நமது எண்ணத்திற்கு மிகப்பெரிய சக்தி உண்டு. நம்முடைய மனநிலை மற்றும் எண்ணங்கள் எப்படி இருக்கின்றனவோ, அதனைப் பொறுத்தே நம் செயல்பாடுகள் மாறுகின்றன. அதேபோன்றுதான் நாம் செய்யும் செயல்களின் விளைவுகள் நமது எண்ணத்தை மாற்றுகிறது.
இதேதான் நமது வாழ்நாள் முழுவதும் ஒரு தொடர்ச்சியாக நடக்கிறது. நான் இதுவரையில் கண்டறிந்த மிகப்பெரிய உண்மை என்னவென்றால், நாம் நினைக்கும் அனைத்தையும் நாம் செய்வதில்லை என்பதுதான். நமது வாழ்க்கைக்கு எது சரியாக இருக்கும் என்ற அனைத்து விஷயங்களையும் நமது எண்ணமானது சிறப்பாக எடுத்துரைக்கிறது. ஆனால் அதனை செயல்படுத்துதல் என வரும்போது, பலதரப்பட்ட குறுக்கீடுகள், இடையூறுகள் காரணமாக நாம் திசைதிருப்படுகிறோம்.
அதன் விளைவாக, நம் வாழ்வில் எவ்வித முன்னேற்றமும் இன்றி, கவலைக் கடலில் மூழ்குகிறோம். எனவே நம்முடைய சிந்தனைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் மிகப்பெரிய முரண்பாடு உள்ளது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.
இதில் நமது எண்ணத்தையும் செயல்பாடுகளையும் வெகுவாக பாதிப்பது, சுற்றுப்புற செயல்பாடுகள். அதென்ன சுற்றுப்புற செயல்பாடு? எனக்கேட்டால், நாம் பிறந்த இடம் வளர்ந்த விதம், நமக்கு கற்பிக்கப்பட்ட விஷயங்கள், நம்மை சார்ந்த, நம்மை ஒத்த மனிதர்களின் எண்ண ஓட்டங்கள் நம்மை வெகுவாக பாதிக்கும்.
நமது பெற்றோர்களின் சிந்தனைகள் எப்படி இருக்கின்றதோ, அதனையே பெரும்பாலும் நமக்கு கற்பித்திருப்பார்கள். அதைத்தாண்டி புது விதமாக நாம் சிந்திக்க முயற்சித்தாலோ, அல்லது அவர்கள் கூறிய வழியிலிருந்து நாம் திசை மாற விரும்பினாலோ, அதனை நம் மனமும், நம் பெற்றோரது மனமும் ஏற்கத் தயங்கும். அந்த தயக்கமே இவ்வுலகில் பெரும்பாலான மக்களை முடக்கி விடுகிறது. எனவே நம்மைச் சுற்றி இருக்கும் மக்களின் பங்களிப்பு, நம்முடைய எண்ண ஓட்டத்தை அதிகம் பாதிக்கிறது.
அனைத்தையும் சற்று புறம் தள்ளி வைத்து, மாற்று சிந்தனையையும், செயல்பாடுகளையும் ஊக்குவிப்போமாக. இதுவரையில் நான் செய்த தவறுகளே என்னை சிறப்பாக மாற்ற உதவி புரிந்துள்ளது. நான் செய்த கிறுக்குத்தனமான விஷயங்களே எனக்குள் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாகத்தான் கூறுகிறேன். நாம் முதலில் தோற்குமிடம் நமது எண்ணம்தான்.
எனவே, சரியோ தவறோ தொடர்ந்து செயல்படுங்கள். அப்போதுதான் நீங்கள் வெல்வதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.