
ஒருவரிடம் நாம் நடந்துக் கொள்ளும் விதம் அவரது குணத்தைப் பொருத்து மாறுபடும். ஒருவருக்கு சொல்லப்படும் அறிவுரை அவரது குணத்திற்கு ஏற்றார்போல இருக்க வேண்டும். எல்லோருக்கும் ஒரே அறிவுரை பொருந்தாது. இதை தெளிவாக புரிந்துக் கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒரு ஊரில் வாழ்ந்து வந்த துறவி அவரிடம் பயிலும் மாணவர்களுக்கு தினமும் புதுப்புது விஷயத்தை கற்றுக்கொடுக்கும் வழக்கத்தை வைத்திருந்தார்.
ஒருநாள் அந்த துறவியின் வகுப்பிற்கு ஒரு மாணவன் தாமதமாக வருகிறான். அவனிடம், ‘ஏன் வகுப்பிற்கு தாமதமாக வந்தாய்?’ என்று துறவி கேட்டார். அதற்கு அந்த மாணவன், ‘நான் வந்துக்கொண்டிருந்த வழியில் ஒரு ஆள் வயதானவர்களிடம் மோசமாக நடந்துக்கொண்டான். அதை நான் கண்டும் காணாமல் வந்துவிட்டேன்’ என்று கூறினான்.
இதைக் கேட்ட துறவி, ‘ஒருவருக்கு பிரச்னை என்றால், அதை நாம் தட்டிக் கேட்க வேண்டும். பயந்து ஒதுங்கி வரக்கூடாது’ என்று அறிவுரைக் கூறி வகுப்பில் சேர்த்துக் கொள்கிறார்.
இப்போது இன்னொரு மாணவன் வகுப்பிற்கு தாமதமாக வர அவனிடம் துறவி, ‘தாமதத்திற்கு என்ன காரணம்?' என்று கேட்டார். அதற்கு அந்த மாணவன், ‘நான் வரும் வழியில் ஒரு நபர் வயதானாவரிடம் மோசமாக நடந்துக் கொண்டான். அதனால் அவனுடன் சண்டைப்போட்டு ஒரு கைப்பார்த்துவிட்டு வந்தேன்’ என்று கூறினான்.
இதைக்கேட்ட துறவி, ‘அடுத்தவர்களை காயப்படுத்தும் உரிமை நமக்கு கிடையாது. அடுத்தமுறை நீ சண்டையெல்லாம் போடக்கூடாது’ என்று அறிவுரைக் கூறி வகுப்பில் சேர்த்துக் கொண்டார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற மாணவர்களுக்கு ஒரே குழப்பம். குருவே, ‘நீங்கள் ஏன் மாற்றி மாற்றி அறிவுரை கூறுகிறீர்கள்?’ என்று கேட்டனர்.
அதற்கு அந்த துறவி கூறுகிறார், ‘முதல் மாணவன் மிகவும் அப்பாவி. அதனால் அவனுக்கு கோபம் வர வேண்டும் என்பதற்காக அவ்வாறு கூறினேன். ஆனால், இரண்டாவது மாணவனோ மிகவும் கோபக்காரன் என்பதால் அவன் கோபத்தை கட்டுக்குள் வைக்க அவனிடம் அவ்வாறு கூறினேன் என்று சொன்னார். ஒவ்வொருத்தரின் குணத்திற்கு ஏற்றார்ப்போல தான் நாம் அவர்களை கையாள வேண்டும்’ என்று கூறினார்.
இந்தக் கதையில் சொன்னதுபோல, நாம் எல்லோரிடமும் ஒரே மாதிரி நடந்துக் கொள்ள முடியாது. ஒருவருடைய குணத்தை வைத்தே அவர்களை எவ்வாறு கையாள்வது என்பதை முடிவு செய்ய முடியும். இதை நீங்களும் புரிந்துக் கொண்டால், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கலாம். முயற்சித்துப் பாருங்கள்.