
வாழ்க்கையில் முன்னேற சில சின்னச் சின்ன பழக்கங்களை அன்றாடம் மேற்கொண்டால் போதும்; செலவில்லை; யாருடைய உதவியும் தேவையில்லை. நம்மை நாமே முன்னேற்றிக் கொள்ளலாம்!
அதிகாலை எழுதல், அன்றாடப் பணிகளைக் குறித்தல் எட்டு மணி நேரம் அயர்ந்து உறங்கி ஓய்வெடுத்த பின்னர் எழுந்தவுடன் நீங்கள் முதல் இரண்டு மணி நேரங்களில் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அன்றாடம் செய்ய வேண்டிய பணிகளில் அவசரமானவை எவை, ரொடீனாகச் செய்பவை எவை என்பதை முடிவு செய்ய வேண்டும்.
FIRST THINGS FIRST!
முதலில் வந்ததை முதலில் செய் என்று இதை தவறாக மொழிபெயர்க்கக் கூடாது. முக்கியத்திற்கு முதலிடம் என்பதே இதன் சரியான மொழிபெயர்ப்பு. இந்த நிகழ்ச்சித் திட்டத்தை ஒழுங்கு படுத்திக் கொண்டால் பாதி வெற்றி அடைந்தது போலத்தான்!
கட்டுரைகளைப் படித்தல்
அடுத்து ஒரு சின்ன உண்மை! தினமும் வேளாவேளைக்குச் சாப்பிடாமல் இருக்க முடியுமா? நிச்சயமாக முடியாது.
அதே போலத்தான் மோடிவேஷன் எனப்படும் உணர்வூக்கமும்! தினமும் அதை புதுமைப்படுத்தி ஊக்குவித்துக் கொண்டே இருக்க வேண்டும். மோடிவேஷன் பற்றிய கல்கி ஆன்லைன் இதழில் வெளிவரும் அற்புதமான கட்டுரைகள், சுய முன்னேற்ற நூல்கள், சுய சிந்தனையில் எழுதி வைத்துக் கொண்ட குறிப்புகள், நமது வெற்றிகள், சாதனைகள் இதையெல்லாம் அடிக்கடி படிக்க வேண்டும், எண்ணிப் பார்க்க வேண்டும்.
குறிக்கோளைக் குறித்து வைத்தல்!
அடுத்ததாக நமது லட்சியம் பெரியதாக இருந்தால் அதைப் பகுத்து சிறு சிறு முன்னேற்றங்களை அன்றாகக் குறிக்கோளாக ஆக்கிக்கொள்ள வேண்டும். தினசரி முன்னேற்றம் என்பது பெரிய லட்சிய வெற்றிக்கு அடித்தளமாகும்.
நிகழ்ச்சிகளை எண்ணி முடித்தாகிவிட்டது. தினசரித் திட்டம் வகுத்தாகி விட்டது. அதை முக்கியத்துவத்தின் அடிப்படையில் (ORDER OF PREFERENCE) ஒரு சின்ன நோட் பேடில் (NOTE PAD) எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சின்ன வேலை முடிந்ததா, லிஸ்டில் அதை டிக் செய்து கொள்ளலாம். நாள் முடியும்போது எத்தனை டிக்குகள் இருக்கின்றன என்று பார்க்கும்போது மனம் உற்சாகத்தால் துள்ளிக் குதிக்கும்.
பெற்ற வெற்றியைக் கொண்டாடுதல்!
சரி, அடுத்து நாம் அடைந்த வெற்றியைக் கொண்டாட வேண்டும். வெற்றி டயரி ஒன்றை உருவாக்கி சின்னச் சின்ன வெற்றிகளைக் கூடக் குறித்து வைத்துக்கொண்டு அதை அவ்வப்பொழுது புரட்டிப் பார்த்தால் நமது பாதையும் பயணமும் நன்கு விளங்கும்!
ஆரோக்கியமும் உற்சாகமும்!
இப்படி வெற்றியை அடைய இரண்டு முக்கிய அம்சங்கள் இன்றியமையாதவை.
1) நல்ல ஆரோக்கியமான உடல்
2) நல்ல உற்சாகமும் ஊக்கமும் உள்ள மனம்
நல்ல ஆரோக்கியமான உடலைப் பெறுவதற்கு இரண்டு அம்சங்கள் தேவை.
1) நல்ல திட்டமிட்ட சமச்சீர் உணவு (BALANCED DIET)
2) அன்றாட நடைப்பயிற்சியுடன் கூடிய உடல் பயிற்சி
நல்ல உற்சாகமான மனதிற்கு தியானமும், யோகாவும் பெரிதும் உதவி செய்யும்.
இசை கேட்பதும், நல்ல புத்தகங்களைப் படிப்பதும், நல்ல நண்பர்களுடன் சிறிது நேரத்தைக் கழிப்பதும் மனமானது உற்சாகத்தைப் பெறுவதற்கான வழிகள்!
பிறகென்ன, எப்படி சார் நீங்கள் எதிலும் வெற்றி பெறுகிறீர்கள், அதன் ரகசியம்தான் என்ன என்று மற்றவர்கள் உங்களைக் கேட்கும்போது அவர்களையும் உற்சாகமாக ஊக்குவித்து அவர்கள் இப்படிக் கேட்டதையும் சாதனை நோட்டில் சேர்த்துவிட வேண்டியதுதான்!