நம்முடைய வாழ்க்கையில் நிச்சயமாக ஒரு குறிக்கோளை வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். வாழ்க்கையில் குறிக்கோள் என்பதே இல்லாமல் நேரம் மட்டும் வீணாகிக் கொண்டிருக்கிறது என்று புலம்புவது சரியாகாது. குறிக்கோள் இல்லையென்றால், நாம் எதை நோக்கிப் பயணிக்கிறோம் என்பது நமக்கே தெரியாமல் போய்விடும். இதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
ஒரு ஊரில் வேடன் ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒவ்வொரு நாளும் காட்டுக்கு வேட்டையாட செல்வான். ஆனால், ஒருநாள் கூட அவனுக்கு இரை சிக்கவில்லை. வெகுநாட்களாக இதை கவனித்த வேடனுக்கு ஒருநாள் பயங்கரமாக கோபம் வந்துவிட்டது. தனக்கு வில் வித்தையை சொல்லிக்கொடுத்த ஆசானிடம் சென்று அறிவுரைக் கேட்டான்.
அவரும் நாளைக்கு நீ வேட்டைக்கு செல்லும்போது நானும் உன்னுடன் வருகிறேன் என்று கூறினார். அடுத்த நாள் சொன்னது போலவே ஆசானும் வேடனுடன் காட்டுக்கு செல்கிறார். வேட்டைக்கு சென்ற ஆசானுக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. ஏன் தெரியுமா?
அந்த வேடன் நடுக்காட்டில் நின்றுக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு கண்ட திசைக்கும் அம்பை எய்துக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த ஆசான், 'இரையைத் தேடி சரியாக குறிப்பார்த்தாலே இரை மாட்டுவது கடினம். இதில் கண்ணை மூடிக்கொண்டு கண்ட திசையில் அம்பு எய்தால் எப்படி இரைக் கிடைக்கும்?' என்று கூறினார்.
இது நமக்கும் பொருந்துமில்லையா? எந்தக் குறிக்கோளும் இல்லாமல் நேரத்தை மட்டும் வீணாக்கக் கூடாது என்று சொல்லிக் கொண்டிருந்தால் எந்த பயனும் இல்லை. முதலில் நமக்கான ஒரு குறிக்கோளை உருவாக்க வேண்டும். அந்த குறிக்கோளை நோக்கிச் செல்லும்போது அதுவே நம் நேரம் வீணாகாதவாறு பார்த்துக்கொள்ளும்.
கடலிலே செல்லும் கப்பலுக்கு கலங்கரை விளக்கம் என்று ஒன்று உண்டு. அதை பார்த்தே கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பவர்கள் வழியறிந்து கரைக்கு வருவார்கள். அதுப்போலவே வாழ்வில் குறிக்கோள் இருந்தால்தான் வெற்றி என்னும் பாதையை அடைய முடியும். எனவே, நேரத்தை உனது வசமாக்க வேண்டும் என்று எண்ணினால் குறிக்கோளை உருவாக்க வேண்டியது அவசியமாகும்.