
பலர் தங்கள் தொழில் அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைகிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு அது திருப்தியை தராமல் ஒருவித மனத்தாங்கலுடன் இருக்கிறார்கள். அது ஏன் என்பதற்கான காரணிகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
தவறான இலக்குகளை அமைத்தல்;
பெரும்பாலும் வெற்றி என்பது செல்வம், அந்தஸ்து அல்லது அங்கீகாரம் போன்ற அளவீடுகளால் வரையறுக்கப் படுகிறது. தனி நபர்கள் தங்கள் தனிப்பட்ட மதிப்புகள் அல்லது உணர்ச்சிகளை கருத்தில் கொள்ளாமல் இந்த வகையான இலக்குகளை தொடரும்போது அவர்கள் வெற்றியை அடைகிறார்கள். ஆனால் மனதிருப்தி அடைவதில்லை.
ஒருவருக்கு ஆடி கார் வாங்க வேண்டும் என்கிற ஆசை இருந்தால் அந்த கார் வாங்கியவுடன் அவருடைய ஆசை நின்று விடுவதில்லை. அடுத்து அதைவிட விலை உயர்ந்த கார் வாங்க வேண்டும் என்று விரும்புவார். ஆனாலும் அவருக்கு அந்த வெற்றி திருப்தியைத் தராது. ஏனென்றால் அவருடைய ஆசை நிறை வேறுவதைத்தான் தன்னுடைய கனவு, லட்சியம் என்று அவர் தவறாக நினைத்துக் கொள்கிறார்.
இன்னும் இன்னும் என்ற மனப்பான்மை;
உயர் சாதனையாளர்கள் பெரும்பாலும் முந்தைய இலக்குகளை அடைந்தவுடன் புதிய இலக்குகளை நிர்ணயிப்பார்கள். தங்களின் சாதனைகளை பாராட்டுவதற்கு நேரத்தை எடுத்துக்கொள்ளாமல் நிலையான முயற்சியின் சுழற்சியை உருவாக்கு கிறார்கள். இந்த இடைவிடாத உந்துதல் மற்றும் உழைத்தல் ஒரு விதமான வெறுமை உணர்வுக்கு வழிவகுக்கும். ஒவ்வொரு சாதனையை சாதித்து முடித்த பின்பும் அதைக் கொண்டாட வேண்டும். அந்த மகிழ்ச்சியை மனநிறைவோடு அனுபவிக்கவேண்டும்.
வெளிப்புற அங்கீகாரம்;
பலரும் தங்கள் வெற்றியை பிறர் அங்கீகரிக்க வேண்டும், பாராட்ட வேண்டும். அப்போதுதான் தனக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்று தவறாக நினைக்கிறார்கள். அது கிடைக்காதபோது ஏமாற்றத்துக்கு ஆளாகிறார்கள். பல விருதுகளை வாங்கிக் குவித்தாலும் பிறர் பாராட்டாவிட்டால் அவரது மனதில் ஒரு வெறுமை உணர்வு இருக்கும்.
அர்த்தமுள்ள உறவுகளைப் புறக்கணித்தல்;
மிகவும் கடுமையாக உழைத்து பாடுபட்டு வெற்றி பெற்றாலும் மன நிறைவு சிலருக்குக் கிடைக்காது. இதற்குக் காரணம் அவர்கள் தங்கள் குடும்பம் மற்றும் நெருங்கிய உறவுகள், நண்பர்களைப் புறக்கணித்து அந்த வெற்றியை பெற்று இருப்பார்கள். இதனால் அவர்களுக்கு தனிமை உணர்வே மேலோங்கும். எனவே அவர்கள் தங்களது அன்புக்குரியவர்களை விட்டு விலகாமல் தங்களுடைய முயற்சியைத் தொடரவேண்டும்.
இடைவெளி எடுத்துக் கொள்ளாமல் இருத்தல்;
மிகக் கடினமாக பாடுபட்டு ஒரு வெற்றியைப் பெற்ற பின்பு சற்றே இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அடுத்த வேலையைத் தொடங்கு வதற்கான முழு ஆற்றல் உடலுக்கும் மனதுக்கும் கிடைக்கும். இந்த இடைப்பட்ட நேரத்தில் மனதுக்குப் பிடித்த விஷயங்களில் ஈடுபட்டு, அன்புக்குரியவர்களுடன் நெருங்கிப் பழகி அல்லது அவர்களுடன் சுற்றுலா சென்று மனதை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த இலக்கை நோக்கிப் பயணிக்கும்போது இவை அனைத்தும் மிகச்சிறந்த ஊக்குவிப்பாக அமையும்.
பிறருக்கு நன்மை தராத செயல்;
ஒருவர் பெறும் வெற்றி என்பது தனக்கும் பிறர்க்கும் நன்மை தருவதாக இருக்க வேண்டும். நோக்கம் எப்போதும் உயர்ந்ததாக இருக்க வேண்டும். வெறுமனே ஆசையை, இலக்குகள் என்று எடுத்துக் கொள்ளாமல் உயர்ந்த லட்சியங்களை வைத்துக் கொள்ள வேண்டும். வெறும் பொழுதுபோக்கிற்காக அல்லது பப்ளிசிட்டிக்காக செய்யும் விஷயங்கள் ஒருபோதும் யாருக்கும் நன்மையைத் தராது.
செய்யும் செயல்கள் பிறருக்கு நன்மையை தருவதாகவும் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் பயனுள்ளதாகவும் இருக்கும்போது அந்த வெற்றியால் சாதித்தவருக்கு மிகுந்த மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும்.