
தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று- என்கின்றார் வள்ளுவர்.
நாம் செய்ய முற்படும் செயல்கள் நல்லவையாக இருக்க வேண்டும். அந்த செயல்களினால் வெற்றியுடன் புகழும் கிடைக்கும் என்பது உறுதி. அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை உணர்த்தும் பாடங்கள்.
மகாகவி பாரதியார் பாடல்கள் அவர் உயிரோடு இருந்தபொழுது கிடைத்த புகழை விட, அவரின் மறைவிற்குப் பின் அவரது கவிதைகள் கம்பீரமாக தமிழர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டு பற்றி படர்ந்து வருகின்றன. இதற்கு அடிப்படை காரணம் வாசகர்களின் மத்தியில் பாரதி பாடல்களுக்கு கிடைத்து வரும் வரவேற்புதானே அன்றி வேறொன்றுமில்லை.
இரண்டாவது உலகப் போரில் ஹிட்லரை முறியடித்து வாகை சூடிய ஐசன் ஹோவர் அடக்கத்திற்கு அணி செய்பவர்களில் ஒருவர். பெரிய வெற்றி பெற்ற அந்த மகா தளபதிக்கு பெருமை என்பது சிறிதளவேனும் கிடையாதாம். ஒரு தடவை சர்ச்சில் அவரிடம் என்ன கூறினார் என்றால் 'ஐசக் உங்களிடம் உள்ள பண்புகளில் நான் மிகவும் விரும்புவது என்னவென்றால் நீங்கள் புகழ் வேட்டைக்காரராக இல்லாது இருப்பதுதான்' என்று.
ஆபிரகாம் லிங்கனை போன்று ஐசன் ஹோவரும் புகழைச் சிறிதும் பொருட்படுத்தாதவர். உன்னதமான மதிப்புள்ள மெடல்களையோ, உயரிய கவுரவம் வாய்ந்த ராணுவ நாடாக்களையோ அவர் அணிவதே கிடையாதாம். அவர் இங்கிலாந்தில் இருந்த பொழுது முக்கியமான கூட்டங்களுக்கும் கூட செல்ல மறுத்துவிட்டாராம். தம்முடைய அலுவலகம் ஐசன் ஹோவரின் தலைமை அலுவலகம் என்பதற்கு பதிலாக 'நேசநாட்டுப் படைகளின் தலைமைச் செயலகம்' என்று கூறப்பட வேண்டும் என்று வற்புறுத்தினாராம்.
அவர் போன்றுதான் மார்க் கிளார்க்கும். அவருக்கும் சிறிதளவேனும் பெருமை என்பதே கிடையாதாம். தமக்குக் கிடைத்த ராணுவ பரிசுகளைப் பற்றி அவர் தம்பட்டம் அடித்துக் கொண்டதே இல்லையாம். இவ்வாறு புகழேணியில் மடமடவென்று ஏறியவர்களின் வரலாறுகளை படித்தோமானால், அவர்கள் புகழைத்தேடி அலையவில்லை. புகழ்தான் அவர்களைத் தேடி வந்த அடைந்தது என்பதை அறியலாம். ஆதலின், புகழுக்காக வேண்டி விலைமதிக்க முடியாத நேரத்தை ஒருபோதும் வீணாக்க வேண்டியதில்லை. வெற்றியை தரிசிக்க விரும்புகிறவர்கள் புகழ்மிகு செயல்களில் ஈடுபட்டு முத்திரை பதிக்க வேண்டுமே தவிர புகழுக்காக அலைந்து கொண்டிருக்கக் கூடாது. அவ்வாறு அலையும் இளைஞர்கள் உண்மையான புகழையும் அடைய முடியாது. வாழ்க்கையில் வெற்றியும் காண இயலாது.
ஆதலால் புகழ் தரும் பணிகளை செய்தாலே போதும். அது தானாகவே செய்தவரை வந்தடையும் என்பதுதான் இவர்களின் மூலம் நாம் அறிந்துகொள்ளும் வாழ்க்கைப் பாடம். காலம் கடந்தேனும் அது செய்தவரை வந்து சேரும் என்பது உறுதி.
நம் எண்ணங்களும், உணர்வுகளும், சிந்தனைகளும், செயல்களும், நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு நன்மை செய்யும் எனில்… புகழை நாம் தேட வேண்டியது இல்லை அதுவே நம்மைத்தேடி வரும்!