
நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் எடுக்கும் முடிவுகள் மற்றும் செய்யும் செயல்களே நம் எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன. வாழ்வில் நாம் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு நமக்கு விருப்பமான ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ முடியும். நம்முடைய வாழ்வின் பெரும் பகுதியை பிறருக்காகவே வாழ்கிறோம்.
நாம் விரும்பியதை செய்யாமல் நம் சொந்தங்களுக்காகவும், நம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்திற்காகவும் மட்டுமே வாழப்பழகிவிட்டோம். அதனால்தான் வாழ்க்கை என்பது சலிப்பு தட்டுவதாக, சுவாரஸ்யம் இன்றி இருக்கிறது.
நம் வாழ்க்கை நம் கையில்தான் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஒவ்வொரு நாளும் 86,400 விலை மதிப்பற்ற நொடிகள் (24 மணி நேரம்) நம் கையில் இருக்கிறது. ஆனால் நாம் அவற்றை சரியாக பயன்படுத்தாமல் பொழுதை வீணாய் கழித்து வருகிறோம்.
தேவையற்ற வழிகளில் ஒவ்வொரு நிமிடத்தையும், அற்புதமான வாய்ப்புகளையும் தவற விட்டுக் கொண்டிருக்கிறோம். பயனற்ற வழிகளில் நம் பொன்னான நேரத்தையும், உழைப்பையும் செலவழித்துக் கொண்டிருக்கிறோம். சரியான பாதையை தேர்ந்தெடுத்து பயணிக்க மறந்து விடுகிறோம்.
நமக்கு என்ன தேவை, நம் விருப்பம் என்ன, நாம் என்னவாக விரும்புகிறோம் என்பதை திட்டமிட்டு தீர்மானிக்க வேண்டும். மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவேண்டுமென்றால் அதை அடைவதற்கான வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் எண்ணியது ஈடேற பொறுமையுடன் கூடிய முயற்சியும், அதனை செயலாக்கக்கூடிய மனதிடமும் வேண்டும்.
ஆனால் பெரும்பாலானவர்கள் அவர்களது எண்ணங்கள் செயலாக்கம் பெறும் முன்னரே முயற்சியை கைவிட்டு விடுகின்றனர். என்றுமே குறுகிய கால முயற்சி பலனளிக்காது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தொடர்ந்து நிலையான முயற்சிகளை மேற்கொண்டால் 'நம் வாழ்க்கை நம் கையில்' என்பதை அனுபவபூர்வமாக உணரலாம்.
உற்சாகம், நம்பிக்கை, விடாமுயற்சி, வலிமை ஆகியவற்றை வாழ்க்கையின் லட்சியங்களாகக் கொண்டால் நம் வாழ்க்கை நம் கைகளில்தான். செக்கு மாட்டு வாழ்வை உதறித்தள்ளி, சவால்களை எதிர்கொண்டு, நம் முழுத்திறமையையும் காட்டி சாதனை படைக்க எண்ணினால் நம் வாழ்க்கை நம் கைகளில்தான்!
உயிரோடு இருப்பது வேறு; உயிர்ப்போடு இருப்பது வேறு. எனவே ஆனந்தமாக நாம் விரும்பிய வண்ணம் வாழப்பழகுவோம். வாழ்வது என்பது உண்மையில் ஒரு கலைதான். வாழும் கலையைப் புரிந்து கொண்டால் திறம்பட வாழலாம்.
என்ன நான் சொல்வது உண்மைதானே நண்பர்களே!