ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு காரணமாகவும் உறுதுணையாகவும் சிலர் இருப்பார்கள். ஒருவரின் வெற்றிக்குப் பின்னால் கணவனோ மனைவியோ குடும்ப உறுப்பினர்களோ அல்லது நல்ல நண்பர்களோ இருக்கக்கூடும். ஆனால் அவர்களை எல்லாம் விட முக்கியமாக ஒருவரின் வெற்றிக்கு உதவும் சிறந்த நண்பர்கள் யார் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்
ஒவ்வொரு மனிதனுக்கும் எத்தனையோ நண்பர்கள் இருந்தாலும் அவருடைய முதல் மற்றும் முக்கியமான நண்பர் அவரேதான். அவருடைய கீழ்க்கண்ட குணங்கள் தான் அவருக்கு மிகச் சிறந்த நண்பர்கள். அவைகள் அவருடைய வெற்றிக்கும் முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும்.
1. தன்னம்பிக்கை; ஒரு மனிதனின் முதல் நண்பர் அவருடைய தன்னம்பிக்கை. தன் மீது நம்பிக்கை வைக்கும் ஒரு மனிதரால் மட்டுமே சிறந்தபடியாக செயலாற்ற முடியும். தான் இதை செய்ய முடியும் என்று உறுதியாக நம்பும் ஒரு மனிதனால் மட்டுமே வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் சிறப்பாக செயல்பட முடியும்
2. சுய பரிவு;
ஒரு மனிதன் தன்னிடத்தில் மிகுந்த பரிவும் இரக்கமும் கொள்ள வேண்டும். அப்போது தான் அவருடைய மன அழுத்தம் குறைந்து நெகிழ்ச்சி அதிகமாகும். தன்னிடத்தில் நண்பரை போல அன்பாக நடந்து கொள்வது மனநலத்தை வளர்க்கிறது. மேலும் தன்னுடைய முன்னேற்றத்தில் கவனம் செலுத்த இது பெரிதும் உதவி செய்கிறது.
3.சுய விழிப்புணர்வு;
தன்னுடைய பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வது ஒருவரின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது இதைப் பற்றிய ஒரு முழுமையான புரிதல் இருந்தால் மட்டுமே அவரால் தன்னுடைய பலவீனங்களை குறைத்து பலங்களை அதிகரித்து வெற்றி காண முடியும்.
4. உணர்ச்சி நிலைத்தன்மை
ஒரு மனிதன் தன்னிடத்தில் உணர்ச்சிப்பூர்வமாக நிலைத்தன்மையுடன் இருப்பது மிகவும் அவசியம். வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள், வெற்றி தோல்விகளுக்கு ஏற்ப தன்னை சமநிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். இது வெளிப்புற எதிர்பார்ப்பை சார்ந்திருப்பதை குறைக்கிறது. வெற்றியை அளவுக்கு மீறி கொண்டாடுவதும் தோல்வியில் துவளுவதும் இல்லாமல் இரண்டு நிலைகளிலும் சமமான உணர்ச்சி நிலைத்தன்மை இருந்தால் அவரால் மேலும் மேலும் வெற்றி பெறமுடியும்.
5. முடிவெடுக்கும் திறன்;
ஒருவர் தன்னுடைய நண்பர்கள் உறவினர்கள் குடும்பத்தினர் என அனைவரிடமும் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை கேட்டறியலாம். ஆனால் இறுதி முடிவை எடுப்பது அவருடைய கைகளில் தான் இருக்கிறது. சரியாக முடிவெடுக்கும் திறன் இருந்தால் மட்டுமே அவரால் வாழ்க்கையில் மேலும் ஜெயிக்க முடியும்.
6. சுயமரியாதை;
தனக்குத் தானே நல்ல நண்பனாக இருப்பது ஒருவரின் சுயமரியாதையை அதிகரிக்கிறது. ஒருவர் தன்னை அப்படியே ஏற்றுக் கொள்வதன் மூலம் நேர்மறையான போக்கை கடைபிடிக்க முடியும். பிறர் ஒருவரை நல்லவர் அல்லது கெட்டவர் என முத்திரை குத்தும் போது அதை அப்படியே நம்பாமல் தான் எப்படிப்பட்டவர் என்று தனக்குத்தானே அலசி ஆராய்ந்து கொள்வது அவருடைய சுயமரியாதையை இன்னும் அதிகரிக்கும். சுய பிம்பத்தை ஆரோக்கியமாக மாற்றும்.
7. சுய ஊக்குவிப்பு;
ஒருவர் தன்னை நம்புவதோடு மட்டுமல்லாமல் தன்னைத்தானே ஊக்குவிக்கும் திறனையும் பெற்றிருக்க வேண்டும். பிறர் என்னதான் வெளியில் இருந்து உற்சாகமும் ஊக்குவிப்பும் தந்தாலும் தனக்குத்தானே தரும் ஊக்குவிப்பு மட்டுமே ஒருவருக்கு விடாமுயற்சியை அளிக்கிறது. இது தனிப்பட்ட மட்டும் மற்றும் தொழில் முறை இலக்குகளை அடைய உதவுகிறது.
8. உண்மையான உறவுகள்;
ஒருவர் தனக்குத்தானே நல்ல நண்பராக இருப்பது மற்றவர்களை தான் எப்படி நடத்த வேண்டும் என்பதற்கான ஒரு வழியை அமைக்கிறது. தன்னை மரியாதையுடனும் அன்புடனும் நடத்துபவர் பிறரையும் அதேபோல நடத்துவார். இது உண்மையான மற்றும் நிறைவான உறவுகளுக்கு வழி வகுக்கிறது.
இத்தகைய நல்ல நண்பர்களை பெற்றிருக்கும் ஒரு மனிதன் விரைவில் வெற்றி பெற்று வாழ்க்கையில் மிளிர்வார் என்பது உறுதி.