
நாம் நம் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு நபரையும் நம் வாழ்வுடன் இணைத்து தொடர்ந்து பயணிக்க முடியாது. அவர்களில் சிலர் நம் மன நிம்மதியையும் சக்தியையும் குறையச் செய்து நம்மை வளரவிடாமல் தடுக்கக் கூடியவராய் இருக்கலாம். அவ்வாறான குணமுடையவர்களை இனம் கண்டறிந்து அவர் களுடனான தொடர்பை துண்டித்துக்கொள்வது நமக்கு நன்மை தரும். அவர்களை அடையாளம் கண்டு கொள்ள உதவும் 7 வகையான குணங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
1.சில மனிதர்கள் எப்பொழுதும், 'வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரி இல்லை... சந்திக்கும் அனைவரும் மோசமானவர்களாய் இருக்கின்றனர்' என்று புலம்புவர். அவர்களின் எதிர்மறையான எண்ணங்கள் நம்மையும் தொற்றிக்கொண்டு நம் ஊக்கத்தையும் சந்தோஷத்தையும் சீர் குலைக்க ஆரம்பிக்கும். இவர்களுடன் நட்பு வைத்திருப்பது கூடா நட்பேயாகும்.
2.நட்பு என்பது ஓர் இருவழிப்பாதை. ஆனால் சிலர், அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்துகொண்டு பிறகு காணாமல் போய்விடுவர். நமக்கு ஆதரவு தேவைப்படும்போது ஒருபோதும் முன் வர மாட்டார்கள்.
3.ஒரு நல்ல உறவுக்கு நேர்மையே அடிப்படைத் தேவை. எப்பொழுதும் உண்மையை மறைத்து, நடந்தவற்றை திரித்துப் பேசுவது, தங்களின் உண்மையான நோக்கத்தை மறைத்து வைத்து சந்தர்ப்பம் கிடைக்கும் போது ஆதாயம் தேடுவது போன்ற குணமுடையவர்கள் ஒருபோதும் நம் நம்பிக்கைக்கும் மதிப்பிற்கும் உரியவர்களாய் இருக்க முடியாது.
4. சிலர் ஒவ்வொரு முறையும் நம்மிடம் பேசிவிட்டுச் செல்லும்போது நம்மிடம் நாடகமாடி நம்மை குழப்பவும், நம் கவனத்தை திசை திருப்பவும் செய்வார்கள். அதனால், நம் உணர்ச்சிகளும், சக்தியும் முழுவதுமாக நம்மிடமிருந்து விலகிவிட்டது போன்ற உணர்வு நமக்கு உண்டாகும். அப்படிப்பட்டவர்களிடமிருந்து விலகியிருப்பதே ஆரோக்கியமான செயல்.
5.சிலர் நம்மைப் பற்றின கருத்துக்களை நேரடியாக நம்மிடம் பகிர்ந்து கொள்ளாமல், பாராட்டுவதுபோல வார்த்தைகளில் உள் அர்த்தம் வைத்துப் பேசி, நம்மை குற்ற உணர்வு கொள்ளவும், பாதுகாப்பான உணர்வின்றி நம்மை நாமே சந்தேகம் கொள்ளும் படியும் செய்வதில் திறமையுள்ளவர்களாக இருப்பர். இந்த மாதிரி குணம் கொண்டவர்களிடமிருந்து நாம் விலகி இருப்பதே நன்மைதரும்.
6. நம் வெற்றிகளை நம்முடன் சேர்ந்து கொண்டாடாமல், குற்றம் குறை கூறி நம்மை தாழ்வு மனப்பான்மை கொள்ளச் செய்பவர்களும் நம் நட்பு வட்டத்திற்குள் இருக்க தகுதியற்றவர்களே ஆவர். உண்மையான நண்பர்கள் நம்மை உயரத்தி வைத்து அழகு பார்க்கவே விரும்புவார்கள்.
7. நாம் அனைவருமே ஏதாவதொரு சூழ்நிலையில் தவறு செய்யக் கூடியவர்கள்தான். ஆனால் அந்த தவறை ஒத்துக்கொள்ளாமல் பழியை பிறர் மீது போடுவது, செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்காமலிருப்பது போன்ற குணம் கொண்டவர்களை நம்முடன் வைத்திருப்பது நம் நிம்மதியை குலைக்க மட்டுமே உதவும். இந்த
மாதிரியான நபர்களையும் நம்மிடமிருந்து விலக்கி வைப்பதே சிறப்பாகும். மேலே கூறிய 7 வகையான தீய குணம் கொண்ட நபர்களிடம் நட்புடன் பழகுவதை தவிர்ப்பதே நலம் தரும்.