ஒரு விசேஷம் நடைபெறும் சூழ்நிலையில், மொபைல எடுத்து ஒரு போட்டோ பிடித்து அதை வாட்ஸாப்பிலோ அல்லது இன்ஸ்டாகிராமிலோ ஸ்டேட்டஸாக போட்டு லைக்ஸ் பெறுவதுதான் இக்காலத்தில் மிகுந்த மகிழ்ச்சித்தரும் சொந்த பந்த உறவின் வெளிப்பாடாகும். ஆனால் அப்படி மட்டுமே இல்லாமல் ஒரு நல்ல சொந்தபந்தத்தை எப்படி உருவாக்கலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
கெட்ட விஷயங்களை மறந்துவிடுங்கள்:
இந்த கால இளைஞர்கள் சொந்தங்களின் மேல் ஒரு பொதுவான கண்ணோட்டத்தை வைத்துள்ளார்கள், அதாவது அவர்கள் பொய்யாக நடிக்கிறார்கள், பொறாமை கொள்கிறார்கள் மற்றும் அவர்கள் தேவைக்கேற்ப நம்மிடம் பேச்சு கொடுக்கிறார்கள் போன்ற விஷயங்களை மனதில் வைத்து பல நல்ல சூழ்நிலைகளை தவறவிடுகிறார்கள். அது கால போக்கில் நமக்கு யாரும் வேண்டாம், நமக்கு நாமே என்ற நிலை தான் சரி என்றாகிவிடும். ஆனால் நாம் அதை விட்டு ஒரு திறந்த மனநிலையோடு, நமக்கோ மற்றும் நம்மை சுற்றியிருப்பவர்களுக்கோ எந்த ஒரு பாதிப்பு வராதவாறு நாம் பார்த்துக்கொள்வோம்; முடிந்த வரை நாமும் மகிழ்ச்சியாகவும் நம்மை சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டும் என்ற மனநிலையோடு இருந்தாலே கெட்ட எண்ணங்களை நம் மனதில் இருந்து விரட்டி விடுவோம்.
உதவிசெய்ய முன் வாருங்கள்:
சொந்த பந்தம் என்றாலே வீட்டிற்கு வருவோரையோ, விசேஷங்களில் பார்த்தோ ஒரு சம்பிரதாயத்திற்காக நலம் விசாரிப்பத்தோடு இல்லாமல், உதவி என்று வரும் போது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி உதவி செய்வதே ஒரு நல்ல சொந்தக்காரர்கள் என்று கூறுவதற்கு அடித்தளம். அவர் ஏழையோ, பணக்காரரோ அல்லது ஏற்கனவே நமக்கு உதவி செய்தவரோ இல்லையோ , என்று யோசிக்காமல் நம்மிடம் இருப்பதை கொடுக்கலாம் என்ற மனநிலையில் நாம் இருக்க வேண்டும். அது பணமோ,பொருளோ எதுவானாலும் சரி. நாம் நல்ல மனதுடன் உதவி செய்ய முன்வந்தாலே அது காலகாலத்திற்கும் நம் சொந்தபந்தத்தில் நல்ல அடித்தளத்தை ஏற்படுத்தி ஒரு தொடர் பந்தத்தை உருவாக்கி தரும்.
எதையும் எதிர்பார்க்காதீர்கள்:
சில நேரங்களில் நாம் காட்டும் அன்பு நமக்கு திரும்பி கிடைக்காமல் போகலாம். அதற்கு காரணமாய் என்ன இருந்தாலும், நமக்கு அந்த பந்தகளின் தொடர்பு தொடர வேண்டுமென்று ஆசை இருந்தால் நாம் ஏதையும் எதிர்பார்க்காமல் நம்முடைய அன்பை மட்டும் செலுத்திகொண்டிருக்க வேண்டும். அதுபோல் எதோ ஒரு விஷயத்தில் நமக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை அல்லது நம்மை கவனிக்கவில்லை என்றாலும் அதை நாம் பெரிதும் பொருட்படுத்தாமல் சாதாரணமாய் காட்டிக்கொள்வதே ஒரு நல்ல சொந்தபந்தத்திற்கான உதாரணம்.
அடுத்த தலைமுறையை கைபிடித்து தூக்குங்கள்:
வளர்ந்து வரும் அடுத்த தலைமுறையை வழிநடத்தும் பக்குவத்திற்கு நாம் வந்த பிறகு, அதாவது நம் கூட வளர்ந்த அக்கா, அண்ணன் ,தம்பி மற்றும் தங்கை ஆகியோரின் குழந்தைகளை நாம் எடுத்து அரவணைத்து அவர்களின் பெற்றோர் காட்டிய அதே அன்பையும், அக்கறையும் இவர்களிடமும் தொடரும்போது தான், அது அடுத்த வரப்போகும் காலங்களில் நம் உறவுமுறை தொடருமா என்ற கேள்விக்கு நல்லதொரு பதிலாக அமையும் .