இந்தியாவின் தென்கோடியில் அமைத்திருக்கிறது கன்னியாகுமரி 1892-ம் ஆண்டில் ஒருநாள் ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளை எதிர்த்து நீந்திச்சென்று ஒரு பாறையின் மீது ஏறி அமர்ந்தார் அந்த இளைஞன். எவ்வித உணவும் உண்ணாமல், தியானத்தில் மூன்று நாட்கள் கழிந்தது. புத்தருக்கு அரசமரத்தடியில் ஞானதோயம் ஏற்பட்டது போன்று கன்னியாகுமரி கடலுக்கிடையில் அந்த இளைஞனுக்கு உண்மை புரிந்தது.
அங்கு முழுமையாக ஞானமடைந்த அதிசய இளைஞன் வேறு எவருமல்ல. சுவாமி விவேகானந்தர்தான். அவரது குரு சுவாமி ராமகிருஷ்ணரின் மரணம் காரணமாக மனதில் ஏற்பட்ட குழப்பத்துக்கு விடை தேடியே கன்னியாகுமரி வந்து தியானத்தில் அமர்ந்திருந்தார். விவேகானந்தர் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்த விவேகானந்தருக்கு அந்தக் கன்னியாகுமரி கடல்தான் விடை கொடுத்தது.
ராமகிருஷ்ணர் பெயரால் இந்தியா முழுவதும் மடங்கள் நிறுவவேண்டும். அந்த மடத்தின் மூலம் கல்வி ஸ்தாபனங்கள், மருத்துவமனைகள், தியான மண்டபங்கள் கட்டவேண்டும் போன்றவைகளை லட்சியக் கொள்கைகளாக கையில் எடுத்துக் கொண்டு, அதை நிறைவேற்றத் தொடங்கினார். இந்தியா முழுவதும் சொற்பொழிவுகள் நிகழ்த்தி பணம் சேர்த்தார்.
கொல்கத்தாவில் முதல் மடத்தை நிறுவிய பின்னர் நாடெங்கும் பல்வேறு இடங்களில் தொடங்கி வைத்தார். 1902-ம் வருடம் தியானத்தில் இருந்தபோதே மரணத்தைத் தழுவினார்
அவர் அன்று சோர்வின்றி தொடங்கி வைத்த முயற்சியின் காரணமாகவே இன்று நாடெங்கும் ராமகிருஷ்ண மடங்கள் பல்வேறு சேவைகள் செய்து நல்ல கல்வி நிலையமாக சிறந்த மருத்துவ சேவை நிறுவனமாக உலக அளவில் புகழ் பெற்றுள்ளது.
இதய நோயாளிகள் பற்றி நடந்த ஓர் ஆய்வில், திங்கள் கிழமை காலையில்தான் அதிகமான நபர்கள் மாரடைப்புக்கு ஆட்படுவதாக கண்டறிந்தார்கள். ஏனென்றால் வேலைகளை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளி வைப்பதே பலருக்கு பழக்கம். திங்களன்று அலுவலகம் செல்லும் நேரத்தில் ஏராளமான வேலைகள் இருக்குமே என்ற பயம் காரணமாகவே இதயம் சிக்கலாகிவிடுகிறது என்கிறார்கள்.
தேவைதானா இந்த தள்ளிவைப்புகள். எப்படிப்பட்ட வேலைகள் இருந்தாலும், அன்று செய்ய வேண்டியதை அன்றே செய்து முடியுங்கள். நாளைக்கு என்று தள்ளி வைக்கப்படும் வேலைகளை முடிக்க நீங்கள் இருப்பீர்கள் என்பது நிச்சயமில்லை. ஏனென்றால், ஒவ்வொருவருக்கு காலம்குறைவாகவே இருக்கிறது. என் நூறு வருடங்கள் முடியாதா என்று எண்ணிக்கொள்ளுங்கள்.
நூறு வருடங்கள் என்றாலுமே அது குறைவான காலம்தான். நாளைய நாட்களைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்காமல், இன்றைக்கு முடிக்க வேண்டியதை இன்றே முடியுங்கள்.
எல்லா வேலைகளையும் அன்றன்று, அவ்வப்போது செய்து முடிக்கும்போது கிடைக்கும் நிம்மதிக்கு ஈடாக எதையும் சொல்ல இயலாது காலம் குறைவாக இருக்கிறது என்பதையும் உங்களுக்காக அவை காத்திருக்காது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.