
'இளமையில் கல்' என்று நம் முன்னோர்கள் சொன்னது தவறில்லை. அந்த வயதில் பயின்றால்தான் பசுமரத்தாணி போல் பதியும் என்று சொன்னதும் மெய்தான். அதிலும் மாறுபட்டக் கருத்துக்கு இடமில்லை. இப்போது பிரச்னை இளமையில் வசதியில்லாதவர்கள் பிற்காலத்தில் கல்வி கற்க சமயம் கிடைக்கும்போது படிக்கலாமே. அதற்கு தடையாக எதுவும் இருக்கக்கூடாது என்பது நம்முடைய நிலைப்பாடாக இருக்க வேண்டும்.
மேலை நாடுகளிலிருந்து தேவையில்லாத எவ்வளவோ விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோம். ஆனால் அவர்களிடம் எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஓர் அற்புதமான விஷயம் இருக்கிறது. அதுதான் அவர்கள் எந்த ஒரு செயலைச் செய்வதற்கும் வயதைக் காரணமாகக் காட்டுவதில்லை.
அவர்கள் வேலை செய்வதிலிருந்து தப்பிக்கவும் வயதை ஒரு காரணமாகக் காட்டுவது கிடையாது. அதேபோல் ஐம்பது வயதில் திருமணம் செய்துகொள்ளவும் அவர்கள் எந்த மனத்தடையும் இல்லாமல் செய்கின்றனர். இன்றும் மேலை நாடுகளில் மேல் படிப்பு வகுப்புகளில் இளைஞர்களுடன் யுவதிகளுடனும் அமர்ந்து இளநிலை வகுப்பு படிக்கும் அறுபது வயதுகளைக் கடந்த பாட்டியோ தாத்தாவோ இருப்பார்கள்.
அதற்குக் காரணம் அவர்கள் எந்தவிஷயத்தைச் செய்வதாக இருந்தாலும் அவர்கள் மூளையும் மனமும் இடும் கட்டளையை ஏற்று அது சொல்லும் சொல்லுக்கேற்ப நடந்து கொள்கின்றனர். அதனால்தான் தங்களால் அந்த வயதில் படிக்க முடியாமல் போன ஆசையை அப்படியே நிராசையாக விடுவதில்லை.
சட்டம், இலக்கியம் என்று தங்களுக்குப் பிடித்த எந்த ஒரு பட்டப் படிப்பையும் தங்கள் ஆசைக்காகப் படிக்கின்றனர். இங்கே இன்னொரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். அவர்கள் படிப்பது தங்கள் ஆசைக்காக அல்லது அறிவு வளர்ச்சிக்காக.
சாதனைகளைச் செய்ய வயது ஒரு தடையே அல்ல என்பதை மட்டும் மேலை நாட்டவரைப் பார்த்துக் கற்றுக்கொண்டால் போதும். இந்தியாவிலும் ஏன் தென்னிந்தியாவிலேயே இதற்கான நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும். அந்த சாதனையைச் செய்தவர் ஒரு திரைப்பட நடிகை. அவர் மிகச் சிறிய வயதிலேயே குடும்பச் சூழல் காரணமாக நடிப்பைத் தொழிலாக்கிக் கொண்டவர். வறுமை காரணமாகப் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தவர்.
ஆனால் இன்று அவர் பேசும் ஆங்கிலத்தின் தரம் உண்மையிலேயே உலகத்தரம் வாய்ந்தது. அவர் தமிழகத்தின் பல சுல்லூரிகளுக்குச் சென்று பல சொற்பொழிவுகளை நிகழ்த்தி சிறப்பாக ஆங்கிலம் பேசி அசத்தியவர்.
தூங்குவதற்காக எனக்குக் கிடைத்த நேரங்களில் பாதியை என்னுடைய படிப்பிற்காகச் செலவிட்டேன். நான் ஆங்கிலம் கற்றுக் கொள்ள முயன்ற போது நான் முப்பது வயதுகளைக் கடந்திருந்தேன். முதலில் நான் ஓர் ஆங்கிலப் பேராசிரியைக் கற்றுக் கொடுக்கக் கேட்டபோது இந்த வயதில் ஒரு புது மொழியை அதுவும் ஆங்கிலம் கற்றுக்கொள்வது கடினம். என்னால் முடியாது என்று சொன்னபோதும் என் முயற்சியை நான் கைவிடவில்லை என்று தன்னுடைய ஆங்கில புலமை பற்றி எடுத்துரைத்தார்.
இந்த வெற்றியை அடைய அவர் கொடுத்த விலை வயதை ஒரு தடையாக நினைக்காத அவரது அசாத்தியமான தைரியந்தான். மற்ற சராசரி மனிதர்களைப்போல் என்னால் படிக்க முடியாது வயதாகிவிட்டது. இனி ஒரு புது மொழியைப் படிக்கமுடியாது என்று நினைத்திருந்தால் அவர் எவ்வளவு இழந்திருப்பார்.
ஆகவே வயதை ஒரு தடையாக கருதாமல் சாதனைக்கு வயது தடை இல்லை என்பதை அடிப்படை லட்சியமாகக் கொண்டு தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றுங்கள்.