
சிலர் எடுத்ததற்கெல்லாம் கோபித்துக் கொள்வார்கள். அது போன்றவர்களிடம் வாய் திறந்து பேசுவதற்கோ, பழகுவதற்கோ பயமாக இருக்கும். ஆனால் அந்த கோபத்திற்கு மதிப்பும் மரியாதையும் சற்று குறைவுதான். சிலர் எப்பொழுதுமே ஜாலியாக சிரித்த முகத்துடன் இருப்பார்கள். எந்த விஷயத்திற்கும் அலட்டிக் கொள்ளமாட்டார்கள். யாரையும் கடிந்து பேச மாட்டார்கள். சின்னச் சின்ன விஷயத்திற்கும் கோபிக்க மாட்டார்கள். யாராவது மிகவும் கடுமையாக, மன்னிக்க முடியாத கடுஞ்சொற்களை பேசினால் மட்டும்தான் கோபப்படுவார்கள்.
அதன் பிறகு அவர்கள் சகஜ நிலைக்குக் கூட திரும்ப மாட்டார்கள். இப்படி அவர்கள் எப்பொழுதாவதுதான் கோபித்துக் கொள்வார்கள். அப்படிப்பட்டவர்கள் கோபித்துக்கொண்டால் அதை கோபமூட்டியவர்களுக்கு மனதில் மிக வேதனை தோன்றும். அவரை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் தடுமாறி நிற்பார்கள். அந்த கோபத்தில் ஒரு அர்த்தம் இருக்கும். இன்னும் சிலருக்கு சொன்னச் சொல்லைக் காப்பாற்றா விட்டால் கோபம் வரும். மற்றும் பலருக்கு உண்மையை மறைத்தால் கோபம் வரும். உயர்ந்த பதவியில், ஆட்சி பீடத்தில் இருப்பவர்களுக்கு தன் நேர்மைக்கு பங்கம் வருவதுபோல் மற்றவர்களின் செயல் இருந்தால் கோபம் வரும். இப்படி கோபப்பட காரணங்கள் கோடி இருக்கலாம். அதில் ஒரு நேர்மை உள்ளத்துக்கு கோபம் வந்தது. ஏன் வந்தது . அது யாருக்கு வந்தது தெரியுமா?
நம் பாரததத்தின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களுக்குத்தான் கோபம் வந்தது. அந்த கோபத்திற்கு காரணம் என்னவென்றால், அவர் அடிக்கடி வெளிநாடு சென்று வருவார். அப்படி ஒருமுறை வெளிநாடு செல்லும்போது அவரது செல்ல பேரனும் தனக்கு ஒரு பொம்மை வாங்கி வரும்படி அவரைக் கேட்க, அவரும் ஒரு பொம்மையை வாங்கி வந்தார். விமான நிலையத்தில் தனது பேரனிடம் பொம்மையை கொடுத்துவிட்டு, அருகில் இந்த அதிகாரி ஒருவரைப் பார்த்து பொம்மைக்கு சுங்க வரி கட்டிவிட்டீர்களா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு அதிகாரி ஐயா! நீங்களே நாட்டின் பிரதமர். பிரதமர் எதற்கு சுங்கவரி கட்ட வேண்டும்? என்று வியப்புடன் கேட்க, அதற்கு நேரு என் நேர்மைக்கு கேடு வந்துவிடும். மக்களுக்கு தெரிந்தால் என்ன ஆகும்? முதலில் சுங்கவரியை கட்டிவிட்டு, பிறகு என் முகத்தில் விழியுங்கள் என்று கோபத்துடன் கூறினாராம்.
இது அர்த்தமுள்ள கோபம்தானே. அரசன் எவ்வழியோ குடிமக்களும் அவ்வழியே என்பதை உண்மையாக்கி காட்டியவர் அவர். அப்படி காட்டவேண்டியது கட்டாயம். அவரின் கடமையும் கூட.
இன்று மோட்டிவேஷன் என்ற தலைப்புக்கு அவரின் பெயரை அந்தச் செயலை குறிப்பிடுவதன் நோக்கமே அந்த நேர்மை உள்ளம்தானே. அந்த நேமைக்கு பங்கம் வந்த பொழுது அவர் கோபிக்காமல் இருந்திருந்தால் இன்று இப்படி ஒரு கட்டுரையை எழுத வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு இருக்காது அல்லவா? ஆதலால் இதுபோன்ற கோபத்திற்கு பயப்படுவது சிறந்தது. அர்த்தம் நிறைந்தது. ஆதலால் இது போன்ற விஷயங்களுக்கு நாமும் கோபிக்கலாம் தவறு ஒன்றும் இல்லை.