
சிலர் ஏதேனும் வேலை கொடுத்தால் சாக்குபோக்கு சொல்லி தள்ளி விடுவார்கள். சாக்கு என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு. சாக்கு போக்கு சொல்லுதல் என்றால் ஒன்றை செய்யாமல் வளர்த்து விடுதல் இன்னொன்று சாக்குப்பை. சிலர் கொடுத்த வேலையை செய்யாமல் இருக்க சாக்கு போக்கு சொல்வார்கள். அதாவது போலி காரணங்கள் சொல்லி தவிர்ப்பார்கள். ஏதேனும் முக்கியமான வேலையை மறந்து விட்டிருந்தால் ஒரு காரணம் சொல்லி இதனால்தான் என்னால் செய்ய முடியவில்லை என்று சாக்கு சொல்வார்கள்.
வீட்டிலே கூட நாம் ஒரு வேலையை நம் வீட்டில் உள்ளவர்களிடம் கொடுத்திருப்போம். அவர்கள் செய்ய மறந்துவிட்டு அதை சமாளிக்க இன்னிக்கி உங்க பையன் ரொம்ப படுத்திட்டான். சமாளிக்க முடியவில்லை. அதனால்தான் இதை செய்ய முடியவில்லை. நாளை நிச்சயம் செய்து விடுகிறேன் என்பார்கள். இதனால் இழப்புகள் என்று பார்த்தால் பெரிதாக ஒன்றும் ஏற்படாது. நம் நிம்மதியும் குலையாது.
ஆனால் கால இழப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால் இதையே முக்கியமான ஒரு வேலையை ஒருவரிடம் கொடுத்திருப்போம். அதை செய்ய மறந்துவிட்டார்கள் அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கும். அதை ஒத்துக் கொள்ளாமல் ஒரு போலி காரணம் சொல்லி வைப்பார்கள். இதனால் பெருமளவில் நஷ்டம் ஏற்படும் என்றால் கவனமாக இருக்கவேண்டும்.
ஒருவரிடம் ஏதேனும் ஒரு காரியத்தை செய்ய ஒப்படைத்தால் அதை பொறுப்பாக செய்யாமல் இருப்பதும், கேட்டால் ஏதாவது வலுவற்ற, நம்மால் ஒப்புக்கொள்ள முடியாத காரணங்களை சொல்லி தட்டிக் கழிப்பார்கள். இம்மாதிரி ஆசாமிகளிடம் நாம் ஏதேனும் வேலைகளை கொடுக்கும் முன்பு நிச்சயம் இந்த வேலையை முடித்து விடுவாயா? முடியாவிட்டால் இப்போதே சொல்லிவிடு நான் வேறு ஆள் பார்த்துக் கொள்கிறேன்.
இப்ப சரின்னு ஒத்துண்டு பின்னாடி ஏதேனும் சால்ஜாப்பு சொல்லக்கூடாது என்று கறாராக சொல்லிவிட வேண்டும். ஏனென்றால் சிலர் செய்வதாக ஒத்துக் கொண்டு செய்யாமல் காரியத்தை இழுத்தடிப்பார்கள். அதற்கு நொண்டிசாக்கும் சொல்வார்கள். இது நம் வேலையை, நம் முன்னேற்றத்தை பாதிக்கும்.
இப்படி சாக்குப் போக்கு சொல்வதை நிறுத்திவிட்டு, செய்ய முடியாததற்கான காரணத்தை தேடுவதை நிறுத்திவிட்டு, செயல்களை செயல்பட வைப்பதற்கும், சிறந்த முறையில் முன்னேறுவதற்கும் வழிகளைக் கண்டறிய வேண்டும். இல்லையெனில் அந்த சாக்கு போக்குகள் நம் வாழ்க்கையை நிறையவே பாதிக்கும். ஒரு வேலையை செய்து முடிக்காமல் இழுத்தடிப்பதால், இப்படி சாக்குபோக்கு கூறுவதால் நமது திறனை மூடி மறைக்கிறோம். அதாவது காரியங்களை செய்து முடிப்பதற்கான நமது திறனை பற்றி நாமே சந்தேகம் கொள்கிறோம். போகப்போக இது நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கும்.
கொடுத்த வேலையை செய்வதற்கு போதுமான நேரம் இல்லை என்று சாக்கு சொல்வோம். உண்மையில் நம் அனைவருக்கும் நிறையவே நேரம் இருக்கிறது. ஆனால் நம் செயல்களை நியாயப்படுத்துவதற்காக இப்படி சொல்கிறோம்.
அடுத்ததாக போதுமான அளவுக்கு பணம் இல்லை என்று சொல்வோம். உழைப்பும் புத்திசாலித்தனமும் சேர்ந்து கடினமாக வேலை செய்யும் பொழுது அதற்கான பலன் கிடைக்கும். மூன்றாவதாக கொடுத்த வேலையை எப்படி செய்வது என்று தெரியவில்லை என்று சாக்கு சொல்வோம். இப்படி சாக்கு போக்கு செல்வதற்கு பதிலாக அதைத் தெரிந்து கொள்வதற்கான வேலையில் இறங்கி பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். எனவே சாக்கு சொல்வதற்கு பதிலாக வேலையை எப்படி செய்வது என்று சிந்தித்து செயல்படலாமே.