
வாழ்வில் புகழடைய நினைப்பவனுக்கு அஸ்திவாரம் திடமாக இருக்கவேண்டும். எண்ணத்தைப் பற்றி ஆராய்ந்த அறிஞர் பலரும் எண்ணத்திற்கு உருவம் இல்லை. அருவமானது என்று கூறியுள்ளார்கள். உண்மையில் எண்ணத்திற்கு நிறம் உண்டு. உருவம் உண்டு. இப்போது எண்ணம் எப்படிப்பட்டது என்று பார்க்கலாமா? உடனே கண்ணை மூடிக்கொள்ளுங்கள். இப்போது உங்கள் அருகே என்ன இருக்கிறது என்று பாருங்கள். கண்ணை மூடிக்கொண்டால் எப்படி பார்க்க முடியும் என்பீர்கள்.
இங்குதான் நமது எண்ணம் செயல்படப் போகிறது. கண்ணை மூடி நீங்கள் சிவப்பு என்று எண்ணுங்கள். உடனே உங்கள் கண்முன் சிவப்பு தோன்றும். மஞ்சளை நினைத்தால் மஞ்சள் தோன்றும்.
இப்படி எதை வேண்டுமானாலும் நீங்கள் வேண்டுமானாலும் கண்ணை மூடியிருந்தாலும் பார்க்கலாம். வண்ணங்கள் மட்டுமல்ல. எதை வேண்டுமானாலும் நீங்கள் நினைத்தவுடன் உங்கள் கண் முன் கொண்டுவர முடியும்.
ஓரு மாளிகையில் நீங்கள் வசிப்பவராக நினைத்தால் அந்த மாளிகையின் ஒவ்வொரு அழகும் கண் முன்னே நிஜமாகத் தெரியும். பளிங்கு வீடு,தங்கத் தட்டில் உணவு, பழரசங்கள், வேலையாட்கள், தோட்டம், வண்ணப்பூக்கள் இவை அனைத்தையும் கண்ணை மூடிக்கொண்டே பார்க்க முடியும். இது உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? அதுதான் எண்ணத்தின் வலிமை. கண்ணை மூடிக்கொண்டே இத்தனை அத்புதங்களைப் படைக்கும் உங்கள் எண்ணம் விழித்திருக்கும்போது எவ்வளவு ஆற்றலுடன் இருக்க வேண்டும் என்பதை உணருங்கள்.
இது மட்டுமல்ல. நீங்கள் தமிழகத்தின் ஏதாவது ஒரு குக்கிராமத்தில் இருக்கலாம். அமெரிக்கா சென்று அந்நாட்டின் அதிபருடன் கை குலுக்க நினைத்தால் அடுத்த ஒரு நிமிடத்தில் அதைச் செய்ய முடியும். அமெரிக்க அதிபர் என்ன. நீங்களே அதிபராக முடியும். கண்ணை மூடி கற்பனை செய்து பாருங்கள். உங்களைச் சுற்றி இராணுவ அணி வகுப்பும், மக்கள் வெள்ளமென திரண்டிருப்பதும், அவர்கள் எழுப்பும் உற்சாகம் குரலும் உங்கள் காதுக்குக்குக் கேட்கும். அவைகள் வெறும் கனவுதானே என்று அலட்சியப்படுத்தாதீர்கள். மீண்டும் தலைவராக வேண்டும் என கனவு காணுங்கள். அது உங்கள் ஆழ்மனதில் பதிந்து வெற்றியை நோக்கி நடத்திச் செல்லும்.
கண்ணை மூடிக்கொண்டுதான் கற்பனை செய்யவேண்டும் என்ற அவசியமில்லை. கண்ணை திறந்து கொண்டும் கற்பனை செய்யலாம் எண்ணம்தான் முக்கியம். எண்ணம் பற்றி மேல்நாட்டு அறிஞர் எமர்சன்" எண்ணங்களே உலகை ஆள்கின்றன" என்கிறார்.
எண்ணம் உணர்வுகளோடு தொடர்பு உடையது. உணர்வுகளோடு உருவாகும் எண்ணம் சக்தி வாய்ந்தவை. அந்த சக்தி வளர்ச்சியை நோக்கி போகக் கூடியதாக இருக்க வேண்டும். மாறாக தவறான பாதையைத் தேர்ந்தெடுப்பதாக இருந்து விடக்கூடாது.
அதனால்தான் நம் முன்னோர்கள் உணர்ச்சி வசப்படும் போது ஏற்படக் கூடிய எண்ணங்களை ஆரப்போட்டு, இதன் பின்பு காரியத்தில் இறங்கவேண்டும் என்பார்கள். ஏனென்றால் உணர்ச்சியுடன் பிறக்கும் எண்ணங்கள் உங்கள் ஆழ்மனதில் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தி குழப்பத்தை உண்டு பண்ணிவிடும்.
அதனால்தான் கோப உணர்ச்சி அடையும்போது பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும் என்கிறோம்.