
எதிர்மறை உணர்வுகள் ஒருவரது நல்வாழ்வையும் வளர்ச்சியையும் தடுக்கும் அம்சங்கள் ஆகும். இந்தப் பதிவில் ஒருவர் தனது வாழ்வில் அவசியம் தவிர்க்க வேண்டிய ஏழுவிதமான குணாதிசயங்களையும் அவற்றை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்களையும் பற்றிப் பார்ப்போம்.
1. பரிபூரணத்துவம்
நாம் செய்யும் எல்லா செயல்களிலும் பரிபூரணத்துவத்தை எதிர்பார்ப்பது நீண்டகால மனஅழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். லட்சியத்தை அடைய முடியாமலும் தோல்வியில் துவளும் நிலையம் உருவாகும். படைப்பாற்றல் மற்றும் புதுமைகளைச் செய்வதை இந்த பரிபூரணத்துவ உணர்ச்சி தடுத்துவிடும். பெரும்பாலும் பரிபூரணவாதிகள் வெற்றிகளை விட குறைபாடுகளில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். இதனால் அதிருப்திக்கு ஆளாகிறார்கள். இவர்களால் சிறப்பாக எந்த செயலையும் செய்ய முடியாமல் போகும்.
2. சுய சந்தேகம்;
தன்னால் ஒரு வேலையை சிறப்பாக செய்து முடிக்க முடியுமா என்று ஒருவர் தன்னுடைய திறமை மீதும் செயல்பாடுகளின் மீதும் சந்தேகப்படும்போது அவர் அந்த செயலை செய்யாமலேயே விட்டுவிடுவார். சுயசந்தேகம், முயற்சிகளைத் தொடங்கும்போது ஒரு முட்டுக்கட்டை போட்டதுபோல தடுக்கும். முன்னேற்றம் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஒருவர் தன்னுடைய திறன்களை சந்தேகிப்பது தன்னுடைய தனிப்பட்ட வளர்ச்சிக்கும் தொழில்முறை வளர்ச்சிக்கும் தீங்காக முடியும்.
3. மோசமானது நடக்கும் என்று கருதுதல்
தன் மீது நம்பிக்கை இல்லாமல் போகும்போது அது அவநம்பிக்கையை விதைக்கும். அத்துடன் எல்லாமே மோசமாகத்தான் நடக்கும் என்கிற எண்ணத்தையும் வலுவாக வேரூன்றச் செய்யும். சாதாரண விஷயங்களில் கூட முடிவு மோசமானதாக இருக்கும் என்று தொடர்ந்து எதிர்பார்ப்பதும் நிகழ்காலத்தை அனுபவிக்க விடாமல் செய்துவிடும். எதிர்மறையான விளைவுகளை அனுமானம் செய்து கொண்டு ஒரு செயலை செய்யும்போது அது கவனக்குறைவாக செயல்களை செய்யவைக்கும். மோசமான மனநிலையை தரும். இது புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதை தடுத்துவிடும்.
4. கவலை;
எதற்கெடுத்தாலும் கவலைப்படும் குணம் நாள்பட்ட நோய்களை ஏற்படுத்திவிடும். இருதயப் பிரச்னைகள், செரிமானப் பிரச்னைகள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட உடல் ஆரோக்கிய பிரச்னை களுக்கு வழிவகுக்கும். கவலைப்படும்போது அது மன ஆற்றலைக் குறைத்து முக்கியமான பணிகளில் இருந்து கவனத்தை திசை திருப்புகிறது. அதிகப்படியான கவலை சவால்களை எதிர்கொள்ளும் திறனைத் தடுக்கிறது. இது தெளிவற்ற மனநிலைக்கு வித்திடுவதிலும் செயலற்ற நடைமுறைக்கும் வழிவகுக்கும்.
5. புகார்;
சிலர் தொடர்ந்து பிறரை விமர்சித்துக் கொண்டும் புகார் சொல்லிக் கொண்டும் இருப்பார்கள். இது எதிர்மறையான கண்ணோட்டத்தை வலுப்படுத்தும். எந்த ஒரு சூழ்நிலையிலும் கெட்டதை மட்டுமே கண்டு அதைப் பெரிதுபடுத்தி புகார் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நல்லதைக் காண்பது அல்லது பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது என்பது அரிதான குணமாகிவிடும். புகார் கூறுபவர்கள் தாம் மட்டுமல்லாமல் தங்களை சுற்றி உள்ளவர்களையும் சோர்வடையச் செய்து விடுவார்கள். இது எதிர்மறை குணத்தை வளர்த்து, ஒத்துழைப்புக் கொடுக்கும் நபர்களையும் தடுத்து நச்சு சூழலுக்கு வழிவகுக்கிறது.
6. எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முயற்சிப்பது;
சிலர் பிறரை தேவையே இல்லாமல் எல்லா விஷயங்களிலும் கட்டுப்படுத்த முயற்சி செய்வார்கள். இது மனஅழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கும். பிறரை கட்டுப்படுத்த முயற்சிக்கும்போது உறவுகளில் மனக்கசப்பை ஏற்படுத்தும்.
ஏனென்றால் மக்கள் கட்டுப்படுத்தப்படுவதை விரும்புவதில்லை. இது மோதல் மற்றும் உறவுச் சிக்கலுக்கு வழிவகுக்கும். எனவே பிறரை கட்டுப்படுத்த நினைக்காமல் அவர்களை புரிந்துகொண்டு நடக்கவேண்டும். அனுசரித்து செல்லவேண்டும்.
இந்த எதிர்மறையான விஷயங்களை தவிர்ப்பதன் மூலம் ஒருவர் ஆரோக்கியமான, மனநிறைவான வாழ்க்கையை வாழமுடியும். அவர் தனது தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் சிறப்பான உறவு மேலாண்மையை கடைப்பிடிக்க முடியும்.