

ஒருவரை குறை கூறுவதற்கு முன்பு அவர்களின் இடத்தில் நின்று பார்த்தால் போதும். அவர்களின் பார்வையை புரிந்துகொள்ள இது சிறந்த முயற்சியாகும். பெரும்பாலும் நாம் மற்றவர்களை குறை கூறும் பொழுது அதில் அவர்களின் பங்கு என்ன என்பதைப் பார்க்கத் தவறி விடுகிறோம். எனவே பிறரை நோக்கி விரலை நீட்டுவதற்கு முன் சரியான புரிதலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
மற்றவர்களை குறை சொல்வது நம் தனிப்பட்ட வளர்ச்சியை பாதிக்கும். குறை கூறிக்கொண்டே இருந்தால் பிறர் நம்மைக் கண்டாலே ஒதுங்கிவிடுவார்கள். நம்மிடம் எதைப் பற்றியும் பேச தயக்கம் காட்டுவார்கள். இதனால் மற்றவர்களுடனான உறவு பாதிக்கும். மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். மோதல்கள் உண்டாகும். பதற்றமான சூழ்நிலையும் மகிழ்ச்சியின்மையும் உருவாகும். இது நம்பிக்கையையும், உணர்ச்சி ரீதியான தொடர்புகளையும் பெரும் அளவில் பாதிக்கும். இவை பிறருடனான ஆரோக்கியமான தகவல் தொடர்பில் முறிவை ஏற்படுத்தும்.
மற்றவர்களை குறை கூறுவதற்கு முன்பு நம்மிடம் உள்ள குறைகள் என்ன என்பதை அறிய முயற்சிக்க வேண்டும். நம்மிடம் இருக்கும் குறைகள் பிறருடைய குறைகளைக் காட்டிலும் மிகுதியாக இருக்கலாம். இப்படி செய்வதால் பிறரை குறை கூறுவதை நிறுத்தி விடுவோம். சிலர் குறை சொல்வதன் மூலம் அனுதாபத்தை பெற முயற்சிக்கிறார்கள். வேறு சிலரோ தாங்கள் எவ்வளவு நல்லவராக இருக்கிறோம், சரியானவராக இருக்கிறோம் என்பதை காட்டிக் கொள்வதற்காக குறை சொல்பவர்களாக இருப்பார்கள்.
பொதுவாக குறை சொல்வது என்பது, இயற்கையான ஒரு சமாளிக்கும் வழிமுறையாக கருதப்படுகிறது. இன்னும் சிலரோ தனது சூழல் தனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாக இருக்கும்போது மற்றவர்களை குறைசொல்ல தொடங்குகிறார்கள். எப்படி பார்த்தாலும் இது ஒரு பலவீனமான செயலாகும். இதை கண்டிப்பாக நிறுத்துவதற்கு முயற்சி செய்யவேண்டும்.
மற்றவர்களை குறைசொல்லும் பழக்கத்தை நிறுத்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. எனவே சிறிது சிறிதாக முயற்சி எடுத்து மற்றவர்களை குறை சொல்வதை நிறுத்தப் பழகவேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான உறவுகள் ஏற்படும். அடுத்த முறை பிறரை நோக்கி விரல்களை நீட்டத் தயாராவதற்கு முன்பு அந்த சூழ்நிலையில் நம் பங்கைப் பற்றி சிறிது யோசிக்கவேண்டும். பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதைவிட தீர்வுகளைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்துவது அவசியம்.
குறை கூறும் மனநிலையை மாற்றுவதற்கு நேரமும், முயற்சியும் தேவை. அத்துடன் சுயவிழிப்புணர்வையும், பொறுப்பையும் வளர்த்துக்கொள்வதன் மூலம் நம் மனநிலையை மாற்றி நேர்மறையான மற்றும் நிறைவான வாழ்க்கையை நம்மால் வாழ முடியும். முயன்றுதான் பாருங்களேன்!