
நாம் வாழ்க்கையில் நிறுத்தி நிதானமாக எடுக்கும் முடிவுகள்தான் நன்மையைத்தரும். அவசரமாக எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தையும் பாழாக்கிவிடும். எனவே, நம் வாழ்வில் நாம் எடுக்கும் முக்கிய முடிவுகளில் அவசரம் காட்டவேண்டாம். இதை தெளிவாக புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒருநாள் குதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வண்டிக்காரன் ஒருவன் வேகமாக வந்துக்கொண்டிருந்தான். அப்போது வழியில் ஒரு குறுக்குப்பாதை வந்தது. அங்கே ஓரமாக ஒரு சிறுவன் நின்றுக்கொண்டிருந்தான். அவனிடம் வண்டிக்காரன், ‘தம்பி! இந்த சாலையில் சென்றால் ஊர் வருமா?’ என்று கேட்க, அதற்கு சிறுவனும் ‘வருமே’ என்று கூறினான்.
சரி, ஊர்போய் சேருவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று வண்டிக்காரன் கேட்டான். அதற்கு சிறுவனோ, ‘மெதுவாக போனால் பத்து நிமிடத்தில்போய் சேர்ந்துவிடலாம். ஆனால், வேகமாக போனால் அரைமணி நேரம் ஆகும்’ என்றான்.
அந்த சிறுவன் சொன்ன பதிலைக்கேட்ட குதிரை வண்டிக்காரனுக்கு கோபம் வந்தது. ‘என்ன கிண்டலா? அது எப்படி வேகமாக சென்றால் நேரம் அதிகமாகும்’ என்று கேட்டான். அதற்கு சிறுவனும், ‘போய்தான் பாருங்களேன்’ என்று சொன்னதும் வண்டிக்காரன் வண்டியை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றான். கொஞ்ச தூரம் சென்றதுமே சாலை முழுக்க கற்கள் கொட்டியிருந்தது. வண்டிக்காரன் வண்டியில் வேகமாக சென்றதால், வண்டி தடுமாறி கவிழ்ந்தது. வண்டியிலிருந்த தேங்காய் எல்லாம் கீழே சிதறி ஓடியது.
இதனால் அவன் வண்டியை நிமிர்த்தி கீழே சிதறி கிடந்த தேங்காயை எல்லாம் எடுத்துக்கொண்டு போவதற்கு அரைமணி நேரம் ஆகிவிட்டது. வண்டிக்காரனுக்கு சிறுவன் சொன்ன வார்த்தைகளுடைய அர்த்தம் அப்போது புரிந்தது.
இந்தக் கதையில் சொன்னதுப்போல, அவசரமாக எடுக்கும் முடிவுகள் எல்லாவற்றையும் கொட்டி கவிழ்த்துவிடும். எனவே, வாழ்க்கையில் நிறுத்தி நிதானமாக செல்வது மிகவும் அவசியமாகும். அதனால் நமக்கு நஷ்டம் ஏற்பட போவதில்லை. நாம் தொடங்கிய காரியத்தையும் முழுமையாக செய்து முடிக்க முடியும். இதை தெளிவாக புரிந்துக்கொண்டால், வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்.