நம்முடைய வாழ்க்கையில் ஏதேனும் ஒரு செயலை செய்வதற்கு முன்பு சிந்திக்காமல் செய்துவிட்டு பிறகு அதை நினைத்து வருத்தப்படுவோம். இதை அப்போதே நன்றாக சிந்தித்து செய்திருந்தால், முடிவு நன்றாக வந்திருக்குமோ? என்று அதை நினைத்து ஆதங்கப் படுவோம். நீங்களும் அவ்வாறு செய்திருக்கிறீர்களா? அப்போ இந்த கதையை முழுமையாக படியுங்கள்.
ஒரு சின்ன பையன் அவன் வீட்டிலே மிகவும் அழகாக பாடக்கூடிய ஒரு பறவையை கூண்டுக்குள் வைத்து வளர்த்து வந்தான். அந்த பையனுக்கு இந்த பறவை பாடுவதை தன் நண்பர்கள் அனைவருக்கும் காட்ட வேண்டும் என்று ஆசை. ஆனால் அந்த பறவை பகல் நேரத்தில் பாடாது. இரவு நேரத்தில் மட்டுமே அழகாக பாடும்.
இதை பார்த்த அந்த பையனுக்கு ரொம்பவே மனவருத்தம். இதையெல்லாம் பார்த்த ஒரு ஆந்தை அந்த பறவையிடம், ‘பாவம்! அந்த சின்ன பையன். அவனுக்காகவாவது ஒருநாள் பகலில் பாடலாமில்லையா?' என்று கேட்டது.
அதற்கு அந்த பறவை சொன்னது, ‘இப்படி தான் பகல் நேரத்தில் ஒருமுறை பாடிக்கொண்டிருந்தேன். அப்போது தான் அந்த சின்ன பையன் என்னை ஒரு கூண்டில் அடைத்து அவன் வீட்டிற்கு எடுத்து வந்து விட்டான்.
இதுவே இரவு நேரத்தில் யாரும் இல்லாத சமயம் பாடியிருந்தால், என்னை யாரும் பிடித்திருக்க மாட்டார்கள். நானும் சுதந்திரமாக இருந்திருப்பேன்’ என்று கூறியது. அதிலிருந்துதான் நான் பகலில் பாடுவதையே விட்டுவிட்டேன் என்று பறவைக் கூறியது.
இதைக்கேட்ட ஆந்தை சிரித்துக்கொண்டே, ‘இனிமேல் நீ பாடினால் என்ன? பாடாவிட்டால் என்ன? காலம் முழுவதும் இனி நீ அந்த கூண்டிலேதான் இருக்க போகிறாய்!’ என்று கூறியதாம்.
இதேபோலதான் நம் வாழ்க்கையிலும் எந்த விஷயம் செய்வதாக இருந்தாலும், ஒருமுறைக்கு இரண்டுமுறை நன்றாக சிந்திக்க வேண்டும். சிந்திக்காமல் ஒரு விஷயத்தை செய்துவிட்டு பின்பு அதை நினைத்து வருந்துவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. சிந்தித்து செயல்படுவதால் நமக்கு எந்த நஷ்டங்களும் ஏற்பட்டுவிட போவதில்லை. இதை நீங்கள் புரிந்துக்கொண்டு செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் கிட்டும். முயற்சித்துப் பாருங்களேன்.