
‘கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகளவு’ என்று சொல்வதுண்டு. இந்த உலகில் நமக்கு தெரியாத இன்னும் நாம் கற்காத விஷயங்கள் ஏராளமாக உள்ளன. எனவே, ‘எல்லாமே நமக்கு தெரிந்து விட்டது. எல்லாவற்றையும் கற்றுவிட்டோம்’ என்ற எண்ணம் வேண்டாம். இதைப்பற்றி தெளிவாக புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு விஷயம் சிறப்பாக இருக்கும். குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் மெழுகுக்கலை மிகவும் சிறப்பானதாகும். இதை சொல்லிக்கொடுக்கவும் நிறைய கல்லூரிகள் இருந்தன. அதுபோன்ற ஒரு கல்லூரியில் படித்துவந்த மாணவன்தான் ஜேக். அவன் தான் அந்த கல்லூரியிலேயே தலைசிறந்த மாணவன். அதனாலேயே அவனுக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் உண்டு.
இப்படியிருக்கையில் அந்த கல்லூரியில் மாணவர்களுக்கு செமினார் எடுப்பதற்காக பெரிய நிபுணர் ஒருவர் வருகிறார். அவர் வகுப்பை எடுத்து முடித்ததும் எல்லோரிடமும் கேள்வியும் கேட்கிறார். அப்போது ஜேக் நன்றாக பதில் சொல்கிறான். இதனால் அவனை அந்த ஆசிரியருக்கு பிடித்து விடுகிறது. இவனுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்து அவனை தனியாக அழைத்து பேசுகிறார்.
அவனிடம் பாரீஸில் தனக்கு ஒரு நண்பர் இருப்பதாகவும் அவர் மெழுகுக்கலையில் சிறந்த வல்லுனர் என்றும் கூறுகிறார். இதை கேட்ட ஜேக், ‘அவர் எந்த கல்லூரியில் பயின்றார்’ என்று கேட்டான். அதற்கு அந்த நிபுணர், ‘என்னுடைய நண்பன் கல்லூரியில் படிக்கவில்லை. தானாகவேதான் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டான்.
ஆனால், அவனுடைய மெழுகுச்சிலை எல்லாம் மிகவும் நேர்த்தியாக இருக்கும்’ என்று கூறினார். இதைக்கேட்ட ஜேக் அவர் கல்லூரியில் படிக்கவில்லை என்றதுமே அவரை குறைவாக எடைப்போட்டான். ‘என்ன சார்! இவ்வளவு பெரிய கல்லூரியில் படித்த எனக்கு தெரியாததையா கல்லூரியில் படிக்காத உங்கள் நண்பர் சொல்லிக் கொடுக்க போகிறார்?' என்று கேட்டான்.
உடனே, அந்த நிபுணர் கூறினார், ‘வரும் ஞாயிற்றுக் கிழமை சரியாக என் நண்பன் வீட்டிற்கு மதியம் இரண்டு மணிக்கு செல்லவேண்டும். மாலை நான்கு மணிக்கு அவன் டீ குடிப்பான் அந்த நேரத்திற்குள் என் நண்பன் மெழுகுக்கலை செய்வதில் எதில் சிறந்தவன் என்று சொல்ல வேண்டும். அப்படி சரியாக நீ சொல்லிவிட்டால், அவனிடம் இலவசமாகவே அந்த கலையை உனக்கு சொல்லித்தர சொல்கிறேன்’ என்றார்.
இதைக்கேட்ட ஜேக் ஞாயிற்றுக்கிழமை அந்த நண்பரின் வீட்டிற்கு செல்கிறான். அவர் அந்த சமயம் மெழுகு சிற்பம் செய்வதற்காக பொருட்களை தயாராக வைத்திருந்தார். சில கண்ணாடி குடுவைகள், வாசனை திரவியங்கள், மெழுகு ஆகியவற்றை தன் முன் எடுத்து வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.
அதை பார்த்த உடன் இவனுக்கு புரிந்துவிட்டது. அவர் வாசனை மெழுகுவர்த்திதான் செய்ய போகிறார் என்று. அந்த நண்பர் ஜேக்கை பார்த்து, ‘நான் செய்வதை பார்க்க வேண்டும் என்று நினைத்தால் இங்கேயே இருக்கலாம். அப்படியில்லை என்றால் என் வீட்டில் போய் அமர்ந்துக்கொள்’ என்று கூறினார். ஜேக்கும் உடனே வீட்டிற்குள் சென்று அமர்ந்துக்கொண்டான். அப்படியே பாடம் நடத்த வந்த பிரபொஸரிடம், ‘உங்கள் நண்பர் வாசனை மெழுகுவர்த்தி செய்பவர்’ என்று சொல்லி குறுஞ்செய்தியையும் அனுப்பினான்.
சற்று நேரத்திற்கெல்லாம் அந்த வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் ஒரு பிளேட் நிறைய தின்பண்டங்களை எடுத்து செல்வதை பார்க்கிறான். அதன் வாசனை அவனை சுண்டியிழுத்தது. அப்போது அங்கே வந்த நண்பர் ஜேக்கிடம், ‘வா! டீ குடிக்கலாம்’ என்று அழைத்து செல்கிறார். டீ குடித்துக்கொண்டிருக்கும் போது அங்கிருந்த தின்பண்டங்கள் மீதே ஜேக்கின் கண்கள் இருந்தது.
அந்த நண்பரோ அதை எடுத்து உண்ணவில்லை. ஜேக்கிடமும் எடுத்து சாப்பிடு என்று ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. ஜேக்கால் ஒரு கட்டத்தில் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த தின்பண்டங்களை எடுத்து சாப்பிடலாம் என்று நினைத்து தொட்ட போதுதான் அவனுக்கு விளங்கியது அது மெழுகால் செய்யப்பட்டவை என்பது. இதை பார்த்ததும் அதிர்ந்து போனான் ஜேக். ‘இவரிடமிருந்து பாடம் கற்கும் வாய்ப்பையா நாம் இழந்தோம்?’ என்று எண்ணி வருந்தினான்.
இந்தக்கதையில் சொன்னதுபோல, என்னைக்குமே நமக்கு அதிகமாக தெரியும் என்ற எண்ணம் இருக்கக்கூடாது. நமக்கு தெரியாத விஷயங்கள் இந்த உலகில் இருந்துக்கொண்டேதான் இருக்கும் அதைக் கற்றுக்கொள்ள முயற்சிகள் எடுத்துக் கொண்டேயிருப்பது தான் சிறந்ததாகும். இதைப் புரிந்துக்கொண்டால் வாழ்க்கை நலமாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.