
நம் உடலின் உள்ளுறுப்புகளில் இதயம், கிட்னி மற்றும் மூளைக்கு அடுத்தபடியாக மிக அத்தியாவசியமான உறுப்பாகக் கருதப்படுவது நுரையீரல். இரத்தத்தில் கலக்கப்படும் அசுத்தக் காற்றான கார்பன்டை ஆக்சைடை வெளியேற்றி உடலுக்கு சக்தி தரத் தேவையான ஆக்சிஜனை உள்ளிழுத்து இரத்தத்தில் சேரச் செய்யும் வேலையை திறம்படச் செய்து கொண்டிருப்பது நுரையீரல். இதை எந்தவித நோயும் தாக்காமல் பாத்துகாக்க நாம் செய்யவேண்டியவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
* புகைப்பழக்கத்தை விட்டுவிடுதல் அவசியம். அதிலுள்ள புகையிலையானது நுரையீரல் திசுக்களைப் பாதிப்பதுடன், நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது. மூச்சுக் குழாயில் தொற்று ஏற்படக் காரணமாகிறது.
* புகை பிடிப்பவர்கள் வெளியிடும் புகையை சுவாசிப்பவர்களின் நுரையீரலும் பாதிப்படையும். அவர்களுக்கும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, வீட்டிலும் பொது இடங்களிலும் புகை பிடிப்போர் இருக்குமிடங்களில் இருப்பதை ஒவ்வொருவரும் தவிர்த்தல் அவசியம்.
* அதிகளவு தூசி, கெமிக்கல் அடங்கிய பட்டாசுப் புகை, கழிவுப் பொருள்களை எரிப்பதால் உண்டாகும் புகைமூட்டம் போன்றவற்றால் காற்று மாசடைந்திருக்கும் சூழ்நிலையில் அவ்விடத்தில் இருப்பதைத் தவிர்த்து வீட்டுக்குள் இருக்க வேண்டும். காற்று சுத்திகரிப்பானை உபயோகிக்க வேண்டும். மாஸ்க் அணிந்து கொள்வது அவசியம்.
* அடிக்கடி கை கழுவி சுகாதாரத்தைப் பின்பற்ற, சுவாசப் பிரச்னை தரும் ஃபுளு, நிமோனியா, சளி போன்ற நோய்களைத் தவிர்க்கலாம். தும்மும்போதும் இருமும்போதும் வாயையும் மூக்கையும் மூடுதல் அவசியம்.
* மூச்சுக் குழாய் தொற்று வராமலிருக்க தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்.
* தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் நுரையீரலின் கொள்ளளவு உயர்ந்து ஆரோக்கியமான சுவாசம் கிடைக்கும். நோயெதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும்.
* நுரையீரலின் கொள்ளளவை அதிகரித்து தரமான மூச்சு விடும் திறனைப் பெருக்க, மூச்சை ஆழ்ந்து உள்ளிளுத்து வெளியிடும் பயிற்சியை மேற்கொள்ளுதல் அதிக பலன் தரும்.
* தொழில் முறையில் நுரையீரல் சேதமடையும்படியான வேலைகளை மேற்கொள்ளும்போது தேவையான பாதுகாப்பு உபகரணங்களை உபயோகித்து பாதுகாப்புடன் பணிபுரிவது அவசியம்.
மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி நம் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் நம் ஆயுள் கூடும் என்பதில் சந்தேகமே இல்லை.