தானாகத் தடுக்கி விழுந்த குழந்தை அழுவதில்லை –கால்மிக்.
குழந்தைகள் எப்படித் தெரியுமா? தனக்கு என்ன தோன்றுகிறதோ தனக்கு என்ன பிடிக்குமோ அதை நிச்சயம் அடைந்தே தீருவேன் என்று உறுதியுடன் அதை அடையும்வரை ஓயாது. அதற்காக மற்றவர்கள் தன்னை திட்டுவதையோ அல்லது வேண்டாம் என்று சொல்லி மறுப்பதையோ எதையும் சட்டை பண்ணாமல் தன் இலக்கு ஒன்றையே கவனத்தில் கொண்டிருக்கும்.
அழுதோ அல்லது கெஞ்சியோ அந்த இலக்கை அடைந்த பின் அந்த குழந்தையின் மனநிலை எப்படி இருக்கும் தெரியுமா? வெற்றி பெற்ற குதூகலத்துடன் கைகளைத் தட்டி சிரிக்கும். அந்த பொருள் அப்போது அதற்கு தேவையா என்பதை கூட அறியாது. ஆனால் அதை அடைந்துவிட்ட சந்தோஷத்துடன் வெற்றிப் புன்னகையில் சிரிக்கும்.
இதையே நம்முடன் நாம் பொருத்திப் பார்க்கலாம். குழந்தைகளாக இருந்து பெரியவர்களாக மாறியவர்கள் தானே அனைவரும். குழந்தைகளாக இருந்தபோது இருந்த மனநிலையை ஏன் பெரியவர்கள் ஆனதும் விட்டு விடுகிறோம் அல்லது மறந்து விடுகிறோம்? பெரியவர்களாகி விட்டோம் என்ற எண்ணமா அல்லது அடுத்தவர்கள் ஏதேனும் கூறி விடுவார்கள் என்று அச்சமா?
தனக்குப் பிடித்த விஷயத்தை மனப்பூர்வமாக செய்யவேண்டும் அதைப்பற்றி யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை என்ற மனப்பான்மை தற்போது குறைந்து வருகிறது. தடுக்கி விழும் குழந்தையே விடாமுயற்சியுடன் எழுந்து எதிர்காலத்தில் வெற்றி பெற்ற மனிதர்கள் ஆவார்கள்.
சந்தோஷ்க்கு எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பது பிடிக்கும். நகைச்சுவை உணர்வு மிக்க சந்தோஷ் இன்னும் குழந்தையாகவே இருக்கிறானே என்று அவன் பெற்றோர் கவலைப்பட்டனர். ஆனால் சந்தோஷ் பேசும்போது நல்ல விஷயங்கள் கலந்து இருந்ததால் அவனை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
சந்தோஷ் படிப்பு முடிந்தது அவன் படிப்புக்கு ஏற்ற வேலையை தேடவில்லை. தனக்கான துறை மற்றவர்களை மகிழ்விப்பதுதான் என அறிந்து தனது இலக்கை நிர்ணயித்தான்.
மனங்களை மகிழ்விக்கும் ஒரு பேச்சாளனாக அதுவும் நகைச்சுவை பேச்சாளராக ஆவதற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டான். சிரிப்பு, யோகா தெரபியினால் உடல், மனநல பாதிப்புகளை குணமாக்கும் வித்தைகளை தெரிந்துகொண்டான்.
இப்போது சந்தோஷ் ஊர் முழுவதும் தெரிந்த ஒரு யோகா மற்றும் சிரிப்பு மனவளக்கலை பயிற்றுனர். ஒரு குழந்தைபோல் தனது குதூகலமான வெற்றியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறார்.
சந்தோஷ் போல தங்கள் இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதை அடைவதற்கான முயற்சிகளையும் விருப்பமான வேலைகளையும் எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் செய்யக்கூடியவர்களை நாம் கண்ணை மூடிக்கொண்டு சாதனையாளர்கள் என்று சொல்லிவிடலாம்.
ஏனெனில் அவர்கள் குழந்தையைப்போல் தங்கள் வெற்றியை விடாப்படியாக பெற்று குதாகலத்துடன் அந்த வெற்றியை அனுபவித்து வருபவர்கள். நாமும் குழந்தைபோல மாறினால் நன்மைதானே?