ஆணுக்கும் உண்டு அக்னி பரீட்சை!
சமீப காலமாக சமூக ஊடகங்களில் ஆண்களின் தனிமனித ஒழுக்கம் என்பது கேள்விக்குறியாகி வருகிறது. பெண்களுக்கு கற்பின் முக்கியத்துவம் பற்றி பேசும் நாம் ஆண்களுக்கும் அது வேண்டுமென்பதை சிறுவயதிலிருந்தே வலியுறுத்தி வளர்க்க வேண்டும். இல்லையெனில் தடம் புரண்டு போக வாய்ப்புகள் அதிகம். வள்ளுவர் ஒழுக்கத்தை 'உயிரினும் ஓம்பப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார். தனிமனித ஒழுக்கம் என்பது ஆண் பெண் இருவருக்குமே பொருந்தும்.
1. அக்னி பரீட்சை
பப்ளிக் பர்சனாக இருக்கும் பொழுது ஆண்கள் ரொம்பவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனிமனித ஒழுக்கம் என்பது மிகவும் அவசியம். கலாச்சார பெருமைமிக்க நம் நாட்டில் சீதைக்கு மட்டுமல்ல ஆணுக்கும் அக்னி பரீட்சை உண்டு, இந்த சமூகத்தில் தன்னை நல்லவன் என்று நிரூபிப்பதற்கு.
காரணம் ஆண்களும் சில கடுமையான சோதனைகளையும், சவால்களையும் எதிர்கொள்கிறார்கள். சமூகத்தில் பெண்கள் தங்கள் தூய்மையை நிரூபிக்க வேண்டி அக்னி பரீட்சை செய்வது போல் ஆண்களுக்கும் இதுபோன்ற சோதனைகள் உண்டு.
2. வசதிகள் வரும்போது ஒழுக்க விதிமுறைகளை மீறாமல் இருப்பது
பணம், புகழ் வரும்பொழுது ஒழுக்க விதிகளை மறக்காமல் இருக்க வேண்டும். சபலம் தான் பெரும்பாலானவர்களை அதள பாதாளத்தில் தள்ளி விடுகிறது. பெரிய எழுந்திருக்க முடியாத பள்ளத்தில் விழுந்து விடுகிறார்கள். எனவே, ஒழுக்கத்திலிருந்து எந்த நேரத்திலும் ஆண்களும் இறங்கி விடக்கூடாது. பப்ளிக் பர்சனாக புகழ்பெற்று இருக்கும் பொழுது நிறைய பேர் அவர்கள் மேல் விழுந்து பழகுவதும், புகைப்படம் எடுத்துக் கொள்வதும் சிறந்த விசிறி என்று சொல்லிக்கொண்டு திரிவதும் ஏற்படும். அம்மாதிரி சமயங்களில் சபலப்படாமல் ஒழுக்கமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆண்கள் பெண்களைப் போலவே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
3. தனிமனித ஒழுக்கம்
தனிமனித ஒழுக்கம் என்பது பாலின பாகுபாடு இன்றி ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் பொருந்தும். ஒழுக்கம் என்பது ஒருவரின் தனிப்பட்ட நடத்தையை வழிநடத்தும் கொள்கைகளின் தொகுப்பு. இந்த கொள்கைகள் எந்த ஒரு நபரின் செயல்களையும் கட்டுப்படுத்தும். சுய கட்டுப்பாடு என்பது ஆண்கள், பெண்கள் இருவருக்குமே அவசியம். தனிமனித ஒழுக்கம் என்பது தனிப்பட்ட மற்றும் சமூக அமைப்பில் தீங்கு விளைவிக்கும் செயல்களை தடுக்க உதவுகிறது. இது நேர்மையாக வாழ்வதையும், நல்வழியில் சிந்தித்து செயல்படுவதையும் உள்ளடக்கும். தனிமனித ஒழுக்கம் சமூகத்தின் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் மிகவும் அவசியமானவை.
4. அறத்தின் அடிப்படை
தனிமனித ஒழுக்கத்திலிருந்தே பொதுமனித அறம் உருவாகிறது. நல்லொழுக்கத்துடன் வாழ்வது தனி மனிதனையும், சமூகத்தையும் மேன்மையுறச் செய்யும். சாட்சிகள் இல்லாத பொழுதும் தவறுகள் செய்யாமல் நேர்மையாக நடப்பதும், தன்னலத்தை விடுத்து பொது நலத்திற்காக செயல்படுவது போன்ற தனிமனித ஒழுக்கம் சமூகத்தின் மிகப்பெரிய பாதுகாப்பாகும்.
5. தன்னடக்கம்
உள்ளத்தில் ஆசை எழுந்தாலும் அவை அறத்திற்கும் செயலுக்கும் தவறின்றி இருக்கிறதா என ஆராய்ந்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். தன்னுடைய சொந்த உரிமைகளை பாதுகாப்பதுடன் பிறரின் உரிமைகளையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். சிந்தனையும் செயல்களும் சமூகத்திற்கு நல்லனவற்றையே விளைவிக்க வேண்டும். ஒழுக்கம் என்பது வற்புறுத்தலால் வருவது அல்ல, மாறாக தன்னைத்தானே செதுக்கிக் கொள்ளும் ஒரு உள்ளார்ந்த பண்பாகும்.
வள்ளுவரின் பார்வையில்...
திருவள்ளுவர் கற்பு என்பது இருபாலருக்கும் உரியது என்று குறிப்பிட்டுள்ளார். சமூகத்தில் பொறுப்புள்ள குடிமகனாக வாழ்வதும், தார்மீக மதிப்புகளை பின்பற்றுவதும் அவசியம். கற்பு என்பது அக வாழ்வின் ஒழுக்கமாகும். அதன் தாக்கம் புற வாழ்விலும் உண்டு.