

வணிக உலகில் 'காலி அலமாரி' (Empty Shelf) என்பது ஒரு ஆபத்தான அறிகுறி. ஒரு கடையில் பொருட்கள் இல்லாமல் அலமாரிகள் காலியாக இருந்தால், வாடிக்கையாளர்கள் அந்த கடையின் நிர்வாகம் சரியில்லை என்று நினைப்பார்கள். தங்களுக்குத் தேவையான பொருள் கிடைக்காத அதிருப்தியில், அவர்கள் வேறு கடையை நாடிச் சென்றுவிடுவார்கள். ஆனால், வணிகத்திற்குத் தோல்வியைத் தரும் இதே 'காலி அலமாரி' கொள்கை, தனிமனித வாழ்க்கைக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தரும். அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
மனதின் அலமாரிகளைச் சீரமைத்தல்
சுய முன்னேற்றத்தில் இந்தக் கொள்கை மிகவும் சக்தி வாய்ந்தது. மனித மனம் ஈடு இணையற்ற ஆற்றல் கொண்டது. ஆனால், நமது மனதின் 'உள் அலமாரிகள்' கவலைகள், தேவையற்ற குழப்பங்கள் மற்றும் எதிர்மறை உணர்ச்சிகளால் நிரம்பி இருக்கும்போது, நம்மால் தெளிவாகச் சிந்திக்க முடியாது.
புதிய சிந்தனைகள்
ஒரு கடைக்கு எப்படி பொருட்கள் முக்கியமோ, அதுபோல மனதிற்குப் புதிய சிந்தனைகள் முக்கியம். பழைய குப்பைகளை வெளியேற்றி, மனதின் அலமாரியைக் காலியாக வைக்கும்போதுதான், அங்கே புதிய மற்றும் பயனுள்ள கருத்துக்களை நிரப்ப முடியும். தேவையற்ற எண்ணங்களை வெளியேற்றி மனதை வெற்றிடமாக்கும் போதுதான், புதுமையான யோசனைகள் பிறக்கும்.
கவனச் சிதறல்களை நீக்குதல்
அன்றாட வாழ்க்கையில் தேவையற்ற கவனச் சிதறல்களை (Distractions) நீக்கும் போதுதான், நாம் செய்யும் செயலில் முழுக் கவனத்தைச் செலுத்த முடியும். வாழ்க்கையில் நமக்குத் தேவைகளும் ஆசைகளும் அதிகம். பல நேரங்களில் நாம் எடுக்கும் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்காமலோ அல்லது முன்னேற்றம் இல்லாமலோ போகலாம். அப்போது மனதில் "நாம் சரியான பாதையில்தான் செல்கிறோமா? இலக்கை அடைய முடியுமா? அல்லது பாதியிலேயே விட்டுவிடலாமா?" என்ற நடுக்கமும் குழப்பமும் ஏற்படும்.
வெற்றிடத்தை எப்படிப் பயன்படுத்துவது?
குழப்பம் வரும்போது மனதைச் சுத்தம் செய்து 'காலி அலமாரியாக' மாற்ற வேண்டும். அமைதியாக அமர்ந்து பின்வருவனவற்றை ஒரு தாளில் பட்டியலிட்டுச் சிந்தியுங்கள்:
1. இலக்குத் தெளிவு: நமது இலக்கு தெளிவாக உள்ளதா? அதை மேம்படுத்த என்ன செய்யவேண்டும்?
2. குறைபாடுகளை ஆராய்தல்: திட்டங்களில் என்ன குறைகள் உள்ளன? அவ்வாறு இருந்தால் அவற்றை எவ்வாறு மாற்றிக்கொள்வது?
3. உத்வேகம் (Motivation): அதற்கான உத்வேகம் சரியான அளவில் இருக்கிறதா? போதுமான உந்துதல் கொடுக்கப்பட்டால் தான் இலக்கை நோக்கிய பயணம் வெற்றியில் முடியும்.
4. திறன் மேம்பாடு: நம்மிடம் உள்ள திறன்கள் போதுமானதா? அல்லது இன்னும் கற்றுக்கொள்ள வேண்டுமா? அதற்கு தேவையான முயற்சிகள் என்னென்ன என்று திட்டமிடுதல்.
5. ஓய்வு: மனதிற்குச் சற்று ஓய்வு தேவையா? தேவையான ஒய்வு தரப்படும் போது மனம் தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டு மீண்டும் உற்சாகத்துடன் செயல்படும்.
6. சக்திவாய்ந்த முன்னேற்றங்கள்: கடைகளிலும் வணிக வளாகங்களிலும் காலியாக உள்ள அலமாரிகள் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். ஆனால், மனித மனதில் உருவாக்கப்படும் வெற்றிடம் வீணானது அல்ல. அந்தக் காலி இடம்தான் புதிய கண்ணோட்டங்களுக்கும், சக்திவாய்ந்த முன்னேற்றங்களுக்கும் வழிவகுக்கும். எனவே, உங்கள் மனதின் அலமாரியில் உள்ள தேவையற்றவற்றை நீக்கி, அர்த்தமுள்ள மற்றும் முன்னேற்றம் தரும் புதிய இலக்குகளால் அதை நிரப்புங்கள்.