
நம்முடைய வாழ்க்கையில் ஏதாவது அதிசயம் நடந்து வாழ்க்கையே மொத்தமாக மாறிவிடாதா? என்று பலரும் நினைப்பதுண்டு. அதிசயம் தானாக நிகழ்ந்து விடாது. அதற்கு முன் முயற்சி என்பது நிச்சயமாக இருக்க வேண்டும். அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
ஒரு அடர்ந்த காட்டில் நிறைய விலங்குகள் சந்தோஷமாக வாழ்ந்துக் கொண்டிருந்தன. ஒரு நாள் எதிர்ப்பாராத விதமாக அந்த காட்டில் பயங்கரமாக தீ பிடிக்கிறது. காட்டு தீ என்பதால் தீ மிகவும் வேகமாக பரவுகிறது. இதை பார்த்த விலங்குகள் அந்த காட்டை விட்டு தப்பித்து செல்கின்றன.
பக்கத்து ஊரில் உள்ள மக்களும் தீயை அணைக்க அவர்களால் முடிந்த உதவியை செய்கிறார்கள். இது அனைத்தையும் மரத்தின் மீது அமர்ந்து ஒரு சின்ன குருவி பார்த்துக் கொண்டிருந்தது. ஆரம்பத்தில் அந்த குருவியும் எல்லோரையும் போல அந்த காட்டை விட்டு போய்விடலாம் என்று நினைத்தது. ஆனால், நாமும் இந்த காட்டை விட்டு சென்றுவிட்டால் நாம் வாழ்ந்த இடம் மொத்தமாக அழிந்துவிடும்.
என்னால் இந்த மொத்த காட்டை காப்பாற்ற முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. என்னால் முடிந்த முயற்சியை எடுப்பேன் என்ற தன்னம்பிக்கையுடன் பக்கத்தில் இருந்த ஆற்றுக்கு சென்று தன் வாயில் தண்ணீரை எடுத்து வந்து அந்த காட்டு தீயில் ஊற்றியது. தீயில் எந்த மாற்றமும் இல்லை. இருந்தாலும் அந்த குருவி சோர்ந்து போகவில்லை. தன்னால் முடிந்த நீரை எடுத்து வந்து நெருப்பில் ஊற்றியது.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கழுகு அந்த குருவியை கிண்டல் செய்து சிரித்தது மட்டுமில்லாமல், 'முட்டாள் குருவியே! உன்னால் தனியாக இந்த காட்டுத்தீயை அணைக்க முடியுமா?' என்று கேட்டது.
அதற்கு பதிலுக்கு அந்த குருவி, "என்னால் தனியாக இந்த தீயை அணைக்க முடியுமா? என்று தெரியவில்லை. ஆனால், என் காட்டை காப்பாற்ற என்னால் ஆன முயற்சியை நான் கடைசி வரை செய்தேன் என்ற மனதிருப்தி எனக்கு கிடைக்கும். ஏதாவது பிரச்னை என்றால் அதை எப்படி கையாளுவது என்று யோசிப்பேனே தவிர, யாராவது வந்து காப்பாற்றுவார்கள் என்று காத்திருக்க மாட்டேன்," என்று கூறியது.
அந்த சின்ன குருவியின் தைரித்தை பார்த்து வியந்துப் போனக் கடவுள், பெரிய மழையை வர வைத்து அந்த காட்டு தீயை அணைத்தார்.
இந்த கதையில் வந்ததுப்போல நம் வாழ்க்கையில் எந்த முயற்சியும் எடுக்காமல் ஏதாவது அதிசயம் நடந்துவிடுமா? என்று எதிர்ப்பார்ப்பதில் எந்த பலனுமில்லை. உங்களால் முடிந்த முயற்சியை நீங்கள் செய்யவில்லை என்றால் கடவுள் மட்டுமில்லை மற்ற மனிதர்களே உதவி செய்ய யோசிப்பார்கள். ஜெயிக்க முடிகிறதோ இல்லையோ உங்களால் முடிந்த முயற்சியை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையில் அதிசயம் தன்னால் நடக்கும்.