
காற்றை எதிர்த்தே பட்டங்கள் மேலே செல்கின்றன. பிரச்னைகளைக் கண்டு பயந்து பின்வாங்காதீர்கள். பிரச்னைகளைக் கண்டு பயந்து ஒதுங்குவது மோசமானது. முன்வைத்த காலை பின் வைக்கும் பழக்கம் கூடாது. எதிர்ப்படும் சவால்களில் விடாப்பிடியாக உறுதியுடன் இருந்து வெற்றியை நமக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
பெரும்பாலும் வாழ்க்கையில் ஏதேனும் பிரச்னை என்றால் அதை விட்டு தூர விலகவே எண்ணுவோம். பிரச்னைக்கு தீர்வு தெரியவில்லை என்றால் "நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிடு" என்று நம்மைச் சுற்றியுள்ளவர்களும் சொல்வதை கேட்டிருக்கிறோம். பிரச்னையை நாம் விட்டுவிடலாம். ஆனால் பிரச்னைகள் நம்மை அவ்வளவு சுலபமாக விட்டுவிடாது.
சவால்கள், பிரச்னைகள் என வந்துவிட்டால் அதை ஒவ்வொருவரும் கையாளும் விதமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சிலர் பிரச்னை என்றாலே பயந்து ஓடிவிடுவார்கள். ஒரு சிலர் சவால்கள் என்றாலே உற்சாகமாகி களத்தில் குதித்து விடுவார்கள். இன்னும் சிலரோ நமக்கு எதற்கு வம்பு என ஒதுங்கி விடுவார்கள். துணிச்சல் மிக்கவர்கள்தான் முடிந்தவரை போராடி பார்ப்போம் என்று முயற்சி செய்வார்கள்.
விடா முயற்சி, எடுத்த காரியத்தை உறுதியாக இருந்து முடிப்பது, எதற்கும் பயந்து பின் வாங்காமல் இலக்கை எட்டிப் பிடிப்பது, எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் தைரியம் அவசியம் வேண்டும்.
துணிவு நம்மை உழைப்பில் உயர வைக்கும். துணிவுடன் பணிவும் இருந்தால் நம்மை பிறர் மனதில் உயர வைக்கும். பிரச்னைகளை தைரியமாக எதிர்கொள்ள பழக வேண்டும். பிரச்னை என்று ஒன்று இருந்தால் தீர்வு என்பதும் நிச்சயம் இருக்கும். எனவே பிரச்னைகளைக் கண்டு பயந்து பின்வாங்காதீர்கள்.
பயத்தால் எதையும் சாதிக்க முடியாது. துணிந்து எதிர்கொண்டு போராட வேண்டும். பிரச்னைகள் தான் நம் வாழ்க்கையின் தரத்தை உயர்த்தும். ஒவ்வொரு பிரச்னையின் முடிவிலும் அழகான அனுபவம் ஒன்று கிடைக்கிறது. முதலில் என்ன பிரச்னை என்று பதட்டப்படாமல் நின்று நிதானமாக அலசி ஆராய்ந்தால் அதற்கான தீர்வும் எளிதில் கிட்டிவிடும்.
உண்மையில் பிரச்னைகளை தவிர்க்க நினைப்பது அந்த சிக்கலை தீர்க்க உதவாது. மாறாக அதிகப்படுத்துவதுடன் மன அழுத்தத்தையும் உண்டாக்கும். பிரச்னைகளை சமாளிக்க அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு அந்தப் பிரச்னையில் இருந்து வெளிவர புதிய உத்திகளைக் கையாண்டு பார்க்க வேண்டும். முடிந்தால் முடியாதது எதுவும் இல்லை!
இவற்றிலிருந்து விடுபட நம் நம்பிக்கைக்கு உரிய நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரிடம் நம் பிரச்னைகளைப் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்ளலாம். இது நம் மன அழுத்தத்தை குறைப்பதுடன் நம் மீது அக்கறை உள்ளவர்கள் கொடுக்கும் ஆலோசனைகள் அந்த பிரச்சனையிலிருந்து நம்மை வெளிவர உதவக் கூடும்.
சிலர் பிரச்னைகளைக் கண்டு மனம் நொந்து விரக்தி அடையவோ, கவலைப்படவோ அல்லது கோபம் கொள்ளவோ செய்வார்கள். இதனால் ஒரு பயனும் இல்லை. எனவே மூல காரணத்தைக் கண்டறிந்து அதனை வேரோடு அழிக்க முயலவேண்டும்.
இதற்கு முதலில் நாம் சுவாசத்தில் கவனம் வைக்க வேண்டும். மனம் அமைதி கொண்டதும் நிதானமாக அதற்கான தீர்வைப் பற்றி சிந்திக்க வேண்டும். மனம் தெளிவு பெற்றால் பிரச்னைகளை எளிதில் சுலபமாக தீர்க்க முடியும்.
காற்றை எதிர்த்தே பட்டங்கள் மேலே பறக்கின்றன என்பதை மறக்காதீர்கள்!