புதிய உடைகளை அல்லது நமக்குப் பிடித்த உடைகளை அணிந்திருக்கும்போது மனம் மகிழ்ச்சி அடையும். நேர்த்தியாக உடை அணிவதால் மட்டும் ஒருவருடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்குமா என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
மதிப்பும், மரியாதையும்;
பொதுவாக நன்றாக நேர்த்தியாக உடை அணிந்து கொள்பவர்கள் பிறர் பார்வையில் மதிக்கப்படுகிறார்கள். நம்முடைய உடை அணியும் விதம் நாம் யாரென பிறருக்கு அறிய வைக்கிறது. நன்றாக உடுத்தி இருக்கும் ஒருவர் திறமைசாலையாக பிறரால் யூகிக்கப்படுகிறார். இது மற்றவரிடையே மரியாதைக்கும் வழிவகுக்கும்.
தன்னம்பிக்கை;
ஒருவர் நன்றாக நேர்த்தியாக உடை அணிந்திருக்கும் போதுதான் மிகவும் அழகாக இருப்பதாக உணர்கிறார். அது அவருடைய முகத்தில் ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது. நல்ல உடல் மொழியுடன் பிறருடன் அவர் பேசவும் தொடங்குகிறார். அவருடைய வார்த்தைகளும் தன்னம்பிக்கை மிகுந்ததாக, சக்தி வாய்ந்ததாக இருக்கும்.
மேம்படுத்தப்பட்ட உடல் மொழி மற்றும் தோரணை;
நன்கு பொருத்தமான ஸ்டைலான ஆடைகளை அணிந்திருக்கும்போது ஒருவரின் உடல் மொழியும் தோரணையும் அவர் அறியாமலேயே மேம்படுத்தப்படும். தான் அணிந்திருக்கும் ஆடையில் வசதியாக உணரும்போது அவர் நேராக நிற்பார். பிறருடைய கண்களைப் பார்த்து பேசுவார். அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் நேர்மறையாகவே வெளிப்படும்.
ஆளுமைத் தன்மை;
பொதுவாக சரியான பொருத்தமான ஆடைகள் ஒருவரின் ஆளுமைத் தன்மையை பிரதிபலிக்கும். அந்த வகையில் ஆடை அணிவது நம்பகத்தன்மையை வளர்க்கும். பிறரிடத்தில் மதிப்பும் மரியாதையும் ஏற்பட வழி செய்யும்.
தனித்தன்மை;
ஒருவர் தான் உடை அணியும் விதத்திலேயே தனது தனித்தன்மையை வெளிப்படுத்தலாம். ஆனால் அந்த ஆடைகள் அவருக்கு பொருத்தமாக இருப்பது மிகவும் அவசியமாகும். உடை அழகாக இருந்து அணிந்திருக்கும் நபருக்கு பொருத்தமாக இல்லாவிட்டால் அது வீண். ஒவ்வொரு மனிதரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள். அவர்களது உடல் அமைப்பும் வேறு வேறு விதமாகத் தான் இருக்கும். எனவே தனக்கு எது பொருத்தமோ அந்த மாதிரி ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியும்போது தன் ஒருவருடைய தனித்தன்மை வெளிப்படும்.
தொடர்புத் திறன்;
ஒருவர் நன்றாக உடை அணிந்தால் மட்டுமே போதாது. அவருடைய கண்ணியமான தகவல் தொடர்புத் திறன்களும் மிகவும் அவசியம். இல்லையென்றால் அவர் அணிந்திருக்கும் ஆடைக்கும் நடந்து கொள்ளும் விதத்திற்கும் சிறிது கூட சம்பந்தமில்லை என்று பிறர் விமர்சிக்கக்கூடும்.
யாரையும் காயப்படுத்தாத மரியாதையான உடல் மொழி மிகவும் அவசியம். பிறரை நோகடிப்பது போல அல்லது கேலி செய்வதை போன்ற முக பாவனைகள், அலட்சியமான தோரணைகள் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். எத்தனை உயர்தர ஆடைகள் அணிந்திருந்தாலும் அது அனைத்தும் வீண்தான். அதேபோல பேசும் வார்த்தைகளிலும் மிகுந்த கவனம் தேவை. யாரையும் தூக்கி எறிந்து பேசுவது அல்லது காயப்படுத்துவது போல ஒரு வார்த்தை சொன்னாலும் அது மரியாதையை இழக்கச் செய்துவிடும்.
அதேபோல மனதிற்குள்ளே தீய எண்ணங்களை வைத்துக்கொண்டு கூட்டத்திற்காக நல்ல விதமாக நடித்துக் கொண்டிருந்தால் அதுவும் கண்களிலும் உடல் மொழியிலும் வெளிப்பட்டு விடும்.
எனவே ஒருவருக்கு நேர்மறை சிந்தனை மிகவும் அவசியம். நல்லவிதமான எண்ணங்களும் நடத்தையும் தான் ஒரு மனிதரின் செயல்களை தீர்மானிக்க உதவுகின்றன. எனவே அழகாக உடை உடுத்தினால் மட்டும் போதாது. நல்ல கண்ணியமான மிகவும் நடத்தையும், தோரணையும், செயல்களும்தான் ஒருவருக்கு மதிப்பும் மரியாதையும் தருகிறது.