இன்றைய வேகமான உலகில் எப்போதுமே அடுத்த இலக்குகள் அல்லது சாதனைகள் நோக்கிய பயணத்திலேயே நாம் அனைவரும் இருக்கிறோம். ஆனால் உண்மையான மகிழ்ச்சி எதிர்காலத்திலோ அல்லது கடந்த காலத்திலோ இல்லை. நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த தருணத்திலேயே உள்ளது. நிகழ்காலத்தை மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்வது மிகப்பெரிய திறமையாகும். இப்பதிவில் அதற்கான தந்திரங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
இந்த தருணத்தில் கவனம் செலுத்துங்கள்: அதாவது தற்போதைய தருணத்தில் நடக்கும் விஷயங்களில் விழிப்புணர்வுடன் கவனம் செலுத்துவது மூலமாக, உங்களது சுற்றுப்புறங்கள், உணர்வுகள் மற்றும் செயல்பாடுகளுடன் முழுமையாக ஈடுபட முடியும். இதை ஒவ்வொரு நாளும் நீங்கள் கடைப்பிடித்து வந்தால், வாழ்க்கையில் அனைத்துமே உங்களுக்கு அழகாகத் தெரியும். இப்போது உங்களைச் சுற்றியுள்ள எல்லா விஷயங்களையும் ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள். பிறருடன் பேசுவது, சிரிப்பது, இயற்கையை ரசிப்பது, பறவைகளின் ஒலியைக் கேட்பது, வீசும் காற்றின் ரம்யமான ஓசை அனைத்தையும் ரசிக்கத் தவறாதீர்கள்.
கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் சார்ந்த எண்ணங்கள் வேண்டாம்: தற்போதைய தருணத்தின் மகிழ்ச்சியை உணர்விடாமல் தடுப்பது, கடந்த கால நினைவுகளும், எதிர்காலக் கவலைகளுமே. கடந்த காலத்தைப் பற்றி சிந்திப்பது அல்லது எதிர்காலத்தை திட்டமிடுவது இயற்கையானது என்றாலும் இதையே அதிகமாக செய்து கொண்டிருந்தால் நிகழ்காலத்தில் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. கடந்த காலத்தை மாற்ற முடியாது எதிர்காலம் நிச்சயமற்றது என்பதை உணருங்கள். அவற்றிற்கு பதிலாக இந்த தருணத்தில் உங்களால் கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்களில் கவனம் செலுத்தி நிகழ்காலத்தை சிறப்பாக மாற்றிக்கொள்ள முயலுங்கள். இது உங்களது எதிர்காலத்தை சிறப்பாகக் கட்டமைக்க உதவும்.
மகிழ்ச்சி தரும் செயல்களில் ஈடுபடுங்கள்: தினசரி உங்களுக்கு எது மகிழ்ச்சியைத் தருகிறது என்பதை கண்டறிந்து அவற்றில் தவறாமல் ஈடுபடுங்கள். அத்தகைய செயல்கள் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டியது அவசியம். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வது, அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுவது அல்லது இயற்கையை ரசிப்பது போன்ற எதுவாக இருந்தாலும், உங்களுக்கு முழு மகிழ்ச்சியை உணரச்செய்யும் செயல்களில் ஈடுபடுங்கள். உங்களது மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் தருவது மூலம் உண்மையான ஆத்மார்த்தமான மகிழ்ச்சியை நீங்கள் உணர முடியும்.
நன்றியுணர்வு வேண்டும்: நன்றியுணர்வு என்பது மிகவும் முக்கியமானதாகும். நமது வாழ்க்கையில் இல்லாத விஷயங்களை நினைத்து வருத்தப்படுவதற்கு பதிலாக, இருக்கும் விஷயங்களுக்கு நன்றி தெரிவிப்பது மூலமாக ஒவ்வொரு நாளையும் உங்களால் மகிழ்ச்சியாக கடந்து செல்ல முடியும். உங்கள் அம்மா சமைத்த உணவைப் பாராட்டுங்கள். உங்களுக்காக உங்கள் நண்பர் செய்த ஏதோ ஒரு சிறிய செயலுக்காக நன்றி தெரிவிங்கள். யாரிடமாவது அன்பாக பேசுங்கள். இத்தகைய எளிய விஷயங்களை நீங்கள் செய்வது மூலமாக தற்போதைய தருணத்தின் அழகை உணர்ந்து மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
எதுவும் நிரந்தரமற்றது என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்: வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை உணர்ந்து அதை ஏற்றுக்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். இந்த உலகில் எதுவுமே எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில நபர்கள் வருவார்கள், சிலர் போவார்கள், சூழ்நிலைகள் மாறும், சில அழகான தருணங்கள் நினைவுகளாக மாறிவிடும், இப்படி நம் வாழ்வில் அனைத்துமே நிரந்தரமற்றது. எதையும் அதிகமாக எதிர்பார்த்து சோகக் கடலில் மூழ்காதீர்கள். அவற்றை ஏற்றுக் கொள்வதால் எதிர்காலம் பற்றிய பயத்திலிருந்து நீங்கள் எளிதாகக் கடந்து செல்ல முடியும்.