உங்களை இனிமே தலையாட்டி பொம்மைன்னு சொன்னா கோபப்படாதீங்க!

Motivation Image
Motivation Image

சிறுவயதில் தஞ்சாவூருக்கு செல்லும் போதெல்லாம் தலையாட்டி பொம்மை வாங்கி தரச் சொல்லி அடம்பிடிப்பதுண்டு. அந்த பொம்மையை அப்போது பார்க்கும்போது அதிசயமாக இருக்கும். எப்படி இந்த பொம்மை மட்டும் ஒவ்வொரு முறை கீழே சாயும் போதும் திரும்ப எழுந்து கொள்கிறது என்று அதிசயித்து போயிருக்கிறேன்.

இந்த தலையாட்டி பொம்மை பார்பி பொம்மை போன்று விலை அதிகம் கிடையாதுதான். இந்த பொம்மையை களி மண்ணால்தான் செய்திருக்கிறார்கள். எனினும் இது சொல்லி தரும் பாடம் விலை மதிப்பில்லாததாகும்.

ஒவ்வொரு முறை தலையாட்டி பொம்மையை கீழே தள்ளி விடும் போது அடுத்த நொடி எழுந்துவிடும். மற்ற பொம்மைகளையெல்லாம் கீழே தள்ளி விட்டால் விழுந்து விடுமல்லவா? அதுதான் தலையாட்டி பொம்மையின் சிறப்பாகும். அறிவியலின்படி சொன்னால், இதற்கு சென்டர் ஆப் கிரேவிட்டி தான் காரணம்.

ஆனால் தத்துவத்தின்படி சொன்னால் இது விடாமுயற்சியை குறிக்கிறதல்லவா? ஆம். இது நம் வாழ்க்கைக்கும் பொருந்தும். ஒவ்வொரு முறை தோல்வியடைந்து கீழே விழும் போதும் உடனே எழுவதற்கான உத்வேகம் வேண்டும். பெரிய பணக்காரர்கள், தொழிலதிபர்கள் போன்ற ஜாம்பவான்களை பாருங்களேன். அவர்களுக்கெல்லாம் சாதாரணமாக அந்த இடம் கிடைத்து விடவில்லை. தோல்வியடைந்து கீழே விழுந்தாலும் உடனே சுதாரித்துக் கொண்டு எழுந்திருப்பார்கள். ஒரு தடவை தோல்வியடைந்திருந்தாலும் ஆயிரம் முறை, ஆயிரம் வழிகளில் முயற்சி செய்ய தயாராக இருப்பார்கள்.

எத்தனை பேர் காலை வார முயற்சித்தாலும் இல்லை காலை வாரி விட்டாலுமே திரும்ப எழுந்து நிற்க கற்றுக்கொள்ள வேண்டும் தலையாட்டி பொம்மையை போலவே. சுயநலவாதிகள் நிறைந்த உலகத்தில், நீங்கள் எப்போது தோற்று போவீர்கள், எப்போது வீழ்வீர்கள் என்று காத்து கிடக்கும் கூட்டத்தின் மத்தியில் நீங்கள் தேல்வி அடைந்தாலும் வீழ்ந்தே கிடப்பதே தவறாகும்.

எனவே, தஞ்சாவூர் பொம்மையை போல இருக்க கற்று கொள்ளுங்கள். வீழ்ந்தாலும் திரும்பி எழுந்து விடுங்கள். அதுவே மிக முக்கியமாகும். நீங்களாக ஒரு செயலை செய்வதை நிறுத்த வேண்டும் என்று நினைக்கும் வரை யாராலும் உங்களை தடுக்க இயலாது.

இதையும் படியுங்கள்:
முட்டை இல்லாத Brownie, செய்ய கொஞ்சம் கவனி! 
Motivation Image

தோல்வியை கண்டவர்களுக்கு வெற்றி என்பது சற்று இளைப்பாறக்கூடிய இடமேயாகும். ஏனெனில் அவர்கள் போக வேண்டிய தூரம் இன்னும் உள்ளது. வாழ்க்கையில் நிறைய தோல்வியை கண்டவர்களை எப்போதும் ஒரேயொரு வெற்றி தடுத்து நிறுத்திவிட போவதில்லை. அவர்கள் போகும் பாதை நீளம் என்பதை தோல்விகள் கற்றுக்கொடுத்திருக்கும்.

எனவே அடுத்த முறை தலையாட்டி பொம்மை என்று உங்களை யாராவது கிண்டலாக சொன்னால் கூட தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அதன் மேன்மையை இன்னும் அவர்கள் உணரவில்லை என்றே அர்த்தம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com