எண்ணம் முக்கியமா? எண்ணிக்கை முக்கியமா? என்ற கேள்வி நம்மிடம் இருந்து வருகிறது. எண்ணிக்கையே முக்கியப் என்றால் காகம்தான் நம் தேசியப் பறவையாக இருக்கவேண்டும் என்றார் அறிஞர் அண்ணா.
குருக்ஷேத்திரத்தில் எண்ணிக்கையை வைத்து வெற்றி தீர்மானிக்கப்படும் என்றால் கௌரவர்களே ஜெயிக்கிறார்கள் என கவிஞரான அப்துல் ரகுமான் கூறியுள்ளார்.
விவேகானந்தர் ஒருமுறை "நான் உண்மையைச் சொல்லியே ஆகவேண்டும். என் வாழ்நாள் முழுவதும் ஆண்களும் பெண்களுமாக ஓர் 6 பேர் மட்டுமே என்னைப் பின் பற்றக்கூடும். ஆனால் அவர்கள் தூயவர்களும் நேர்மையானவர்களுமாக இருக்கவேண்டும். கூட்டம் எனக்குத் தேவையில்லை" என்றார்.
ஒரு துளி தயிர், ஒரு பானை பாலை தயிராக்கிவிடும். ஒரு சொட்டு நறுமண திரவியம் ஒரு அறையை சுத்தமாக்கிவிடும். ஒரு நல்ல மணமுள்ள மலர் நம் தோட்டத்தையே அழகாக்கிவிடும். எனவே நாம் தலைகளை எண்ணத் தேவையில்லை. எத்தனை பேர் உண்மையிலேயே முழு ஈடுபாட்டோடு கலந்து கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம். பலர் கூடி பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால் எத்தனை பேர் இறைவனோடு இதயத் தொடர்பு வைத்திருக்கிறார்கள்.
ஒருமுறை குருநானக் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்த இடத்திற்குச் சென்றார். அங்கே பலர் முழங்காலிட்டு ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் இறைவனின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்து குருநானக் புன்முறுவல் பூக்க ஆரம்பித்தார். பிரார்த்தனை செய்தவருக்கு கோபம் வந்துவிட்டது. "இந்த வேஷதாரியைப் பாருங்கள்" என கத்தினார். பிறகு குருநானக் கிடம் "நீ ஏன் சிரிக்கிறாய்" என கேட்க "நீ செய்வது பிரார்த்தனை அல்ல. அதனால் சிரிக்கிறேன்" என்றார்.
இதனால் குருநானக் நீதிபதியின் முன் கொண்டு செல்லப் பட்டார். நீதிபதி குருநானக் சிரித்ததற்கான காரணம் கேட்க "அவர் செய்தது பிரார்த்தனை அல்ல." என்றார் பின் என்ன செய்தார் என நீதிபதி கேட்க உடனே அந்த நபரை அழைத்து வரச்செய்து அவரிடம் "நீ கடவுள் பேரை கூறியபோது வீட்டில் விட்டு வந்த கோழிகளை நினைத்தீரா? இல்லையா? சத்தியம் செய்யுங்கள் என்றார்."
அந்த நபர் நேர்மையானவர்தான் உண்மையை ஒப்புக் கொண்டார். "ஆனந்த மயமான இறைவன் திருநாமத்தைச் சொல்லும்போது கோழிகளை நினைக்காதீர்கள்" என்று அவருக்கு அறிவுரை வழங்கினார்.
எத்தனை மணி நேரப் பிரார்த்தனை என்பதிலும் எவ்வளவு மணித்துளி தியானம் என்பதே முக்கியம். இரண்டு காளைகள் உழுது உண்டாக்குவதை எங்கிருந்தோ பறந்து வருகிற வெட்டுக் கிளிகள் ஒருமணி நேரத்தில் அழித்து விடுகிற வல்லமை படைத்தவை.
ஒரு துளி தயிர்தான். ஆனால் அதில் எத்தனை லட்சம் நுண்ணுயிர்கள் இருக்கின்றன. நம் உடலில் கூட நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகமானதால் நோய்கள் விளைகின்றன. எனவே அளவும் முக்கியம். தீவிரமும் முக்கியம்.