அறியாமையும் கை கொடுக்கும்..!

Ignorance
IgnoranceImg Credit: Freepik

ந்த வங்கி கிளையின் மேலாளர் முன்பு அமர்ந்து இருந்த
வாடிக்கையாளர், "என்னவாயிற்று, என்னுடைய அப்ளிகேஷன்.  அதிகப்படியான கடன் உதவிக்காக கொடுத்தது...!" என்று வினவினார்.

இந்த மேலாளருக்கு அந்த அதிகப்படி கடன் உதவி கொடுக்க இஷ்டமில்லாமல், சில நாட்களாகத் தட்டிக்கழித்து வந்தார் வங்கி மேலாளர். வந்தவரும் பொறுமையாக வந்து போய்கொண்டு இருந்தார்.

அந்த மேலாளருக்கு, கை கொடுப்பதுபோல் அவருக்கு வேறு ஒரு ஊருக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டர் வந்துவிட்டது. புது மேலாளர் இன்னும் இரண்டு தினத்தில் வந்து விடுவார். இந்த வாடிக்கையாளரிடம் இருந்து விடுதலை பெறலாம்.

புது மேலாளர் வந்தார். பொறுப்பெடுத்துக்கொண்டார். அவரிடம் இருக்கும் பெண்டிங் காகிதங்கள் கொடுக்கும்பொழுது, அந்த வாடிக்கையாளரின் அப்ளிகேஷனையும் கொடுத்துவிட்டு மேலோட்டமாக அவரைப் பற்றி கூறி விட்டு, அவருடைய புது கிளையைப் பார்க்க சென்றுவிட்டார் அந்த முந்தைய மேலாளர்.

வெளியூர் சென்று இருந்த அந்த வாடிக்கையாளர் வந்தார். புதிய மேலாளரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு தன் பெருமையெல்லாம் கூறி விட்டு, அவர் முந்திய மேலாளரிடம் கொடுத்த அப்ளிகேஷன் குறித்து கூறினார். அவர் வந்ததிலிருந்து அவர் பேசிய தோரணை, நடவடிக்கை எல்லாவற்றையும் தனது அனுபவத்தின் அடிப்படையில் கூர்ந்து கவனித்த (keen observation) புது மேலாளர் இவரை பற்றியும், இவர் திறமை பற்றியும் ஒருவாறு கணித்துவிட்டார் (Formed his opinion). அவருடைய அதிகப்படியான தேவைக்கு, சில அடிப்படைக் கேள்விகளை மட்டும் கேட்டார்.

வந்தவர், "எப்பொழுது, அதிகப்படியான கடன் உதவி கிடைக்கும்," என்று கேட்க, அதற்கு மேலாளர், "நான் உங்கள் ஃபேக்டரிக்கு விசிட் செய்து, எப்படி நடைபெறுகின்றது என்று பார்க்கவேண்டும். பிறகு கூறுகிறேன்," என்றார். இதை வந்தவர் எதிர்பார்க்காததால் திடுக்கிட்டார். அதையும் மேலாளர் நோட் செய்துகொண்டார். ஒன்றும் கூறவில்லை. வந்தவர், “இரண்டு நாட்கள் பிறகு வந்து அழைத்து செல்கின்றேன். நன்றி” என்று கூறிவிட்டு, உத்தரவு பெற்றுக்கொண்டு சென்றார்.

மேலாளர் வந்தவர் உண்மை கூறவில்லை என்பதை உணர்ந்தார். மேலும், ஒரே அடியாக நான்கு மடங்கு அதிகப்படியான கடன் உதவி வேண்டும் என்கிறார். அவர் செய்வது அத்தனை பெரிய பிசினசாக தெரியவில்லை. அதிகப்படியான கடனுக்குத் தேவையான காகிதங்கள், கால்குலேஷன்ஸ் விவரங்கள், உற்பத்திக்கு தேவையான அடிப்படை மூலப்பொருட்கள்(Raw materials quantity) போன்றவற்றை அப்ளிகேஷனுடன் இணைத்து இருந்தார். இருந்தும் புது மேலாளரின் உள் மனது எச்சரிக்கை செய்தது, எங்கேயோ தவறு உள்ளது என்று.

மூன்று நாட்கள் கழித்து அவர் வந்தார். மேலாளரை அவரது ஃபேக்டரிக்கு அழைத்து சென்றார். அங்கு சென்றதும் மேலாளர் லேசாக அதிர்ந்தார். அவர் அதிகப்படி உற்பத்தி செய்வதாக கூறி கடன் உதவி கேட்டதற்கு ஈடாக அவற்றைத் தயார் செய்யும் அடிப்படை வசதிகள் இல்லை. முதலில் அவருடைய ஆபீஸ் அறையில் உட்கார்ந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். பிறகு, மேலாளரை அந்த ஃபேக்டரியின் உற்பத்தி செய்யும் மெஷின் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். அப்பொழுது
ஆபீசிலிருந்து ஒருவர் ஓடி வந்து, ஒரு முக்கியமான, அவசரமான போன்கால் வந்து இருப்பதாக இவரிடம் கூறினார். உதவி எப்படி வரும் என்று யாராலும் கூறமுடியாது. இந்த மேலாளருக்கு போன் ரூபத்தில் வந்தது. மேலாளர் அந்த மெஷினை ஆபரேட் செய்யும் தொழிலாளிடம், "இப்ப, நான் இந்த மெஷினில் இந்தப் பக்கம், ஒரு கிலோ கிராம் இரும்பு மூலப்பொருளைச் செலுத்தினால், உற்பத்தி தயார் ஆகி, அந்தப் பக்கம் சுமார் 100 இறுதி பொருட்கள் (Finished products) வந்து விழுமா?” என்று கேட்டார். அந்த மெஷின் ஆப்பரேட்டர் உடனே சிரித்து விட்டார். (அவர் நினைத்துக்கொண்டார் இவ்வளவு பெரிய மேலாளருக்கு இந்த அடிப்படை விஷயம்கூட தெரியவில்லையே என்று.)

