சுருக்கமாகப் பேசப்பழகுங்கள். நீங்கள் உதிர்க்கும் அதிகப்படியான தேவையில்லாத வார்த்தைகள் உங்களுக்குப் பிரச்னையை உருவாக்கலாம்.
யாராவது உங்களிடம் கோபமாகப் பேசினால் நீங்கள் கூடுமானவரை அமைதியாக இருந்து விடுங்கள். இது எப்போதும் உங்களுக்கு நன்மை விளைவிக்கும். நீங்கள் அமைதி காத்தால் கோபமாகப் பேசியவர் கோபம் தணிந்து தன் பக்கம் தவறு என்று உணரும் பட்சத்தில் மனது மாறி தவறுக்கு உங்களிடம் வருத்தம் தெரிவிக்கலாம்.
மகான்கள் யாரிடமும் தேவையின்றிப் பேசமாட்டார்கள். பேச்சைக் குறைக்கக் குறைக்க பிரச்னைகள் உங்களை விட்டு விலகிச் செல்லத் தொடங்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.