
மற்ற எந்த விஷயங்களில் மனதளவில் பாதிக்கப்பட்டாலும், அது ஒரு பாதிப்பாக மட்டுமே இருக்கும். ஆனால், நம்பிக்கை துரோகத்தால் பாதிக்கப்படும்போது, பல இழப்புகளை சந்திக்க நேரிடும்.
பொதுவாக, உறவுகளில், நண்பர்களில் நம்பிக்கை துரோகம் என்றால், அதை நினைத்து சிறிது காலம் கவலைகொள்வோமே தவிர, நாட்கள் செல்ல செல்ல அதனுடைய தாக்கம் குறைந்து அதனை மறந்தே விடுவோம். ஆனால் நம்முடைய இலக்கின் பாதையில் ஒருவரை கண்மூடித்தனமாக நம்பி, அந்த நம்பிக்கை உடையும்போது, அது பேரிழப்பாக இருக்கும். ஏனெனில், நாம் நம்பியது அவரை மட்டும் அல்ல; அந்த இலக்கின் பாதையில் அவர் அளித்த யோசனைகள், ஊக்கம், பயிற்சி என்று அனைத்தையும் சேர்த்துதான்.
உதாரணத்திற்கு, நமது இலக்காக ஒன்றை தேர்ந்தெடுப்போம். அந்த இடத்தில் முதல் படியில் ஏற்கனவே கைத்தேர்ந்தவர் என்று ஒருவர் அறிமுகமாவார். அவர் முதலில் இரண்டு மூன்று விஷயங்கள் சரியாக சொல்லிக்கொடுத்தால் அடுத்து அவர் கூறும் ஒவ்வொரு விஷயங்களையும் கண்மூடித்தனமாக நம்பி விடுவோம். அதையே நாமும் செய்ய ஆரம்பிப்போம். அது வெற்றிக்கான பாதையா? சரியா? என்று அப்போது நாம் கண்டுகொள்ள மாட்டோம். ஆனால், இறுதி கட்டத்திலோ அல்லது அதிக தூரம் சென்ற பிறகோதான் ஒரு கட்டத்தில் சில விஷயங்கள் தெரியவரும். ஒன்று அவர்கள் வேலைக்காக தேன்போல் பேசி பழகி நம்மை பயன்படுத்தி இருப்பார்கள் என்று. மேலும், அவர்களுடைய ஐடியாலஜி மட்டுமே சரி என்றும் அதை பரப்புவதற்கு நம்மை ஒரு கருவியாகயும் பயன்படுத்தி இருப்பார்கள்.
அது தெரிய வரும்போது காலம் கடந்திருக்கும். வாய்ப்புகளை இழந்திருப்போம். அந்த நேரத்தில் நமது இலக்கில் தோல்வியை சந்தித்து விடுமோமோ என்ற பயத்திலேயே அனைத்து முடிந்துவிடும்.
இந்த நிலைமைக்கு நாம் செல்லக்கூடாது என்றால்:
1. நாம் முதலில் இருந்து ஒருவரை முழுமையாக நம்பாமல் இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமான நம்பிக்கையை காட்டிலும் நம்பிக்கையையே வைக்காமல் இருப்பது நல்லது.
2. ஒருவரிடம் மட்டுமே முழு நம்பிக்கையும் வைத்து “அவர்தான்”, “அவர் மட்டும்தான் நமக்கு”, என்ற எண்ணத்தை முழுமையாக கைவிட வேண்டும்.
3. இலக்கை நோக்கிப் பயணிக்கும்போது, அந்த வேலையில் இருக்கும் நிறைய பேருடன் தொடர்பில் இருக்க வேண்டும். கேள்விகளை மட்டும் கேட்டுவிட்டு அவர்களுடைய ஐடியாலஜியை தெரிந்துகொள்ள வேண்டும். கலந்துரையாட வேண்டும்.
4. முடிந்த அளவு குறிப்பிட்ட காலத்திற்கு பின் நமது இலக்கை சார்ந்த வேறு இடங்களுக்கு சென்று புதிய புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். புதிய புதிய ஆட்களையும் சந்திக்க வேண்டும்.