"சார்.. ! ஒரு கிலோ மூலப்பொருள் போட்டால் ஒன்றும் வராது, ஒரு டன் இரும்பு மூலப்பொருள் போட்டால், 200 இறுதி பொருட்கள் கிடைக்கும்” என்றார் பெருமையுடன். மேலாளரும் “ஓ...! அப்படியா? மிக்க நன்றி” என்று அவரைப் பாராட்டினார். அந்த மெஷின் ஆபரேட்டருக்கு மகிழ்ச்சி.

மேலாளருக்கு டபுள் மகிழ்ச்சி. அவருக்குத் தேவையான விவரம் கிடைத்துவிட்டது. சிறிது நேரத்தில் அந்த போன்காலை அட்டென்ட் செய்துவிட்டு, அந்த (நிறுவனர்) வாடிக்கையாளர் வந்தார். மேலாளர் சகஜ நிலைக்கு மாறி அந்த ஃபேக்டரியைச் சுற்றிப் பார்த்துவிட்டு அங்கு இருந்தவர்களைப் (குறைவான நபர்களே இருந்தனர்) பாராட்டிவிட்டு திரும்பினார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த அப்ளிகேஷனை நிராகரித்துவிட்டார்.

இதையும் படியுங்கள்:
மன நிம்மதியைத் தரும் மறத்தலும் மன்னித்தலும்!
Ignorance

வங்கி மேலாளர், அந்த மெஷின் ஆப்பரேட்டரிடம் பேசும்பொழுது, அறியாது, தெரியாது நிலைமையில் தான் இருப்பதாக காட்டிக்கொண்டார். அதற்காகத்தான், ஒரு கிலோ இரும்பு மூலப்பொருள் என்று கூறி கேட்டார். அந்த மெஷின் ஆப்பரேட்டரோ. ‘பெரிய படிப்பு எல்லாம் படித்துள்ள இந்த மேலாளருக்கு, எனக்குத் தெரிந்த இந்தச் சாதாரண அடிப்படை விவரம்கூடத் தெரியவில்லியே’ என்று அவரை அறியாமல் சிரித்தது மட்டும் அல்லாமல் மேலாளரின் தவற்றை சுட்டிக்காட்டியதும் அல்லாமல் ஒரு டன் இரும்பு மூலப் பொருளுக்கு 200 இறுதி உற்பத்தி பொருள் வரும் என்றும் கூறிவிட்டார். அதுதான் வேண்டி இருந்தது, அந்த மேலாளருக்கு. அந்த அதிகப்படி கடன் வேண்டும் என்று அப்ளிகேஷன் கொடுத்தவர், அவரது அப்ளிகேஷனில் குறிப்பிட்டு இருந்த விவரம் ஒரு டன் இரும்பு மூலப்பொருளுக்கு அவர் செய்யப் போகும் உற்பத்தி இறுதி பொருட்கள் (Finished Products) 800 என்பது!
அதற்கு ஏற்றார்போல அப்ளிகேஷனில் விவரங்கள் நிரப்பி வங்கியை ஏமாற்ற நினைத்திருந்தார் என்பது வெட்ட வெளிச்சமானது!

உண்மையை அறிய இங்கு அந்த மேலாளர் வேண்டும் என்றே தனக்கு தெரியாத மாதிரி நடந்துக்கொண்டார். The Bank Manager keeping away the ego, displayed I GNORANCE to get the true picture. His purpose was well served.

இந்த உண்மை நிகழ்வு, சில பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது.

  • எல்லா வேலைகளையும் எப்பொழுதும் ஒரே அளவுக்கோலுடன் அளந்து செய்ய முடியாது. செய்ய கூடாது.

  • பொறுமை, சிந்திக்கும் திறமை, சாமர்த்தியமான செயல்பாடு இவற்றை தேவைக்கு ஏற்ப உபயோகிக்க வேண்டும்.

  • எல்லோரையும் சமமாகப் பாவிக்க வேண்டும்.

  • எவ்வித ‘ஈகோ’வும் இன்றி செயல்பட வேண்டும்.

  • சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப நம் அணுகுமுறையை (நல்ல முறையில்) மாற்றிக்கொண்டு செயலாற்ற வேண்டும்.

  • பாராட்டுதலை தாராளமாக மனம் உவந்து நேரம் கடத்தாமல் வழங்க வேண்டும். பாரபட்சம் பார்க்க, காண்பிக்கக் கூடாது.

  • கூர்ந்து கேட்கும், பார்க்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டு மறக்காமல் உபயோகிக்க வேண்டும்.

  • சந்தர்ப்பங்களை நழுவ விட்டுவிட்டு சங்கடப்படக் கூடாது, வருந்தக் கூடாது.

  • உண்மையான முயற்சி நல்ல முடிவை அளிக்கும், என்ற முழு நம்பிக்கையோடு செயல்பட வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com