நகைச்சுவை என்பது மனித வாழ்வை மகிழ்ச்சி அடைய செய்கிற மந்திரம். சிரிக்கிறபோது நாம் குழந்தைகளாகி விடுகிறோம்.நம்மை அந்த நிமிடங்களில் மறந்துவிடுகிறோம்.
சிரிப்பு எட்டுவகை மெய்ப்பாடுகளில் ஒன்று என்று தொல்காப்பியர் கூறினாலும்-
"நகையே அழுகை, இளிவரல் மருட்கை அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்று அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப" என்று குறிப்பிடும்போது நகைச்சுவைதான் முதலிடம் வகிக்கின்றது.
சிரிக்கின்றபோது மட்டும்தான் நாம் அந்தக் கணத்தில் இருக்கிறோம். சிரிப்பு நம்மை நிகழ்காலத்திலேயே நிறுத்திவிடுவதால் சிரிப்பு தியானத்திற்கு நிகராக இருக்கிறது-
மனிதன் சிரிக்கின்றபோது அவன் சக்தி கூடுகின்றது. கோபப்படும்போது அவன் சக்தி விரயமாகிறது. சிரிக்கின்றபோது மனிதன் குழந்தையைப்போல் மாறிவிடுவதால் அழகு மிளிர்கிறது-
அவன் கோபப்படும்போது உக்கிரமடைந்து அவன் பயங்கரமாகத் தோன்றுகிறான்-
சிரிப்பு தானாக வருவது. புன்னகை நாமாகப் புரிவது எல்லா உயிர்களுக்கும் புன்னகை புரியமுடியும்.
பூ செடியின் புன்னகை
கூவுதல் குயிலின் புன்னகை
அலை கடலின் புன்னகை
தென்றல் காற்றின் புன்னகை
நிழல் மரத்தின் புன்னகை, வாலாட்டுதல் நாயின் புன்னகை, தோகை விரித்தல் மயிலின் புன்னகை.
மனிதனால் மட்டும்தான் சிரிக்க முடியும் வாய்விட்டு மெய் மறந்து எந்த நகைச்சுவை மனிதனுடைய மனதையும், வண்ணங்களையும் மேன்மைப்படுத்தமுடியுமோ, அதுவே உண்மையான நகைச்சுவை, ஆரோக்கியமான நகைச்சுவை.
முல்லா என்கிற சுபி ஞானியுடைய நகைச்சுவைத் துணுக்குகள் எல்லாம் அப்படித்தான் சிந்தனைகளைக் கிளறி விடுகின்ற ஆற்றல் பெற்றவை.
ஈசாப் கதைகளும் அப்படித்தான். அந்த ஒவ்வொரு சம்பவமும் நம் மனதில் பல எண்ணங்களைச் சலித்து சலித்து மேம்பாடு அடையச் செய்யும் தன்மையுடையவை.
அக்பர் - பீர்பால் கதைகளானாலும், தெனாலிராமன் கதைகளானாலும் அவை வரலாறு கடந்து வாழ்வதற்குக் காரணம். அவற்றின் வீச்சும் ஆற்றலும்தான்,
சிரிப்பு மனிதனுடைய உயிர்த்துடிப்பைக் காட்டுகிறது நகைச்சுவை உணர்வு மேலோங்கியிருக்கிற சமுதாயம் வாழ்க்கையைப் பார்க்கிற கண்ணோட்டம் வித்தியாசமானது. ஜே கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டார்கள், நகைச்சுவை எது என்று "தன்னைப்பற்றி யாரால் சிரிக்கமுடியுமோ. அவரே நல்ல நகைச்சுவை உணர்வு படைத்தவர்" என்றார் ஜே.கே.
தன்னைப் பற்றியும் சிரித்துக்கொள்ளும் பாங்கு சிலருக்கே வருகிறது - அவர்களே நல்ல மனிதர்களாகிறார்கள் ஞானிகளாகிறார்கள்.