கடந்தகாலத்தை நினைத்து எதிர்காலத்தை இழக்காதே!

Thinking of the past...
Lifestyle articlesImage credit - pixabay
Published on

ம்முடைய வாழ்க்கையில் அதிக நேரம் நாம் கடந்த காலத்தை எண்ணியே வீணாக்கிக் கொண்டிருக்கிறோம். ‘என்னுடைய கடந்த காலத்தில் மட்டும் அந்த ஒரு விஷயம் சரியாக நடந்திருந்தால், என்னுடைய வாழ்க்கை இன்று சிறப்பாக அமைந்திருக்கும்’ என்று முடிந்துப் போனதை நினைத்து வருத்தப்பட்டுக்  கொண்டிருக்கிறோம். இத்தகைய எண்ணம் நம் எதிர்க்காலத்தை சிறப்பானதாக மாற்றுமா? இதைப்பற்றி தெளிவாகப் புரிந்துக் கொள்ள ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்.

ஒரு ஊரில் ஒரு வாலிபன் இருந்தான். அவனுடைய கடந்த காலத்தில் அவனுக்கு  நிறைய கஷ்டங்கள், வறுமை, தனிமை, அவமானங்கள் ஏற்பட்டிருக்கிறது. அதிலிருந்து அவன் மீண்டு வந்திருந்தாலும், அந்த நினைவுகள் அவனை மிகவும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. இதனால், சரியாக அவனால் எந்த ஒரு வேலையிலும் முழுகவனத்தை செலுத்த முடியவில்லை.

இப்படிப்போகையில் ஒரு நாள் இரவு அவன் தூக்கம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தான். அப்போது அவன் கடவுளை திட்டத் தொடங்குகிறான். ‘கடவுளே! உனக்கு விளையாட என்னுடைய வாழ்க்கைதான் கிடைத்ததா? என் வாழ்க்கையில் மட்டும் எத்தனை கஷ்டங்கள், துரோகங்கள்? நீ மட்டும் என் முன்பு தோன்றினால் உன்னை அன்று பார்த்துக் கொள்கிறேன்’ என்று கோபமாகக் கூறினான்.

என்ன ஆச்சர்யம்? கடவுள் அவனுக்கு உடனேயே காட்சி கொடுத்து விட்டார். கடவுள் அந்த வாலிபனிடம், ‘இப்போதுக்கூட என்னால் உன் வாழ்க்கையை மாற்ற முடியும்’ என்று கூறினார். இதைக்கேட்ட வாலிபனோ, ‘சரி மாற்றுங்கள் பார்க்கலாம்’ என்று கூறினான்.

அதற்கு கடவுள் கண்டிப்பாக மாற்றுகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை என்று கூறினார். இதைக்கேட்ட வாலிபன், ‘அதானே பார்த்தேன். நீங்களாவது எதையாவது சுலபமாக தருவதாவது. சரி சொல்லுங்கள் என்ன நிபந்தனை? என்று கேட்டான்.

இப்போது கடவுள் ஒரு சிறு புன்னகையுடன் வாலிபனை வெளியே கூட்டிச் சென்று அங்கிருந்த மாட்டு வண்டியை காட்டி அதை பத்து நிமிடத்திற்குள் அந்த தெரு முனைக்கு ஓட்டிச்செல்ல வேண்டும் என்று கூறினார்.

இதைக்கேட்ட வாலிபன் வண்டியை எடுத்துக்கொண்டு வேகமாக கிளம்பினான். இப்போது கடவுள் சொடக்கு போட்டார். வண்டி அப்படியே பின்னாடி திரும்பிக் கொண்டது. மறுபடியும் அந்த வாலிபன் போக முயற்சிக்க மறுபடியும் கடவுள் சொடக்குப் போட வண்டி திரும்பிக்கொண்டது. இதைப் பார்த்த வாலிபன் கடவுளிடம் கோபமாக, ‘வண்டியை இப்படி பின்னாடி திருப்பிவிட்டால் எப்படி தெருமுனைவரை செல்ல முடியும். இது நியாயமா? என்று கேட்டான்.

இதையும் படியுங்கள்:
கடவுளும், சாத்தானும் எங்கே இருக்கிறார்கள் தெரியுமா?
Thinking of the past...

அதற்கு கடவுள் கூறினார், உன்னுடைய நிகழ்காலத்தில் முழுமனதுடன், கவனத்துடன் உழைக்காமல் உன் மனதை கடந்தக்கால கவலைகளையும், இழப்புகளையும் நோக்கி திருப்பிவிட்டு விட்டு எதிர்காலத்தை மட்டும் சிறப்பாக்கி விடலாம் என்று நீ நினைப்பது நியாயமா? என்று கேட்டார். அப்போதுதான் அந்த வாலிபனுக்கு தான் செய்த தவறு புரிந்தது.

கடந்த கால நிகழ்வுகளை மனதில் போட்டு குழப்பிக்கொண்டு நிகழ்காலத்தை கோட்டை விடும் நபரால் எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்ற  முடியாது. இதைப் புரிந்துக் கொண்டு செயல்பட்டால் வாழ்க்கை சிறப்பாகும். முயற்சித்துப் பாருங்களேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com