
உங்கள் வாழ்க்கையில் நிறைய பிரச்னைகள் வருகிறது. ஆனால், அதற்கான தீர்வு என்னவென்று தெரியாமல் தவிக்கிறீர்களா? ஒரு பிரச்னை முடிவதற்குள் இன்னொன்று என்று தொடர்ந்து வரும் பிரச்னைகளை எவ்வாறு கையாள்வது என்று தெரிய வேண்டுமா? அப்போ இந்த கதையை கொஞ்சம் படியுங்கள்.
ஒரு ஊரில் ஒரு அப்பாவும், பையனும் வாழ்ந்து வருகிறார்கள். என்னதான் அப்பா, மகனாக இருந்தாலும், இருவருமே நண்பர்கள் போலவே பழகி வருகிறார்கள். ஒருநாள் அந்த பையன் மிகவும் சோகமாக இருப்பதை அப்பா கவனிக்கிறார். உடனே அந்த பையனிடம், ‘ஏன் சோகமாக இருக்கிறாய்?’ என்று கேட்கிறார்.
அதற்கு அந்த பையன் அப்பாவிடம், ‘என் வாழ்க்கையில் எனக்கு நிறைய பிரச்னைகள் இருக்கிறது. ஆனால், அவற்றையெல்லாம் எப்படி தீர்ப்பது என்பது புரியவில்லை?’ என்று கூறுகிறான். இதைப் புரிந்துக் கொண்ட அப்பா, ‘இன்றைக்கு இரவு நம் வீட்டில் வளர்க்கும் ஒட்டகங்களை உட்கார வைத்துவிடு. நாளைக்கு நீ கேட்ட கேள்விக்கான பதிலை சொல்கிறேன்’ என்று கூறினார்.
இதைக்கேட்ட அந்த பையன் அன்று இரவு அவன் வீட்டில் இருக்கும் ஒட்டகங்களை உட்கார வைக்க முயற்சி செய்கிறான். அடுத்தநாள் அப்பா பையனிடம், ‘உன்னுடைய அனுபவம் எப்படியிருந்தது?’ என்று கேட்கிறார். அதற்கு மகன் சொன்னான், ‘ரொம்ப மோசமாக இருந்தது. சில ஒட்டகங்களை சுலபமாக உட்கார வைக்க முடிந்தது.
இன்னும் சிலவற்றை முயற்சி செய்து உட்கார வைத்தேன். இன்னும் சில ஒட்டகங்கள் என் பேச்சையே கேட்காமல் அதுக்கு எப்போது உட்கார வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதுதான் உட்கார்ந்தது என்று கூறினான்.
இதைக்கேட்ட அந்த பையனுடைய அப்பா சிரித்துக்கொண்டே சொன்னார், ‘நீ உன் வாழ்க்கையில் எதிர்க்கொள்ளும் பிரச்னைகளும் இப்படித்தான். சில பிரச்னைகள் அதுவாக சரியாகிவிடும். சில பிரச்னைகளை முயற்சி செய்து தீர்க்க வேண்டும். இன்னும் சில பிரச்னைகளை பொறுமையாக இருந்தே தீர்க்க வேண்டும். ஆனால், எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டிப்பாக இருக்கிறது என்று சொன்னாராம். இதை தெளிவாக புரிந்துக்கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துதான் பாருங்களேன்.