
நம்மை சுற்றி நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஒருநாள் அவை நம் வாழ்வில் இல்லாமல் போகும்போதே அதன் முக்கியத்துவம் என்னவென்பது நமக்கு புரிகிறது. எனவே, நம்மை சுற்றியுள்ள நல்ல விஷயங்களை கவனிக்க கற்றுக் கொள்ளுங்கள். இதை தெளிவாக புரிந்துக் கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒருநாள் கடலில் வாழும் குட்டி மீன் ஒன்று அம்மா மீனிடம் சென்று, 'அம்மா! நாம் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் மிகவும் முக்கியம் என்று சொல்கிறார்களே! அந்த தண்ணீர் எங்கே இருக்கிறது?' என்று தன்னுடைய சந்தேகத்தை கேட்டது. அதற்கு அம்மா மீன், ‘இதோ! நம்மை சுற்றியிருக்கிறதே இதுதான் தண்ணீர்’ என்று சொன்னது.
இதைக்கேட்ட குட்டி மீன், 'நம்மை சுற்றி தண்ணீர் இருக்கிறது என்று சொல்கிறீர்கள். ஆனால், எனக்கு எதுவுமே தெரியவில்லையே?' என்று சொன்னது. சரி, 'நான் அப்பாவிடம் போய் கேட்கிறேன்' என்று சொல்லிவிட்டு அப்பா மீனிடமும் வந்து அதே கேள்வியைக் கேட்டது. அதற்கு அப்பா மீனும் அம்மா சொன்ன அதே பதிலை சொல்ல குட்டி மீனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
அந்த சமயம் அங்கே ஒரு சுறாமீன் போக அதனிடமும் இந்த குட்டி மீன் அதே கேள்வியை கேட்டது. அதற்கு அந்த சுறாமீன் இந்த குட்டி மீனை தன் முதுகில் சுமந்துக்கொண்டு கடலின் மேல்பகுதிக்கு வந்து நீந்தியது. தண்ணீரின் மேல் பகுதிக்கு வந்ததும் குட்டி மீனால் சுவாசிக்க முடியவில்லை. அது மூச்சுவிட முடியாமல் திணறியது. இதைப்பார்த்த சுறாமீன் கடலுக்குள் திரும்ப மூழ்கியது. இப்போது சுறாமீன் குட்டி மீனைப்பார்த்து, ‘இப்போது புரிகிறதா? இதுதான் தண்ணீர்’ என்று சொன்னது.
இந்தக் கதையில் சொன்னதுப்போல, நம்மை சுற்றி எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கிறது. ஆனால், அவற்றை நாம் கண்டுக்கொள்வதில்லை. அதன் முக்கியத்துவத்தை நாம் உணருவதில்லை. ஒருநாள் அது இல்லாமல் போகும் போதுதான் அதன் அருமை புரிகிறது. எனவே, நல்ல விஷயங்களை கவனியுங்கள். இதைப் புரிந்துக்கொண்டு செயல்பட்டால் வாழ்க்கை நலமாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.