

எலிசபெத் பிளாக்வெல் என்ற பெண்மணி மருத்துவம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார். தன்னுடைய கல்வித் தகுதியால் மருத்துவக் கல்லூரிக்குச் சென்றபோது எந்தக் கல்லூரியும் அவரை மாணவியாக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. ஏனெனில் அந்தக் காலத்தில் பெண்கள் மருத்துவம் படிக்க கூடாது.
ஆனால் எலிசபெத் பிளாக்வெல் தன்னுடைய முயற்சியை சிறிதும் கைவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்து ஒரு வழியாக கல்லூரியில் படிக்கச் சேர்ந்தார். ஆனால் மாணவர்கள் யாரும் இவரிடம் பேசவில்லை. பல பேராசிரியர்களும் எலிசபெத் பிளாக்வெல்லை புறக்கணித்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் முழுமூச்சோடு படித்து முடித்தார்.
ஒரு பெண் மருத்துவராக இருப்பதா? என்ற பொறாமை கொண்ட பலரும் அவருக்கு பல வகைகளிலும் தொல்லை செய்ததால், தனியாக ஒரு மருத்துவமனை ஆரம்பித்து சிகிச்சை அளிக்க மிகவும் கஷ்டப்பட்டார். அந்தப் பெண்மணி தடைகளை எல்லாம் கடந்து உலகின் முதல் பெண் மருத்துவராக முத்திரை பதித்து சாதனை படைத்தார்.
பெண்கள் மருத்துவம் பயிலவேண்டும் என்பதற்காக 1867 ஆம் ஆண்டு தனி ஆளாக முயற்சித்து ஒரு மருத்துவ கல்லூரியை ஆரம்பித்தார். 'பெண் மருத்துவர்கள்' என்ற தனது கனவில் சிறிதும் பின்வாங்காமல் முன் சென்ற எலிசபெத் பிளாக் வெல்லின் சாதனையை யாரும் மறக்க முடியாது.
பெண்கள் புறக்கணிக்கப்பட்ட காலத்தில் அதையெல்லாம் உதறித் தள்ளி சாதனை படைத்தார் இந்த பெண்மணி. இன்று பெண் மருத்துவர்கள் இல்லாத உலகத்தை சிந்தித்து கூட பார்க்க முடியாது. அந்த அளவிற்கு உலகம் வளர்ச்சி கண்டிருக்கிறது.
வாழ்க்கையின் அடித்தளமாக ஒரு லட்சியம் அமைகின்றபோது தான் மனிதர்களின் வாழ்க்கை அர்த்தம் பெறுகிறது. 'தேர்ந்தெடுக்கும் உரிமை' என்ற மாபெரும் வரமே மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாடாக உள்ளது.
ஒரு நாய்குட்டியோ அல்லது சிங்கக்குட்டியோ அதன் குட்டிகளை தான் தர முடிகின்ற நிலையில், மனிதன் மனிதர்களை மட்டும் படைப்பவனாக அல்லாமல், உலகில் கலையாக, ஓவியமாக, நாட்டியமாக, இசையாக, கட்டிடங்களாக என பல்வேறு அம்சங்களை படைப்பவனாக இருக்கிறான்.
ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு இலக்கு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அதனால்தான் ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்களாகவும் வேறுபட்டவர் களாகவும் இருக்கின்றனர். இயங்கும் மனிதர்களாக இருப்பவர்களை இயக்குவதற்கு துணையாக இருப்பது அடிப்படையில் அவர்கள் எடுத்துக் கொள்ளும் இலக்குகள்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆகவே நமக்கென்று ஒரு இலக்கை வைத்துக்கொண்டால் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சி கிடைக்கும்.