வாழ்த்துவதை வழக்கமாக்கிக் கொள்வோம்!

Let's make it a habit to congratulate!
congratulations...Image credit - pixabay
Published on

பிறர் நலமாக வாழவேண்டும் என்ற எண்ணத்தோடு ஒலிக்கும் ஒலி வாழ்த்து என்ற சொல்லாகும். அதனுடன் வளமுடன் என்று சேர்க்கும்போது எல்லா பேறுகளையும் நீங்கள் பெற்று வாழ வேண்டும் என்கிற பொருள் அமைகிறது.

வாழ்த்து என்பது எல்லா மந்திரங்களையும் விட சிறந்த திருமந்திரம் ஆகும் - வேதாத்திரி மகரிஷி 

வாழ்த்தி வாழ்த்தி, ஒருவருடைய செயல்களைத் திருத்திவிடமுடியும். வாழ்த்தி வாழ்த்தி, அவருடைய எண்ணங்களை எல்லாம் ஒழுங்குபடுத்திவிட முடியும் வாழ்த்தி வாழ்த்தி, எப்பேர்ப்பட்டவர்களையும் நண்பர்களாக மாற்றிவிட முடியும்.

வாழ்த்து சம்பந்தமான ஒரு கதையைப் பார்ப்போம். 

ஒரு ஊரில் ஒரு பெரிய சந்தன வியாபாரி இருந்தார். அவர் தினமும் தனது மனைவியிடம் இந்த நாட்டு அரசர் எப்பொழுது இறப்பார் என்று கூறிக் கொண்டிருப்பார். அரசர் இறந்தால் அவரை சந்தன கட்டைகளைக் கொண்டு எரிப்பார்கள். எனக்கு மிகப் பெரிய லாபம் கிடைக்கும் என்று கூறிக் கொண்டிருப்பார். 

அந்த ஊரின் அரசர் வாரம்தோறும் இராஜபாட்டையில் யானையில் இராஜ பவனி வருவார். அந்த இராஜபாட்டையில்தான் அந்த சந்தன வியாபாரியின் சந்தனக் கடையும் இருந்தது. தனது அமைச்சரைக் கூப்பிட்டு அரசர் சொன்னார். 

"என்னமோ தெரியவில்லை அமைச்சரே! இந்தச் சந்தன வியாபாரியின் கடையை கடக்கும் பொழுது எனக்கு ஒரு எரிச்சலான உணர்வு ஏற்படுகிறது. பொருந்தா உணர்வு உண்டாகிறது" என்றார் அரசர். அமைச்சர் இதைக் குறித்து விசாரிப்பதாக சொன்னார்.

உடனே, அமைச்சர் இதைக் குறித்து விசாரிக்க ஒற்றர்களை ஏற்பாடு செய்தார். சந்தன வியாபாரி தனது மனைவியிடம் தினந்தோறும் அரசர் இறப்பதை எதிர் நோக்குவதைப் பற்றி கூறியது அமைச்சருக்குத் தெரியவந்தது.

அமைச்சர் அந்த சந்தன வியாபாரியை அழைத்து அவருக்கு அறிவுரை கூறினார். 

"வியாபாரியே! நீங்கள் தினமும் அரசருக்கு எதிராக எதிர்மறையான சிந்தனையை விதைக்கிறீர்கள். அரசரின் இறப்பை எதிர்நோக்குகிறீர்கள். இது அரசருக்குத் தெரியவந்தால் நீங்கள் கொல்லப்படவும் வாய்ப்பு உண்டு. எனவே அரசருக்கு எதிராக நேர்மறை சிந்தனைகளை விதையுங்கள். அரசர் நன்றாக வாழவேண்டும் என்று வாழ்த்துங்கள். அதன் மூலம் பெரிய சந்தன மண்டபங்கள் கட்டுவார். சந்தன சிலைகள் செய்வார். அதன் மூலம் எனக்கு சந்தன வியாபாரம் நடக்கும் என்று அரசரை வாழ்த்துங்கள் என்று அறிவுரை கூறினார். சந்தன வியாபாரியும் தனது தவறை உணர்ந்து அன்று முதல் அரசரை வாழ்த்த தொடங்கினார்.

அடுத்த வாரம் இராஜபவனி வந்தது. அரசர் அமைச்சரைக் கூப்பிட்டார்.

"என்ன ஆச்சரியம் அமைச்சரே!சந்தன வியாபாரியின் கடையைக் கடக்கும்போது எனது மனதில் குளிர்ச்சியான எண்ணம் ஏற்படுகிறது. நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்?" என்றார் அரசர்.

அமைச்சர் நடந்ததைக் கூறினார்.‌ பின்வருமாறு தொடர்ந்தார்.

இதையும் படியுங்கள்:
வெற்றியின் வலிமையான சொல் எது தெரியுமா?
Let's make it a habit to congratulate!

"அரசரே! முன்பு அந்த சந்தன வியாபாரி உங்களுக்கு எதிராக எதிர்மறை சிந்தனை வைத்தார். இப்பொழுது நேர்மறை சிந்தனை வைப்பதனால் நல்லதொரு சுமூக உறவு உங்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்டுள்ளது" என்றார் அமைச்சர்.

மிக்க மகிழ்ச்சி அடைந்த அரசர் அந்தச் சந்தன வியாபாரிக்கு சந்தன மண்டபமும் சந்தன சிலைகளும் உடைய பெரிய கோவில் கட்டுவதற்கு ஒரு பெரிய ஒப்பந்தத்தைக் கொடுத்தார். சந்தன வியாபாரியும் வாழ்த்தின் மகத்துவத்தை நினைத்து நன்றி கூறினார்.

வாழ்த்து என்கிற எண்ணம் இருவருக்கு இடையில் சுமூகமான உறவை ஏற்படுத்துகிறது. 

வாழ்த்துவதை வழக்கமாக்கிக் கொள்வோம். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com