

பேசுவதால் வருகிற பிரச்னைகளைவிட பேசாமல் இருப்பதால் வருகிற பிரச்னைகள்தான் நிறைய. பேசினால் பிரச்னை பெரிதாக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பேசாமல் இருக்கிறபோது பிரச்னையின் தீவிரம் கற்பனைகளின் அடிப்படையில் பெரிதாகி விடுகிறது. அது குழப்பங்களும், சந்தேகங்களும் நிறைந்ததாக இருக்கிறது.
சில நேரங்களில் முற்றிலும் உண்மைக்கு புறம்பான ஒன்றை கற்பனை செய்துகொண்டு, அதைக் காலம் முழுவதும் மனதில் சுமந்து கொண்டிருக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள். பேச வேண்டிய இடத்தில் பேசாமல், கேட்க வேண்டிய இடத்தில் கேட்காமல் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாமல் இருத்தலுக்கு பெயர் முதிர்ச்சியோ, பக்குவமோ அன்று. அது இன்னொரு மாதிரியான கோழைத்தனம்.
மனதில் தோன்றுகின்ற சிறுசிறு விஷயங்களை கேட்பதன் மூலம் தன்னை அடுத்தவர்கள் தவறாக நினைப்பார்களோ என்றொரு எண்ணம் நமக்கு வருகிறது. உரிமைப்பட்டவர்களிடம், நட்புக்கு உரியவர்களிடம்தான் அந்தக் கேள்வியை நாம் எழுப்புகிறோம். அப்படி ஒரு கேள்வியை எழுப்புவதால் அவர்கள் நம்மை தவறாக புரிந்துகொள்ளப்போவது இல்லை.
பேச வேண்டிய இடத்தில் பேசாமல் போவதால் ஏற்படக்கூடிய அந்த வெற்றிடத்தில், கற்பனையும் பொய்யும் வந்து புகுந்து கொள்ளுகிறது. அது பல்வேறு குழப்பங்களை உண்டாக்குகிறது. குழப்பங்கள் அதிகரிக்கிறபோது இடைவெளி அதிகரிக்கிறது. இடைவெளி அதிகரிப்பதால், பேசித் தீர்க்கவேண்டிய விஷயம் பேசப்படாமலேயே நிற்கிறது. கற்பனைகள் அதிகரித்துக் கொண்டே போக, இடைவெளிகள் அதிகரித்துக்கொண்டே போக, ஒரு கட்டத்தில் எந்த காரணமும் இல்லாமல், உறவுக்குள் சிக்கல் விழுகிறது.
மிகச்சாதாரண விஷயம், கேட்பதற்கோ. சொல்லுவதற்கோ சங்கடப்பட்டால், கற்பனைகளாலும், சந்தேகங்களாலும் பெரிதாகி, மலைபோல உயர்ந்து நின்று, மனிதர்களுக்குள்ளே பிணக்குகளை உண்டாக்கிவிடுகிறது.
எதையும் வெளிப்படையாக பேசாத மனிதர்கள் தாங்கள் இருக்கும் சூழ்நிலையையும்கூட இறுக்கமாக்கி விடுகிறார்கள். தங்கள் மனதில் பட்டதை கேட்கவோ பேசவோ விரும்பாத அந்த மனிதர்கள், மற்றவர்களும் அதேபோல் இருப்பது சரியென்று நம்புகிற காரணத்தினால், மற்றவர்களும் தங்களுடைய மனதில் தோன்றுகிற விஷயங்களை அப்படியே மனதுக்குள் புதைத்துக் கொள்கிற மனிதர்களாக மாறிப் போகிறார்கள்.
குறிப்பாக ஒரு குடும்பத்தில் அதிகாரம் அதிகம் படைத்தவர்கள், மனம் விட்டு பேசாதவர்களாக எதையும் வெளிப்படையாக கேட்காதவர் களாக இருக்கிற பட்சத்தில், ஒட்டுமொத்த குடும்பமும் கற்பனையாகவே வாழ்கிறது. அவர் அப்படி செய்வதற்கு இது காரணமாக இருக்கலாம். இவர் இப்படி நடந்துகொள்வதற்கு இந்த சம்பவமே காரணம் என்று, ஒவ்வொருவரும் ஒரு சாதாரண விஷயம் குறித்த பல கற்பனைக் கோட்டைகளை கட்டி வைக்கிறார்கள். அப்படி இருக்கிற காரணத்தினாலேயே வெளிப்புறத்தில் அன்னியோன்யமாக இருப்பதுபோல் நடித்துக் கொண்டாலும், உள்ளுக்குள்ளே ஒருவரைப் பற்றி மற்றொருவர் வைத்திருக்கக்கூடிய பிம்பம் தவறானதாகவே இருக்கிறது.
எப்பொழுதுமே இடைவெளிகள் அதிகரிக்கிறபோது, குழப்பம் ஓடிவந்து அந்த இடத்தைப் பூர்த்தி செய்யப் பார்க்கும். அதற்கு இடம் கொடுக்காதவர்கள் உண்மையால் அந்த இடத்தை இட்டு நிரப்புகிறார்கள். குடும்பங்களுக்குள் அது ரொம்பவும் முக்கியம்.
நட்பு, உறவு, காதல், அலுவலகம் இப்படி எல்லா இடங்களிலும் வெளிப்படையாய் இருங்கள் அப்படி இருப்பதால் நம்மை தவறாக நினைத்து விடுவார்களோ என்று மருகி மருகி பொய்யான குழப்பமான கற்பனையான உலகத்தில் வாழாதீர்கள். பேசுங்கள் பிரச்னை தீர பேசுங்கள்.