சாதனைக்கு தடைகள் ஏதுமில்லை..!

secuvera quotes
motivational articles
Published on

'எனக்கு மட்டும் யாராவது உதவி செய்திருந்தால், பெரிய அளவுக்கு வாழ்வில் முன்னேறியிருப்பேன். எனக்கு மட்டும் உடம்பில் போதிய பலம் இருந்திருந்தால், பெரிய விளையாட்டு வீரனாக வந்திருப்பேன். எனக்கு மட்டும் கல்யாணம் ஆகாமல், குழந்தைகள் என்னை நம்பி இல்லாமல் இருந்திருந்தால், தைரியமாக ரிஸ்க் எடுத்து பல சாதனைகள் செய்திருப்பேன்' என்று பலர் வாய்ச்சவடாலாக பேசுவதைக் கேட்டிருப்பீர்கள்.

சாதனை செய்ய நினைப்பவர்களுக்கு தடையாக எதுவுமே இருக்க முடியாது என்பதுதான் உண்மை. ஏனென்றால், தடைகளை உடைத்தெறிந்து முன்னேறுபவன்தான் சாதனையாளன். இதற்கு மிகச் சரியான உதாரணம் சே குவேரா.

அர்ஜென்டினாவில் உள்ள 'ரொசாரியோ' எனும் இடத்தில் குறைமாதக் குழந்தையாகப் பிறந்தார் சே குவேரா. இன்றுபோல் குறைமாத குழந்தைகளுக்கான மருத்துவம் அன்று இல்லை. இதனால், பச்சைக் குழந்தையாக இருந்தபோதே மலேரியா நோயால் பாதிக்கப்பட ஆஸ்துமாவால் பீடிக்கப்பட்டார்.

எப்போதும் இருமிக்கொண்டே இருந்ததால், அவரை பள்ளியில் சேர்க்க மறுத்தனர். அதனால், அவருடைய அம்மா வீட்டிலேயே  சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார். ஓரளவு வளர்ந்த பின்னரே பள்ளிக்கு அனுப்பி வைத்தார். உடல்நலம் சரியில்லை என்றாலும், உடல் வலிமையைக் காட்டும்படியான சைக்கிளை வேகமாக ஓட்டுவது, கால்பந்தாட்டம் ஆடுவது, ரக்பி போன்ற விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டினார் சே குவேரா. இந்த விளையாட்டு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டாலும் விளையாட்டை நிறுத்தமாட்டார். சுவாசத்தை சீர்செய்யும் இன்ஹேலரை எப்போதும் உடன் வைத்திருந்து, உறிஞ்சிய பின் மீண்டும் விளையாடத் தொடங்கிவிடுவார்.

அதிகம் வெளியே அலையக்கூடாது என்ற கட்டுப்பாட்டினை தளர்த்த எண்ணினார். மருத்துவம் படித்துக் கொண்டிருந்த சே குவேரா, உடல் வலிமையைக் காட்டவேண்டும் என்பதற்காகவே 1950-ம் ஆண்டு இலத்தீன் அமெரிக்காவின் 12 மாநிலங்கள் முழுவதும் சைக்கிளிலேயே சுற்றிவந்தார். அந்த பயணம்தான் சே குவேராவை புரட்சியாளராக மாற்றியது.

இதையும் படியுங்கள்:
மனதை வென்றவர்களே மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்!
secuvera quotes

குறைமாதக் குழந்தையாக நோயுடன் பிறந்தவர், ஒரு சுற்றுலாப் பயணியாக வாழ்வைத் தொடங்கி மாபெரும் படிப்பாளியாகி, எழுத்தாளனாக உருமாறி, நல்ல காதலனாக இருந்து, சிறந்த கணவனாகி, அப்பாவாகி, இறுதியில் புரட்சியாளனாக உயர்ந்தவர். கியூபாவுக்காக போராடி, ஐதா சபையில் உரையாற்றி, லத்தீன், அமெரிக்க நாடுகளின் வளர்ச்சிக்காக பேசி, பல புரட்சிக் குழுக்களுக்கு பயிற்சி கொடுத்து காங்கோலிய மக்கள் சுதந்திரத்துக்காக தோள்கொடுத்து, இறுதியில் பொலிவியக் காடுகளில் பதினாறு மாதம் அக்னிப் பரிட்சைக்கு ஆளாகி உயிர் துறந்தவர். 

இவற்றையெல்லாம் 39 வருட வாழ்விலேயே செய்து முடித்தார். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு மூச்சுவிட சிரமப்பட்ட ஒருவரால் உலகின் தலையெழுத்தையே மாற்ற முடிந்தது எனும்போது. எந்தவித தடையும் இல்லாத நாம், கண்ணுக்குத் தெரியாதவற்றை எல்லாம் தடையாக நினைத்து புலம்பலாமா?

சாதனை செய்வதற்கு எதுவுமே தடை இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். களத்தில் இறங்குங்கள். வெற்றி உங்களுக்காக காத்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com