
சந்தோஷம் அது எங்கே இருக்கிறது. இதில் இருக்கிறது, அதில் இருக்கிறது. அங்கே போனால் கிடைக்கும். இங்கே போனால் கிடைக்கும். என நாம் இன்னும் தேடுதலில்தான் இருக்கிறோமே தவிர சந்தோஷத்தை அடையவில்லை என்று கூறினால் அது மிகையில்லை. சரி வேறு எங்குதான் இருக்கிறது சந்தோஷம் என்று உங்கள் மனதில் கேள்வி எழலாம் இதோ இப்பதிவில் இருக்கும் 13 இல்தான் இருக்கிறது சந்தோஷம்.
1. ஒழுங்கான வாழ்க்கை என்பது ஏறும் ஏணி போன்றது. கீழிருந்ததைவிட பாதித்தூரம் ஏறிய பின்னர் காட்சி மேலாகத் தெரிகிறது. மேலும் மேலும் ஏறினால் தொடுவானம் விரிவடைந்து காட்சி உன்னதமாக விரிவடைகிறது.
2. எதிர்காலத்தில் நேரம் கிடைத்தால் சந்தோஷமாக இருக்கலாம் என்று எண்ணியபடி பலர் தங்கள் வாழ்வை எதிர்ப்பார்ப்பிலேயே வைத்திருக்கிறார்கள். ஆனால் நிகழ்காலம் மற்ற காலங்களைவிட மேலானது என்பதை பலரது அறிவு கண்டுபிடிக்காமலே இருக்கிறது.
3. சந்தோஷமாக இருப்பவனை கூர்ந்து அவதானியுங்கள். அவன் ஒரு நாளின் 24 மணி நேரமும் எதையோ செய்து கொண்டிருப்பான். தொலைந்துவிட்ட சட்டைப்பட்டனை தேடுவதுபோல சந்தோஷத்தை எங்கோ தேடிக்கொண்டிருக்கமாட்டான்.
4. சந்தோஷத்தின் ஊற்றை தனக்குள்ளே அதிகம் காணக்காண மனிதன் அதிக இன்பமடைகிறான். மிக உயர்ந்த, பலதரப்பட்ட நீடித்திருக்கும் இன்பங்கள் மனதில் இருந்து எழுபவையே.
5. யார் அதிகம் சிந்தித்து, உயர்ந்த உணர்வுகளை உணர்ந்து, சிறந்து செயற்படுகிறார்களோ அவர்களே உன்னத வாழ்வு வாழ்கிறார்கள்.
6. தன் சக மனிதர்களுக்கான சேவையில் தன் அகந்தையை அர்ப்பணிக்காதவரை யாருமே வாழ்வின் அர்த்தத்தைக் கற்பதில்லை.
7. நல்ல வாழ்விற்கு செயற்பூர்வமான மனிதநேயம் என்ற நற்குணம் தேவை. இதுதான் வாழ்விற்கான தங்கமயமான வழி. இதுதான் திருப்திகரமான வாழ்வு, மனிதராய் பிறந்தவர் சந்தோஷமாய் இருக்க இதுதான் வழி.
8. அடுத்தவர்களுக்காக நாம் சிந்தித்து அவர்களுக்காக ஏதாவது செய்யாவிட்டால், சந்தோஷத்திற்கான சிறந்த வழியை இழந்து விடுகிறோம்.
9. பெறுவதிலோ, வைத்திருப்பதிலோ இல்லை. தருவதில்தான் சந்தோஷமே இருக்கிறது.
10. சந்தோஷம் என்பது நறுமணம் தரும் திரவியம் போன்றது. உங்கள் மீது அதனுடைய சில துளிகளாவது படாமல் உங்களால் அடுத்தவர் மீது அதைத் தெளிக்க முடியாது.
11. சந்தோஷத்தை வாங்க முடியாது, உண்மையில் பணத்திற்கும், அதற்கும் சம்மந்தமே இல்லை.
12. வாழும் சூழல், ஊதிய உயர்வு. பொருளாதாரம், அரசாங்கத்தை மாற்றுவது போன்றவற்றிலே மனிதர்கள் கவனமாக இருக்கிறார்கள். தன்னைத்தானே மேம்படுத்திக்கொள்வதில் அவர்கள் கவனமெடுப்பதில்லை.
13. சந்தோஷம் உள்ளிருந்து வருகிறது. எளிய நல்ல குணம் தெளிவான சிந்தனையால் வருகிறது. மதம் அதற்கு தேவையில்லை, ஆனால் எங்கிருந்தாலும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்காத ஒருவரிடம் அது வந்ததாக சரித்திரம் இல்லை.