ஏன் இந்த பொறாமை குணம் வருகிறது தெரியுமா?

Motivation article
Motivation articleImage credit - pixabay

சாதாரணமாக போட்டிப் போடும் குணம்தான் நாளடைவில் பொறாமையை ஏற்படுத்துகிறது. பொறாமையை வெல்ல முடியுமா? என்றால் கேள்விக்குறிதான் மிஞ்சும். 

பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவியைப் பார்த்து இரண்டாவதாக வந்த மாணவிக்கு பொறாமை ஏற்பட்டது. நன்றாக பேசிக்கொண்டிருந்த இருவரும் பிரிந்து விட்டார்கள். அந்த பிரிவை வெளியில் தெரியாதபடிக்கு சமாளிப்பதற்காக அந்த முதல் மதிப்பெண் வாங்கிய மாணவி எப்படியெல்லாமோ அவளிடம் சமாதானமாகப் பழகி பார்த்தாள். ஒன்றும் எடுபடவில்லை. ஆனால் இருவரும் எப்பொழுதும்போல் எங்கு சென்றாலும் வந்தாலும் ஒன்றாகத்தான் போய் வருவார்கள். ஆனால் பேசிக்கொள்ள மாட்டார்கள். பார்ப்பவர்களுக்கு அவர்கள் இரண்டு பேரும் நட்பில் சிறந்தவர்கள் என்றுதான் தோன்றும், என்றாலும் அவர்களுக்குள் அப்படி ஒரு பிரிவினை. 

ஒருமுறை இந்த விஷயத்தைப் பற்றி வேதனை உற்ற அந்த மாணவி தனது அம்மாவிடம் கூறிக் கொண்டிருந்தாள். நான் எவ்வளவோ சமாதானமாக பேசியும் அவள் குத்தலாகத்தான் பேசுகிறாள். எல்லோரிடமும் சிரித்து பேசி கலகலப்பாக இருக்கும் அவள் என்னைப் பார்த்தவுடன் முகத்தை காட்டுகிறாள். அதுதான் ஏனென்று தெரியவில்லை என்று தன் ஆதங்கத்தை அம்மாவிடம் பகிர்ந்து கொண்டிருந்தாள்

அவளின் அம்மாவும் சிறிது நேரம் மௌனம் சாதித்துவிட்டு, அவள் என்று இல்லை. யாராவது ஒருவர் மற்றவரைப் பார்த்து பொறாமைப் படுகிறார் என்றால் அதற்கு ஏன் கவலைப்பட வேண்டும்?  அவரிடம் இல்லாத ஏதோ ஒரு உயர்வு உன்னிடம் இருக்கிறது  அல்லது பொறாமைப்பட வைப்பவரிடம் இருக்கிறது என்றுதானே அர்த்தம். அது நல்ல குணமாக இருக்கலாம். பலமாக இருக்கலாம் .படிப்பாக,  தனித்திறமையாக இருக்கலாம்.  இன்னும் சொல்லப்போனால் அது வசதி வாய்ப்பாகக் கூட இருக்கலாம் இல்லையா? ஆதலால் நீ மற்றவர்களைப் பார்த்து பொறாமை படாதே. உன்னைப் பார்த்து பொறாமைப்படுபவரை கண்டு கர்வமும் கொள்ளாதே. எந்தச் சூழ்நிலையிலும் போட்டி போட்டுக் கொண்டு முன்னேற ஆசைப்படு. காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினார். 

இதையும் படியுங்கள்:
தயக்கமும் பயமும்தான் நம் முதல் எதிரி!
Motivation article

அதன் பிறகுதான் அந்த மாணவி அமைதியானாள். அந்தத் தோழியிடம் வழிய சென்று பேசுவதையும் நிறுத்திக் கொண்டாள். எப்பவும் ஈகோ பார்க்காது தன்னிடம் பேசிக் கொண்டிருந்தவள், பேச்சை நிறுத்திய போதுதான் அவளுடைய பக்குவமான மனது இவளுக்கு உரைத்தது. அதன் பிறகு அவள் செயலுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு பிரிந்த நட்பை ஈடு செய்தாள். நல்ல வசதியாக வாழும் வரை அதைப் பற்றிய அருமை தெரியாது. வசதி குறையும் பொழுதுதான் ஆஹா... நாம் எப்படி எல்லாம் வாழ்ந்தோம் என்று நினைவுக்கு வரும். அது போல்தான் இந்த நிகழ்வும். 

பொறாமைக்கு அயலும் இல்லை. புறமும் இல்லை என்பார்கள். தன்னைவிட தன் மகன் நன்றாக இசைக்கருவியை வாசிக்கிறான் என்பதற்காக தன் மகனின் நடுவிரலையே வெட்டியவர் உண்டு. ஆதலால் உங்களைப் பார்த்து யாராவது பொறாமைப்படுகிறார்கள் என்று தெரிந்தால் அதற்காக கவலைப்படாதீர்கள். உங்களின் தனித்திறமைதான் அவர்களை பொறாமைப்பட வைக்கிறது என்பதை நினைவில் நிறுத்தி,   அந்தத் தனித் திறமையில்  மென்மேலும் சிறந்து விளங்க வாழ்வில் முன்னேற்ற பாதையை தேடுங்கள். இதனால் பொறாமை பொசுங்கி விடுமா என்றால் அது சாத்தியம் இல்லை. அதனுடனும்  வாழவும் பழகிக்கொள்ள வேண்டும் அதுதான் வாழ்க்கை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com