தோல்விகளுக்கு இடையில்தான் வாய்ப்புகள் மறைந்துள்ளது. அதனால் தோல்விகளுக்கு அஞ்சாதே - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
தோல்விகள் என்று எதைக் கூறலாம். மகேஷ் எனும் இளைஞர் தனது இலக்கை நோக்கி பயணிக்கும்போது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தோல்வி அடைகிறார். இதை தோல்வி என்னும் கணக்கில் சேர்க்கலாமா? இல்லை. இந்த பயணத்தின்போது அவர் பெற்ற அனுபவங்கள் அல்லது அறிஞர் ஆல்பர்ட் கூறியதுபோல் அதில் ஒளிந்திருக்கும் வாய்ப்புகள் அவருக்கு வேறொரு வழியில் வெற்றியை தேடித் தரும். இது மகேசுக்குத் தோல்வி அல்ல.
மகேஷ் நண்பர் ஒருவர். இவரும் மகேஷ் அளவுக்கு படித்து அறிவில் சிறந்தவர்தான். ஆனால் அவருக்கு ஏற்ற வேலை எது என்பதை தேர்வு செய்யாமல் தனது சித்தப்பா வைத்திருக்கும் ஒரு ஷோ ரூமில் தினசரி போய் அமர்ந்து அந்த ஷோரூமை பராமரிப்பது முதல் அனைத்து பணிகளையும் செய்கிறார். அவர் படித்ததோ தொழில்நுட்பம். இதனால் இவருக்கு என்ன லாபம்? சித்தப்பா மீது கொண்ட பாசத்தினால் அங்கு சென்று நேரங்களை விரயம் செய்வது அவரின் கவனத்திற்கு வரவில்லை. ஆனால் அவரின் தந்தை தாய் முதல் அனைவரும் இப்படி இவனுடைய உழைப்பை கொண்டுபோய் "விழலுக்கு இறைத்த நீராக போடுகிறானே" என்று புலம்பாமல் இல்லை.
உழைப்புக்கான தகுந்த சம்பளம் இன்றி செய்யப்படும் எந்த வேலைக்கும் மரியாதை என்பது இருக்காது மதிப்பும் இருக்காது இதை சுரேஷ் புரிந்து கொள்ளவில்லை. இதுதான் தோல்வி வகையில் சேரும்.
இப்படித்தான் ஒரு சிலர் தங்களது உழைப்பை எதற்காக தருகிறோம் என்றே தெரியாமல் அடுத்தவர்களுக்காக தங்கள் நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பார்கள். உதாரணமாக நடிகர்கள், அரசியல்வாதிகளின் கவர்ச்சியில் மயங்கி அவர்களைப் பின் தொடர்ந்து தங்கள் உழைப்பை தந்து பின்னர் அவதிப்படுகின்றனர்.
நிலத்தில் நல்ல மகசூல் கிடைக்க வேண்டும் எனில் நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், (விழல் = களை) களையப்படவேண்டிய நமக்கு அவசியமற்ற பயிர்களுக்கு நீரூற்றுவதால் எந்த பயனுமில்லை. இதனால் மேய்ச்சலுக்கு உதவாத விழல் என்ற புல் மட்டும் விளையத் துவங்கும். இதே போல்தான் நாம் செய்யும் முயற்சியும் உழைப்பும் நமக்கு பலன் தருவதாக இருந்தால் மட்டுமே வெற்றி. இல்லை எனில் "விழலுக்கு இறைத்த நீர் போல் என் முயற்சி வீணாகிவிட்டது." என்ற புலம்பலே மிஞ்சும்.
மனதில் உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். எக்காலத்திலும் இலவசமாக உழைப்பைத் தரமாட்டேன் என்று. நீங்கள் உங்கள் முன்னேற்றத்திற்காக உழைத்து தோல்வி வந்தால் திரும்ப முயற்சி செய்யுங்கள். வேறோர் வாய்ப்பு அதில் ஒளிந்து இருக்கலாம். விழலுக்கு இறைத்த நீர் போல உங்கள் உழைப்பு வெற்றிக்குத் தடையாகி விடாமல் எச்சரிக்கையாக இருங்கள்.