
நம் செயல்பாடு வெற்றிகரமாக அமைவதற்கு நம் மனநிலைதான் காரணம். உற்சாகமான மனநிலையில் இருக்கும்போது, மிகவும் கடினமான வேலை கூட எளிதாகத் தெரிகிறது. சற்று உற்சாகம் குறைந்த நிலையில் சாதாரணமான வேலையில் கூடக் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறோம்.
மாணவர்கள் நன்றாக முயற்சியெடுத்துப் படித்த சில விஷயங்களைத் தேர்வின்போது மறந்து விடுகிறார்கள். சிலருக்கு வினாத்தாளைப் பார்த்த உடன் மூளை ஏதோ சூன்யமாகிவிட்டது போலவும், இருண்டு போவது போலவும் ஆகிவிடுகிறது. அங்கு அந்த நிலையைச் சரிசெய்ய அதிக நேரமும் கிடைக்காது. உடனடியாக சகஜ நிலைக்குத் திரும்பியாக வேண்டும்.
அதற்கு நீங்கள் எந்த மனநிலையை அடைய விரும்புகிறீர்களோ அதைப் பற்றி சிறிது யோசிக்க வேண்டும் அந்த நினைப்பில் சற்றுநேரம் அப்படியே ஊறிவிடுங்கள். முன்பு உங்கள் வாழ்க்கையில் அதுபோன்ற உணர்வு உங்களுக்கு எப்போது ஏற்பட்டது என்று நினைவுபடுத்திப் பாருங்கள். அப்போது நடந்த அந்த நிகழ்வுகளை மீண்டும் மனதில் கொண்டு வாருங்கள்.
எல்லா புலன்களையும் பயன்படுத்தி அதே உணர்வைக்கொண்டு வாருங்கள். உதாரணத்திற்கு உங்களுக்கு ஒரு உற்சாகமான மனநிலையை ஏற்படுத்த விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதுபோன்ற ஒருநிலை உங்களுக்கு சில நாள்களுக்கு முன்பாக ஏற்பட்டிருக்கலாம். ஒரு விருது வழங்கப்பட்டிருக்கலாம். அதை அப்படியே மனதில் கொண்டு வந்து நினைத்துப் பாருங்கள்.
அந்த விருது கோப்பை அப்படியே கண்முன் நிற்கவேண்டும். உங்களுக்கு அணிவித்த மாலையின் மணமும், தலைவர் உங்களுடன் கைகுலுக்கியதும், அனைத்தையும் அப்படியே கொண்டுவாருங்கள். உங்களுக்குள் நீங்கள் அப்போது அடைத்த உற்சாக மனநிலை இப்போதும் வரத்துவங்கும்.
மெல்ல மெல்ல அந்த உயர்வின் உச்சகட்டத்தை அடையவேண்டும். முழுக்க உற்சாகமானதும் உங்கள் உடல் நிலையில் சில மாற்றங்கள் ஏற்படும். மூச்சு வாங்கும் கதியில் மாற்றம், மயிர் சிலிர்ந்தெழுவது என்று சிறிது நேரம் இந்த நிலையை உணர்ந்த பிறகு, அந்த நிலையிலிருந்து விடுபட்டு வந்துவிடுங்கள்.
இது ஒரு தற்காலிக மனநிலைதான் என்றாலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நம் உடலுக்கும் மனதிற்கும் உள்ள இந்த தொடர்பை நாம் பயன்படுத்திக் கொண்டு மனம் சந்தோசமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
'இடுக்கண் வருங்கால் நகுக' என்ற திருவள்ளுவரின் வாக்குக்கு இணங்க கவலையாக இருக்கும்போது சற்றே நிமிர்ந்து நின்று, தோள்களை விரித்து, தாடையை உயர்த்தி, கால்களை ஊன்றி உறுதியாக நின்று பாருங்கள். கண்டிப்பாக மனநிலை மாறி மெல்ல சகஜ நிலைக்குத் திரும்பி செயல்படும் திறனை பெற்றுவிடுவீர்கள்.